இலங்கையிலேயே வாழ்ந்து, மரணிக்கும் கொவிட் - 19 தொற்றுக்குள்ளானவர்களின் ஜனாஸாக்களை இங்கேயே நல்லடக்கம் செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிய மின்னஞ்சல் குறித்து அவருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் சமய சுதந்திரம் மற்றும் நம்பிக்கை தொடர்பான விசேட அறிக்கையாளர் அஹ்மத் ஷஹீட் நன்றி தெரிவித்துள்ளார். 

அவ்வாறு நன்றி தெரிவித்து பிரஸ்தாப ஐ.நா. விசேட அறிக்கையாளர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலில், மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கான அந்த மின்னஞ்சலை பொது வெளியில் பகிர்ந்ததையும் வரவேற்றுள்ளார். 

இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள விசேட அறிக்கையாளர் அஹ்மத் ஷஹீட், இவ்வாறாக சடலங்களை பலவந்தமாக எரியூட்டுவதைக் கண்டித்து தாமும் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திலேயே இலங்கை அரசா ங்கத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தாம் சென்ற ஆண்டு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போது இங்கிருந்த நிலைமைகள் தொடர்பில் அறிக்கையொன்றை தயாரித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.  

இந்த விடயத்தில் தாம் அதிக கரிசனை கொண்டிருப்பதாகவும் அவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு அனுப்பிய மின்னஞ்சலில் மேலும் தெரிவித்துள்ளார். 

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூன் அப்துல் கையூம் பதவியிலிருந்த காலத்தின் பிற்பகுதியில் 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2007 ஆம் ஆண்டு வரையிலும், பின்னர் முஹம்மத் நஷீட் ஜனாதிபதியாக இருந்த 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரையிலும், தாம் அந்நாட்டின் வெளிநாட்டமைச்சராக கடமையாற்றிய போது, முன்னாள் அமைச்சரான ஹக்கீமை பல தடவைகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதையும் அஹ்மத் ஷஹீட் நினைவூட்டியுள்ளார். 

இவ்வாறிருக்க, இலங்கையில் கொவிட் - 19 காரணமாக உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை மாலைதீவிற்கு கொண்டு சென்று நல்லடக்கம் செய்வதற்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுவடைந்து வருகின்றது. 

கொவிட் - 19 தொற்றினால் வெளிநாட்டில் மரணிப்பவர்களின் உடல்களை மாலைதீவில் நல்லடக்கம் செய்யவிருப்பதை தாம் ஆதரிக்க முடியாது என முப்பதாண்டு காலமாக அந்நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த மஹ்மூன் அப்துல் கையூம் தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

இலங்கையில் கொவிட் - 19 இனால் இறப்பவர்களின் ஜனாஸாக்களை மாலைதீவில் அடக்கம் செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹீம் சொஹ்லிக்கு வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து, வெளிநாட்டு அமைச்சர் அப்துல்லாஹ் ஷஹீட் அதற்கு சாதகமாக இணக்கம் தெரிவித்து பதிலளித்திருந்த நிலையிலேயே ரவூப் ஹக்கீம் இலங்கையிலுள்ள மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஒமர் அப்துல் ரஸ்ஸாக்கிற்கு அதனோடு சம்பந்தப்பட்ட மின்னஞ்சலை அனுப்பி வைத்திருந்தார். 

அதில் மாலைதீவு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துவிட்டு, கொவிட் - 19 தொற்றினால் மரணிப்பவர்களை எரிப்பது மட்டுமே இலங்கை அரசாங்கத்தின் ஒரே கொள்கை என்பதால் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதையும் சுட்டிக்காட்டியிருந்தார். 

இதன் பின்னணியில், கடந்த செவ்வாய்கிழமை நடந்த அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவருக்கு அதுபற்றி தெரியாது என்றும், அது தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்படவில்லை என்றும் தெளிவில்லாத விதத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.