தற்போதைய அரசாங்கம் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு ஒப்பந்தங்களிலும் கையொப்பமிடாது என்றும் மேலும் MCC  ஒப்பந்தத்தை நிராகரித்ததன் காரணமாக நாடு சுமார் 500 மில்லியன் டொலர்களை இழந்துள்ளது என்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

முன்னைய அரசாங்கத்தைப் போல் தற்போதைய அரசாங்கம் ஒரு போதும் பொறுப்பற்ற முறையில் செயல்படாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மக்களை திசை திருப்பி நாட்டின் வளங்களை அழிப்பதன் மூலம் நாட்டை ஆள முடியாது என்றும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் மக்களிடம் திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் மேலும் தெரிவித்த அமைச்சர் நாட்டிற்கு ஏதேனும் மோசமான காரியம் நடந்தால் அது தலவர்களுடன் கலந்துரையாடப்பட்டு அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் இலங்கையில் வீடமைப்பு நிர்மாணத்திற்கான முன்னைய இரு தரப்பு ஒப்பந்தத்தில் மீண்டும் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் இன்று (18) பேசிய போதே மேற்கண்டவாறு உரையாற்றினார். இந் நிகழ்வு கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த ஒப்பந்தத்தில் இலங்கைக்கான இந்தியத்  தூதுவர்  கோபால் பாகலே மற்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் 

கீர்த்தி ரஞ்ஜித் அபேகுணவர்தன ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

கடந்த ஆட்சிக் காலத்தில் போது இலங்கையில்  ரூ. 1200 மில்லியன் செலவில் 2400 வீடுகளை நிர்மாணிக்க இந்திய அரசுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ. 5 இலட்சம் வழங்கப்படும். மேலும் வீடுகள் கட்டப்பட்ட  பின்னரே மிகுதி நிதி உதவிகள் வழங்கப்படும். இந்த ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக சிரமங்களை எதிர் கொள்ளும் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் நோக்கில் கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலையீட்டால் இந்த ஒப்பந்தத்தை திருத்தி மீளமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் கீழ்  நிதி உதவிகளைப் பெற்று மக்களுக்கு  வீடுகளைக் கட்டுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும்.

இந்நிகழில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரேணுக பெரேரா உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

முனீரா அபூபக்கர்

2020.11.18







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.