இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் 95ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட 'தேசிய ஒலிபரப்பாளர்' நூல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் நேற்று (2020.12.16) காலை விஜேராமவிலுள்ள கௌரவ பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 95 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தேசத்தின் ஒலிபரப்பாளராக ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் இதுவரை மக்களுக்கு இணையற்ற சேவையை வழங்கியுள்ளது. பல தசாப்த காலங்களாக ஊடகத்துறையில் முன்னணி ஒலிபரப்பாளராக தேசிய வானொலி விளங்கிவருகின்றது.

95ஆவது ஆண்டுவிழாவை கொண்டாடும் தேசிய வானொலி, வணிக சக்திகளுக்கு அடிபணியாமல் தங்கள் தேசிய பணியை நிறைவேற்றி வருவதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். எனவே, 95 ஆண்டுகளாக தேசிய வானொலி வழங்கிய தேசிய சேவையை இந்நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார்.

95ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சகாப்தத்தை குறிக்கும் 95 பாடல்கள் அடங்கிய ஆல்பம் மற்றும் பேராதெனிய தாவரவியல் பூங்காவின் ஓர்க்கிட் பிரிவு வானொலியின் 95ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட டென்றோபியம் றேடியோ சிலோன் (Dendrobium Radio Ceylon) என்ற கலப்பின ஓர்க்கிட் மலரும் இதன்போது கௌரவ பிரதமருக்கு வழங்கப்பட்டது.

1925ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் திகதி, பிரித்தானிய ஆளுநர் ஹியூ கிளிஃபர்ட் அவர்களின் தலைமையில் இலங்கையின் வானொலி சேவை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது தொலைத்தொடர்பு துறையின் கீழ் இருந்தது. 1949ஆம் ஆண்டு ஒக்டோபர் 1ஆம் திகதி இந்த வானொலி சேவை றேடியோ சிலோன் என்ற பெயரில் புதிய துறையாக மறுசீரமைக்கப்பட்டது. அதன் முதலாவது பணிப்பாளர் ஜோன் ஏ. லம்சான் ஆவார். 1967 ஜனவரி 5ஆம் திகதி இலங்கை ஒலிபரப்புத் துறை, கூட்டுத்தாபனமாக மீண்டும் மறுசீரமைக்கப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜகத் விக்ரமசிங்க மற்றும் பணிப்பாளர் நாயகம் சந்திரபால லியனகே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.