இலங்கை அரசாங்கம் கொவிட் பாதிப்புடன் மரணிப்பவர்களது உடல்களை பலவந்தமாக தகனம் செய்வதற்கு எதிராக இன்று (16) காலை கத்தோலிக்க, ஆங்கிலிகன் மற்றும் மெதடிஸ்ட் திருச்சபைகளின் பாதிரியார்கள் உள்ளிட்ட குழுவொன்று பொரளை, கனத்தை மயான வளாகத்திலுள்ள சடலங்கள் தகனம் செய்யும் இடத்திற்கு அருகில் வெள்ளைத் துணிகளை கட்டி அமைதிப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஸெய்யித் அலி ஸாஹிர் மௌலானா தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

சிறுபான்மை சமூகங்களின் மரபு மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிராக அரசாங்கம் கொவிட் பாதிப்புடன் மரணித்தவர்களது உடல்களை பலவந்தமாக எரிப்பதற்கு கட்டாயப்படுத்துகிறது. 

இது நமக்குத் தேவையான ஒற்றுமை. மதிப்பு மிக்க ஆதரவுக்கு சங்கைக்குரிய பாதிரியார்களுக்கு என்னுடைய நன்றிகள் என்று அதில் தெரிவித்திருந்தார்.


மேலும் எமது சியன நியூஸ் இது தொடர்பில் அலி ஸாஹிர் மௌலானா அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது,

இளம் தம்பதியர்களது 20 நாட்களேயான பச்சிளம் பாலகனைக் கூட பலவந்தமாக எரித்துள்ளார்கள். முஸ்லிம் சமுதாயம் இந்த விடயத்தில் தனித்து விடப்பட்டுள்ளது என்று நாம் நினைத்திருந்தோம். ஆனால் அக்குழந்தை தகனம் செய்யப்பட்ட பொரளை மயானத்தில் வெள்ளைத் துணிகளை கட்டி ஆரம்பிக்கப்பட்ட அமைதிப்போராட்டம் இன்று நாடு தழுவிய ரீதியில் நடைபெற்று வருகிறது. இன, மத பேதமின்றி பலரும் இணைந்து வருகின்றமை எமக்கு ஆறுதல் அளிக்கிறது. ஆட்சியாளர்களின் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்த இறைவனைப் பிரார்த்திப்போம்.

அமைதிப் போராட்டம் பொரளை மயான வளாகத்தில் வெள்ளைத் துணிகளை கட்டி ஆரம்பிக்கப்பட்டது. மறுநாள் நள்ளிரவு 2.00 மணியளவில் அதனை அகற்றியிருந்தார்கள். எனினும் தற்போது அது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார்.  








 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.