வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்கள்...

மீனவர்களின் வாழ்க்கையானது ஒவ்வொரு சூழ்நிலையிலும் அச்சத்திலும்,ஆபத்தும் சூழ்ந்தவையாகவே காணப்படுகின்றது.எதையும் சிரமமாகக் கருதாமல் புயல் ,மழை,கடல் சீற்றத்தோடு வாழ்க்கையை வாழ்வதற்காக எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் .ஆனால் கரையில் இருப்பவர்களுக்கு அவர்களின் போராட்டத்தின் வலியை உணரமுடியாது.மீனவர்களின் குடும்பங்களோ கடலுக்குப் போனவர்கள் திரும்பி வரும் வரை கண்ணீரும் கம்பலையுமாக இருப்பதுதான் இன்றைய யதார்த்த சூழ்நிலையாகும்.

இலங்கையில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகின்ற இக் காலகட்டத்தில் பல்வேறு துறைகளிலும் பாரிய வீழ்ச்சியை அவதானித்து வருகின்றோம்.முதலாவது அலை,இரண்டாவது அலையென கட்டம் கட்டமாக கொரோனாவின் தாக்கம் ஊடுறுவதை காணமுடிகின்றது.முதலாவது அலையின் போது கடற்படை மற்றும் கந்தகாடு மறுவாழ்வு நிலையத்திலுள்ளவர்கள் மற்றும் அவர்களோடு சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.அதே போன்று இரண்டாவது அலையில் ஆடைத் தொழிற்சாலையை சேர்ந்தவர்கள்,மீன் விற்பனையாளர்கள் ,பொலீஸார் ,ஊடகவியலாளர்கள் என பல் துறை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கொவிட் கொத்தணி பின்னர் பேலியகொட மீன் சந்தையிற்கு பரவியிருந்தது இந்நிலையில் ,மினுவங்கொடை மற்றும் பேலியகொட கொவிட் கொத்தணிகளின் ஊடாக இதுவரை சுமார் 6000த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 ஒழிப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்திருந்தது.இந்த நிலையின் பின்னர் மக்கள் மீன்கள் என்றாலே அச்சப்பட்டு ஒதுங்கும் நிலையை நம் கண்ணூடாகவே காணமுடிந்தது.இதற்குக் காரணம் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மீன் விற்பனையாளர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டமை அண்மைக்காலமாக உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது .கடற்றொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் மத்தியில் கொவிட் தொற்று பரவி வருகின்றமையினால் நாட்டு மக்கள் மீன்களை கொள்வனவு செய்வதை குறைத்துக் கொண்டுள்ளனர்.இந் நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



பேலியகொட மீன் சந்தையிலிருந்தே நாடு முழுவதும் மீன்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.இந்த நிலையில் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மீன் விற்பனையாளர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டமை அண்மைக்காலமாக உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது.இதனால் மீன்பிடித்துறை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் பிரகாரம்,இலங்கையில் சுமார் 20 இலட்சம் பேர் கடற்றொழிலை நேரடியாகவும்,மறைமுகமாகவும் நம்பி வாழ்ந்து வருகின்றனர்.அத்துடன் கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தின் 2018  ஆம் ஆண்டு செயலணி அறிக்கையின் படி ,அந்த ஆண்டின் மொத்த மீன் உற்பத்தி 527,060 மெட்ரிக் தொன் ஆக காணப்படுகின்றது.அத்தோடு 2018 ஆம் ஆண்டு 1.2% கடற்றொழிலினால் தலா தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.மத்திய வங்கியின் 2019 ம் ஆண்டு அறிக்கையின் பிரகாரம் கடற்றொழில் துறையின் ஊடாக நாட்டின் தலா தேசிய உற்பத்திக்கு 11 வீதம் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.மீனவர்கள் மத்தியில் மூன்று விதத்தில் இந்த தொற்று பரவுவதற்கான அபாயம் ஏற்கனவே காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா தொற்று அதிகளவில் காணப்பட்ட நிலையில் ,இந்திய மீனவர்களின் ஊடாக  நாட்டிற்குள் கொரோனா தொற்று பரவுவதற்கான அபாயம் ஏற்கனவே காணப்பட்டதாக அவர் கூறுகின்றார்.அத்துடன் வைரஸ் நாட்டிற்குள் பரவி அது வேகமாக பரவுவதற்கான அபாயமும் ஏற்கனவே காணப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.மீனவர்கள் மத்தியில் இந்த வைரஸ் தாக்கம் அதிகளவில் ஏற்படுவதற்கான வாய்ப்பும் காணப்பட்டதாக அவர் தெரிவிக்கின்றார் .மீனவர்கள் மத்தியில் கொவிட் தொற்று பரவுகின்றமையினால் மீன்களை கொள்வனவு செய்ய பொதுமக்கள் மறுப்பு தெரிவித்து வருவதாகவும் எனினும் மீன்களின் ஊடாக கொரோனா வைரஸ் பரவும் என விஞ்ஞான ரீதியில் இதுவரை எங்கும் உறுதிப்படுத்தவில்லை என்பதே உண்மையாகும்.மீன்பிடித் துறைமுகங்களில் பிடித்து சேமிக்கப்பட்டுள்ள மீன்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்  என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.மீன்களின் ஊடாக கொவிட் தொற்று பரவும் அபாயம் கிடையாது எனவும் அவர் பதில் குறிப்பிட்டுள்ளார்.மீன்களை உட்கொள்வதினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா தொற்று ஏற்படாது என ருஹுனு பல்கலைக்கழகத்தின் கடற்றொழில் மற்றும் சமுத்திர ஆய்வு தொழில்நுட்பம், நீர்வாழ் உயிரினங்கள் பிரிவின் பேராசிரியர் ருச்சிர குமாரணதுங்க தெரிவிக்கின்றார்.கொரோனா ஏற்படும் என மீன்களை உட்கொள்ளாதிருப்பது முட்டாள்தனமான விடயம் எனவும் அவர் கூறுகின்றார்.கொரோனா வைரஸ் மீன்களுக்குள் செல்ல வாய்ப்புக்கள் மிகவும் குறைவு எனவும் அவ்வாறு மீன்களுக்கு வைரஸ் சென்றாலும் மீன்களை நன்றாக கழுவி அதிக வெப்பத்தில் சமைத்தால் ,வைரஸ் தொற்றை தவிர்க்கலாம் என அவர் குறிப்பிடுகின்றார்.70 செல்சியஸ் வெப்ப நிலைக்கு மேலாக வெப்பம் காணப்படுமாக இருந்தால் ,குறித்த வைரஸ் முற்றாக இல்லாது போய்விடும் எனவும் அவர் கூறுகின்றார் .உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மீன்கள் சமைக்கப்படுவதாக இருந்தால் ,எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீன்களின் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றாது என பேராசிரியர் ருச்சிர குமாரணதுங்க தெரிவிக்கின்றார்.



இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மீனவ சமூகம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் ,உள்நாட்டு தொழில்துறையாக கடற்றொழில் துறையும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று மிக வேகமாக பரவி வருகின்ற பின்னணியில் மீனவ ஊரான திருகோணமலை கிண்ணியா மீன்பிடி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று அண்மையில் கிண்ணியா மீன்பிடி சம்மேளனத்தின் காரியாலய முன்றலில் நடைபெற்றது.மீனவ சம்மேளனத்தின் தலைவரான ரிஜால் பாயிஸ் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் செயலாளர்,பொருளாளர் உட்பட பலரும் கலந்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.இதில் கருத்துத் தெரிவித்த தலைவர் ரஜால் பாயிஸ் , அனர்த்தங்கள் ஏற்படுகின்ற போது மீனவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு இயற்கை அனர்த்தம் மற்றும் ஏனைய சம்பவம் நிகழும் போது மீனவர்களுக்கு அரசாங்கமும் வானிலை அதிகார மையமும் விடுக்கின்ற அறிவுறுத்தல்களை பின்பற்றி நடக்கின்ற போது மீனவர்கள் தமது அன்றாட தொழிலினை இழக்கின்ற சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.இவ்வாறு ஏற்படுகின்ற அனர்த்தங்களினால் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து பாரிய கஷ்டத்தையே எதிர்நோக்கி வருகின்றனர்.கடந்த 11மாதங்களாக இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இதுவரைக்கும் எந்தவித கொடுப்பனவு நிவாரணமும் கிடைக்கப் பெறவில்லை.இயற்கை அனர்த்த நிலைமைகளின் போது நிதி ஒதுக்குவதாக செய்திகளில் பார்க்கிறேன் ஆனால் மீனவர்களின் கைகளில் எதுவும் வந்து சேர்வதில்லை.தற்போதைய நிலைமையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.தேங்காய் விலை 120 ரூபாயும் ,சீனி விலை 140 ரூபாவாகவும் அரிசியின் விலை அதிகரித்து காணப்படுகின்றது.இவ்வாறான நிலையில் மீனவர்களுக்கு எவ்வித வருமானமும் இன்றி வாழும்போது இவர்களுக்கு உதவுவது என அவர் கேள்வி எழுப்பினார்.மீனவர்கள் செறிந்து வாழக்கூடிய பிரதேசமான பேருவளை மருதானை மீனவர்களை சந்தித்தபோது அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்."தினமும் நாங்கள் காலையில் வலையை போட்டுவிட்டு வருகிறோம் எனினும் அந்த மீனை எடுத்து யாருக்கு விற்பனை செய்வது ,யாருக்கு கொடுப்பது ,யாரு எடுப்பார்கள் என்ற கேள்விகள் வினாக்குறியில் இருக்கின்றது.ஆனால் எங்களுடைய குடும்ப வறுமை காரணமாகவே இதனை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.ஆனால் எங்களுடைய முதலுக்கு ஏற்ற வரவு கிடைக்கிறது  இல்லை இந்த கொரோனாவினால் பாரிய சிக்கலாகவே உள்ளது.(முஹம்மத் பஸ்ஹான்)

தொழிலுக்கு செல்லவும் விருப்பமில்லை. மீனை எடுக்கவும் வியபாரிகள் வருவதில்லை.நஷ்டத்திலே காலம் செல்கின்றது என கவலையுடன் தெரிவிக்கின்றார்.

(எம்.ஏ.எம் பஸ்லி)

எனவே ,இவர்களுக்கான தீர்வை அரசாங்கம் பெற்றுக் கொடுக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.??


தொகுப்பு: அப்ரா அன்ஸார்

பட உதவி: யாஸீன் முஹம்மத்


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.