ஷுரா கவுன்சிலுக்கான முதல் தேர்தலை நடத்த உள்ளதாக கட்டார் அரசு அறிவித்துள்ளது; அந்நாட்டு அமீர் அஷ் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி 2021 ஆம் ஆண்டில் நடாத்தப் படவுள்ள குறித்த சட்டமன்ற தேர்தலுக்கான திகதியை அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். இது அந்நாடு விரிவான சீர்திருத்த செயல்பாட்டில் உச்சம் பெறவும், ஜனநாயக செயல்முறையை பலப்படுத்தும் புதிய கலாச்சாரம் தோற்றம் பெறவும் பெருமளவில் பங்களிப்பு செலுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.

5 ஜூன் 2017 ல் ஆரம்பமான வளைகுடா நெருக்கடியின் முதல் கணம் முதல், சவுதி அரேபியா, எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கட்டார் மீது விதித்த புறக்கணிப்பு உள்ளிட்ட எல்லாவகையான சவால்களையும் வெற்றிக் கொண்ட கட்டார், தனது வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் இலக்காகக் கொண்டு பல்வேறு மட்டங்களிலும் தன்னை பலப்படுத்திக் கொண்டது. 

முற்றுகையின் பின்னர் கட்டார் பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதை வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அனைவரும் அறிவர், இது அந்நாடு தன்னிறைவாகவும், சுதந்திரமாகவும் செயல்பட பெரிதும் உதவியது. அதன் தேசிய கொள்கை சுதந்திரம் மற்றும் அதன் இறையாண்மையைப் பாதுகாக்கும் விடயத்தில் வெற்றியும் கண்டது.

2021 இல் இடம் பெறவுள்ள ஷூரா கவுன்சில் தேர்தல்

ஷூரா கவுன்சில் என்பது கட்டார் நாட்டின் சட்டமன்ற சபையாக கருதப்படுகிறது. அந்நாட்டின் அரசியலமைப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, அமைச்சுக்கள், சட்ட அமுலாக்க அதிகார சபைகள் ஆகியவற்றை கண்காணித்தல், மற்றும் வரவு செலவுத் திட்டங்கள் உட்பட நாட்டின் முக்கிய சட்ட வரைவுகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு  ஷூரா கவுன்சில் பொறுப்பாக உள்ளது. இவ்வாறு மேற்கொள்ளப் படும் சட்ட வரைவுகள் குறித்த சபையில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப் பட்டப் பின் வாக்களிப்பிற்கு உட்படுத்தப் படும். மூன்றில் இரண்டு பெரும் பான்மையை பெற்று அமீரின் அங்கீகாரத்துடன் மேற்படி வரைவுகள் சட்டமாக்கப் படும். 

2020 நவம்பர் 3 ஆம் திகதி இடம்பெற்ற ஷூரா கவுன்சிலின் 48  வது வழக்கமான அமர்வைத் திறந்து வைக்கும் உரையில், கட்டார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி, தனது நாட்டின் முதல் நாடாளுமன்றத் தேர்தல் 2021 அக்டோபரில் இடம் பெறும் என அறிவித்தார். 

ஷுரா கவுன்சிலை நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக "தேர்ந்தெடுக்கப்பட்ட" ஒரு சபையாக மாற்றுவதற்கும், தேர்தல்களை நடத்துவதற்கான அரசியலமைப்பு மாற்றங்களை மேற்கொள்வதற்காகவும் தற்போதைய கவுன்சிலின் பணிகளை 2021 வரை நீடிப்பதாக தனது உரையில் ஷேக் தமீம் மேலும் சுட்டிக் காட்டினார்.

அமீரின் முடிவின்படி, மேற்படி தேர்தலை நடாத்துவற்கான ஏற்பாட்டு பணிகளை மேற்கொள்ள நியமிக்கப் பட்டுள்ள, அமைச்சர்கள் மற்றும் நிபுணர்களை உள்ளடக்கிய உயர் மட்டக் குழுவின் தலைவராக கட்டார் பிரதமர் ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல் அஸீஸ் அல் தானி உள்ளார்.

ஷூரா கவுன்சில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நகர சபை தேர்தலுக்குப் பிறகு கட்டாரில் இடம்பெறும் இரண்டாவது தேர்தலாகும். அமைச்சர்களின் அதிகாரங்கள் மற்றும் திறன்கள் தொடர்பான சட்டங்கள், முடிவுகள் மற்றும் ஒழுங்குமுறைகளை செயல்படுத்துவதிலும், கண்காணிப்பதிலும் ஷூரா சபைக்கு பெரும் பங்கு உள்ளமையினால், இது கட்டாரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப் படுகிறது.

