"என் குழந்தை எரிவதை நான் எப்படி பார்க்க முடியும்"

பிபிசி சிங்கள மொழிக் கட்டுரை

சிங்கள மொழியில்: சரோஜ் பதிரன

தமிழில்: அப்ரா அன்ஸார்கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இருபது நாள் குழந்தையை வலுக்கட்டாயமாக தகனம் செய்தமை இலங்கையில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் கடந்த வாரங்களாக சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை கேள்வியுற்ற பலர் ஆத்திரமடைந்து மயானத்துக்கு முன்னாள் வெள்ளைக் துணியைக் கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஜனாஸாக்களை எரிக்க வேண்டாம் என்று தொடர்ந்தும் முஸ்லிம்கள் உரிமை கோருகின்ற போதிலும் ,கொரோனா வைரஸால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யும் கொள்கையை இலங்கை அரசு தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

முஹம்மத் பாஹிம் மற்றும் பாத்திமா ஸப்னா ஆகியோரின் மூத்த மகள் பிறந்து ஆறு வருடங்களின் பின்னர் பிறந்த குழந்தை தான் (தகனம் செய்யப்பட்ட) ஷாய்க். அதனால் அவர்கள் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

பாஹிம் பின்வருமாறு கூறுகிறார்:- 'குழந்தை பிறந்து இரண்டு வாரங்களின் பின்னர் (7ம் திகதி) நோய்வாய்ப்பட்டது. எனவே, நாங்கள் உடனடியாக கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். குழந்தைக்கு கொஞ்சம் சளி இருந்தது. காய்ச்சல் இருக்கவில்லை. பின்னர் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தைக்கு நியுமோனியா இருப்பதாகவும் தங்களால் முடிந்த அளவு முயற்சி செய்ததாகவும் வைத்தியர்கள் கூறினார்கள். இரவு 12.30 மணியளவில் குழந்தைக்கு என்டிஜன் பரிசோதனை எடுக்கப்பட்டது. பின்பு குழந்தைக்கு கொரோனா நேர்மறையானது என கூறினார்கள். இதையடுத்து எனக்கும்,மனைவிக்கும் ஆன்டிஜன் பரிசோதனை செய்தார்கள். எங்களுக்கான பரிசோதனை அறிக்கை எதிர்மறையாகவே இருந்தது. கொழும்பில் கொரோனா தொற்று அதிகமாக பரவியுள்ளதால் பல நாட்கள் வீட்டை விட்டு நாங்கள் வெளியேறவில்லை.தொழிலுக்குக் கூட நான் போகவில்லை. இருந்தும் எப்படி குழந்தைக்கு கொரோனா வந்தது என அதிகாரிகளிடம் நான் கேட்டேன் அதற்கு அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.

குழந்தைக்கு கொரோனா இருப்பதால் யாருக்கும் வைத்தியசாலையில் தங்க முடியாது என அதிகாரிகள் கூறி எங்களை வீட்டுக்கு போகச் சொன்னார்கள். எனது மனைவி இரவில் குழந்தையுடன் இருப்பதாகக் கூறியும் அதனை அவர்கள் மறுத்துவிட்டார்கள். மனைவி அழுத வண்ணமே வீடு திரும்பினார். அடுத்த நாள் (டிசம்பர் 8ம் திகதி) 1.30 மணியளவிற்கு குழந்தைக்கு இன்னுமொரு பரிசோதனை இருப்பதாகக் கூறினார்கள். பின்னர் மாலை 5 மணியளவில் தொலைபேசி அழைப்பு விடுத்து குழந்தை மாலை 4.00 மணிக்கே மரணித்து விட்டதாகக் கூறினார்கள். 4.00மணிக்கு மரணித்த குழந்தை பற்றி எங்களுக்கு 5.00 மணி வரை எந்த அறிவித்தலும் தராமல் இருந்திருக்கிறார்கள். எங்களில் யாரையுமே வைத்தியசாலையில் தங்க அனுமதிக்கவுமில்லை. தாய் கேட்டும் கூட நிராகரித்து விட்டார்கள் .

நான் மருத்துவமனைக்கு சென்றபோது கையொப்பம் இடுமாறு கூறினார்கள். எதற்காக கையொப்பம் இட வேண்டும் என கேட்டு மறுத்துவிட்டேன்.குழந்தையின் உடலை எங்களிடம் ஒப்படைக்கிறீர்களா? என கேட்டேன்.இல்லையென்றும் எரிக்க போவதாகவும் கூறினார்கள்.குழந்தையைப் பெற்றெடுத்த தாய் கூட பார்க்கவில்லை. நீங்கள் எப்படி எரிக்க முடியும் என்று நான் கேட்டேன். அவர்கள் முடியாது என்ற முடிவில் உறுதியாக இருந்தார்கள்.

வைத்தியர்கள் என்னிடம் கையெழுத்திடுமாறு கூறிய வண்ணமே இருந்தார்கள்.வைத்தியசாலையில் 214 இறப்புகள் இருந்தும் ஏன் எனது குழந்தையை மட்டும் எரிக்க போகின்றீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் குழந்தைக்கு கொரோனா என்று கூறிவிட்டார்கள். அதன் பின்னர் நான் குழந்தையை ,நவலோக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் போகிறேன் என்று கூறினேன். இன்னொரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அனுமதிக்கமாட்டோம் என அதிகாரிகள் கூறினர்.கடைசி வரை நான் கையொப்பம் இடவே இல்லை. யார் கையொப்பம் இட்டார் என்று எனக்கு தெரியாது" என்று தந்தை பாஹிம் கூறுகிறார்.

பிபிசி சிங்கள செய்திப் பிரிவை தொடர்பு கொண்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, வெளிப்படையாகப் பார்க்கும் போது இது ஒரு மிருகத்தனமான செயலாகவே தெரிகிறது. ஆனாலும் வைத்தியசாலைக்கென்று ஒரு வழமை இருக்கிறது. அதிகாரிகள் அனைவரும் பொய் சொல்வார்கள் என்பது சாத்தியமற்ற விடயம். குழந்தையின் தந்தைக்கும் விசாரணை நடாத்த வேண்டும். வைத்தியசாலை அதிகாரிகளை விசாரணை செய்ய ஒரு குழு நியமிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

"குழந்தை மயானத்தில் தகனம் செய்யப்பட்ட போது நான் வெளியே தான் நின்று கொண்டிருந்தேன்."என் குழந்தை எரிவதை நான் எப்படிப் பார்க்க முடியும்?" என்று தந்தை பாஹிம் கூறுகிறார்.

பத்திரிகையாளர் ரேகா நிலுஷி ஹேரத் "கொவிட் 19 காரணமாக நான் கேள்விப்பட்ட மிக உணர்ச்சிகரமான கதை இதுவாகும். இது ஒரு தந்தைக்கு மிகுந்த வேதனையான விஷயம். ஏன் உலகம் இவ்வளவு அநியாயமாக இருக்கிறது, மக்கள் ஏன் இவ்வளவு கொடூரமாக இருக்கிறார்கள் என்று அவர் கேட்கிறார்.

Link : https://www.bbc.com/sinhala/sri-lanka-55277585?at_medium=custom7&at_campaign=64&at_custom1=%5Bpost+type%5D&at_custom3=BBC+Sinhala&at_custom2=twitter&at_custom4=6BD70364-3F6F-11EB-A4E6-D51816F31EAE

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.