அமைதியின்மை ஏற்பட்ட மஹர சிறைச்சாலையில் தற்பொழுது முழுமையான அமைதி நிலவுவதாக பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (01) நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அக்குழுவின் தலைவர் அமைச்சர் சமல் ராஜபக்ஷ மஹர சிறைச்சாலை தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் 30ற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதுவரை மஹர சிறைச்சாலையிலுள்ள 2500 கைதிகளில் 189 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பிணை பெற்றுள்ள 100 பேரை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்தார்.


மஹர சிறைச்சாலையின் மருந்துக் களஞ்சியத்தில் மனநலக் கோளாறுக்குப் பயன்படுத்தும் மூன்று வகையான 21,000 மருந்துகள் காணப்பட்டிருந்ததுடன், கைதிகள் தாம் அடிமையாகியிருந்த போதைப்பொருட்களுக்குப் பதிலாக குறித்த மருந்துகளை பயன்படுத்தியமையால் இந்த அமைதியின்மை ஏற்பட்டதா என்பது பற்றி ஆராய்ந்து வருவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர், நாளையாகும்போது (02) மஹர சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மற்றும் சிறைக்காவலர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படும் எனத் தெரிவித்தார்.

மஹர சிறை மோதல் - உயிரிழந்த 8 பேருக்கு கொரோனா!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக உயிரிழந்த 8 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று (01) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக ராகமை வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

கடந்த 29 ஆம் திகதி மஹர சிறைச்சாலை கைதிகள் சிலருக்கு இடையில் அமைதியின்மை ஏற்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 11 கைதிகள் உயிரிழந்தனர்.

இதன்போது, மேலும் 106 கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் காயமடைந்த நிலையில் அவர்களில் 29 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இவ்வாறு காயமடைந்த கைதிகளில் 38 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.