ஜனநாயகத்திற்கான உத்தரவாதம்

எதிர் வரும் ஷூரா கவுன்சில் தேர்தல் கட்டார் வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக கருதப் படுகிறது. குறித்த தேர்தல் ஜனநாயக செயல்முறையை மேம்படுத்துவதோடு மக்களின் அரசியல் பங்கேற்பை பலப்படுத்துகிறது என ஐக்கிய நாடுகள் சபை, உலகின் பல நாடுகள், சர்வதேச மற்றும் உள்நாட்டு மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், நாட்டு மக்கள் அனைவரும் பாராட்டியுள்ளனர். இந் நடவடிக்கையானது, அனைத்து மட்டங்களிலும் நாடு கண்டு வரும் மறுமலர்ச்சியின் தொடர் எனவும், குறிப்பாக தேர்ந்தெடுக்கப்படும் சபையின் அதிகாரங்கள் விரிவாக்கப் படுவதினால், வெளிப்படைத்தன்மையுடன் நாட்டினதும், மக்களினதும் நலனை நோக்காகக் கொண்டு அதிக அதிகாரம் கொண்ட பலம்மிக்க சட்டமன்ற சபையாக ஷூரா கவுன்சில் செயல் பட முடியும் எனவும் அவர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.

ஜேர்மன், பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கட்டார் அரசின் தேர்தல் அறிவிப்பை வரவேற்றுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த நடவடிக்கையைப் பாராட்டியுள்ளார்.

கட்டார் அமீரின் மேற்படி தீர்மானத்தை விவேகமானது என பாராட்டியுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர், அக்டோபர் 2021 இல் ஷூரா கவுன்சில் தேர்தலுக்கான அறிவிப்பு நாட்டின் ஜனநாயகத்தை பலப்படுத்துவதோடு, “விஷன் 2030” இல் நாட்டு மக்கள் அனைவரினதும் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.

2021 அக்டோபரில் இடம்பெறவிருக்கும் தேர்தல், ஷூரா கவுன்சில் வரலாற்றில் பரவலான மக்கள் பங்கேற்பை அனுமதிக்கும், புதிய தேர்தல் முறையாகும் என கட்டாரின் பிரபல எழுத்தாளர் இல்ஹாம் பத்ர் குறிப்பிட்டுள்ளார். 

"மேற்படி ஷூரா கவுன்சில் தேர்தல் மூலம் முழு அதிகாரங்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் உருவாக்கப் படும் என்பதில் அதிக நம்பிக்கை உள்ளது” என கட்டாரின் பிரசித்தி மிக்க எழுத்தாளரும் "தார் அல் அரபின்" தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாபர் அல் ஹர்மி தெரிவிக்கின்றார்.

சுயாதீன நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும்,  சட்டமியற்றும் அதிகாரம் உள்ள உண்மையான சட்டமன்ற சபையை உருவாக்கவும், மேற்பார்வைகளைக் கொண்ட ஒரு உண்மையான சட்டமன்றக் குழுவை உருவாக்குவதற்கும் நிறைவேற்று அதிகார சபைகளை கண்காணிக்கவும் கட்டார் அமீர் மேற்கொண்டு வரும் முயற்சிகளை இது உறுதி செய்கிறது என அல் ஹர்மி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது மக்கள் நீண்ட காலமாக எதிர் பார்த்திருந்த ஒரு முடிவாகும், மேலும் கட்டாரில் ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதற்கான ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குவதில் மேற்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சபைக்கு பெரும் பங்கு உண்டு என அந்நாட்டு எழுத்தாளர் அப்துல்ஸீஸ் அல்-காதர் கூறினார்.

"கட்டார் மக்கள், முதல் நகரசபை தேர்தலினால் மகிழ்ச்சியடைந்தது போன்று நடைபெறவிருக்கும் ஷூரா சபை தேர்தலின் மூலமும் மகிழ்ச்சி அடைவர். ஷூரா சபையின் அதிகாரங்கள் பரந்த அளவில் இருப்பதினால் நாட்டின் வெற்றிக்கு சாதகமான காரணியாக இது அமையும் எனவும் அல்-காதர் சுட்டிக் காட்டினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.