(செ.தேன்மொழி)

களனி, திஹாரி மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் வைரஸ் பரவலின் புதிய கொத்தணிகள் உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதனை வெற்றி கொள்வதற்கு விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோயியல் மற்றும் கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ பிள்ளை தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் கம்பஹா மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடையை அண்மித்த பகுதிகளில் கொவிட்-19 வைரஸ் பரவலின் இரண்டாம் அலை, கம்பஹா மாவட்டத்தில் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளுக்கமைய வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் தொகை 8.6 சதவீதத்திலிருந்து 3.2 என்ற சதவீதத்தில் குறைவடைந்துள்ளன. இது ஒரு சிறந்த பெறுபேறாகும்.

இந்நிலையில் வைரஸ் தொற்றுக்குள்ளாகுபவர்களின் தொகையை 2.5 சதவீதத்திற்குள் குறைத்துக் கொள்வதும் மிக முக்கியமாகும். இந்தளவுக்கு வைரஸ் தொற்றாளர்களின் தொகையை குறைத்துக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி உட்பட அரச தலைவர்கள், இராணுவ தளபதி உட்பட பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸாருக்கும் நன்றித் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கம்பஹா மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து இதுவரையில் 82 ஆயிரம் வரையிலான பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது 5,589 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை 32 முதலீட்டு வலைய நிறுவனங்களிலும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2,000 பி.சி.ஆர் பரிசோதனைகள் வரை செய்யப்பட்டு வருகின்றது.

இதேவேளை அந்த பகுதியில் பிரதேச சுகாதார பணிப்பாளர் காரியாலயம் உட்பட 16 சுகாதார காரியாலயங்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் மக்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றமையினால், மக்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்காக சுகாதார பிரிவு மட்டுமன்றி, மத குருமாரும் மக்களை தெளிவுப்படுத்த வேண்டும்.

வைரஸ் பரவலை வெற்றி கொண்டதில் நாம் வரலாற்று சிறப்பிடத்தைப் பெற்றிருந்தாலும், மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த வைரஸ் பரவலை வெற்றி கொள்ள மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

களனி, திஹாரி மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் வைரஸ் பரவலின் புதிய கொத்தணிகள் உருவாகுவதற்கு வாய்ப்புள்ளதால் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு, விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

கம்பஹா மாவட்டத்தில் வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாழ்வாதாரத்தை இழந்த 5,39,543 பேருக்காக 2,697 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய 5000 ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள 11,028 குடும்பங்களுக்காக 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகளும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 30,546 குடும்பங்களுக்காக 92 மில்லியன் ரூபாய் பணத்தை அரசாங்கம் செலவிட்டுள்ளது. வீடுகளிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள 3,702 குடும்பங்களுக்காக 2000 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுவரையில் வைரஸ் பரவல் காரணமாக 25 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.