இலங்கையில் கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுக்களுக்குமான கொடுப்பனவுகளை வழங்கும்போது, வீரர்களுக்கு திறமையின் அடிப்படையில் கொடுப்பனவுகளை வழங்கும் முறைமையை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த முறை வரவு செலவுத் திட்டத்தில் விளையாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் வீரர்களுக்காக 20 சதவீதத்தை ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய ஒலிம்பிக் சங்கம், தேசிய விளையாட்டுப் பேரவை மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் என்பன ஒன்றிணைந்து விளையாட்டின் தரத்தை அதிகரிக்கும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள உயர் செயல்திறன் குழுவினால் முன்மொழியப்பட்ட திட்டங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவது குறித்து விளையாட்டு அமைச்சின் டங்கன் வைட் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

'இதுவரை காலமும் விளையாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் வீரர்களுக்கு 6 சதவீதம் மாத்திரம் தான் ஒதுக்கப்பட்டு வந்தன. எஞ்சிய 94 சதவீதமும் அமைச்சின் நிர்வாக நடவடிக்கைகளுக்கும், கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு மாத்திரம் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மஹேல ஜயவர்தன தலைமையிலான விளையாட்டுப் பேரவை வீரர்களுக்காக ஒதுக்குகின்ற நிதியினை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்கள். அதன் முதல்கட்டமாக 2021 வரவு செலவு திட்டத்தில் விளையாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 20 சதவீதத்தை வீரர்களுக்காக ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, எதிர்காலத்தில் தேவையான கட்டடமொன்றை நிர்மாணிப்பதாயின் மாத்திரம் தான் நிதி ஒதுக்கப்படும்.

இதனிடையே, விளையாட்டு சங்கங்களின் மனதை வெல்வதற்கும், விளையாட்டு கழகங்களில் உள்ள அதிகாரிகளின் மனதை திருப்திப்படுத்தவும், தனிப்பட்ட நட்பு காரணமாக ஆறுதல் பரிசில்களை வழங்குவதற்கும், அரசியல் இலாபத்துக்காகவும் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக எந்தவொரு முன்னுரிமையும் ஒருபோதும் வழங்கப்பட மாட்டாது' என அமைச்சர் குறிப்பிட்டார்.

வீரர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் அமைச்சர் இங்கு கருத்து தெரிவிக்கையில்,

'நீங்கள் எவ்வளவு தூரம் விளையாட்டில் முன்னேறிச் சென்று வெற்றிகளைப் பெற்றுக் கொள்கிறீர்களோ அந்தளவுக்கு உங்களுக்கு அனைத்து சலுகைகளும் கிடைக்கும். எதிர்காலத்தில், வீரர்களின் திறமையின் அடிப்படையில் கொடுப்பனவு செலுத்தும் முறை உருவாக்கப்படும்.

இது கிரிக்கெட் முதல் அனைத்து விளையாட்டிலும் உள்ள வீரருக்கும் பொருந்தும். உங்கள் திறமைக்கான ஒரு பங்கை பயிற்சியாளரும் பெற்றுக் கொள்வார்' என தெரிவித்தார்.

'போட்டி ஒன்றில் பங்கேற்பதற்றாக வெளிநாடு செல்வதாயின், அது வெற்றிபெறுவதற்காகவே என்பதை வீரர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இலங்கையின் மிகவும் பழமையான விளையாட்டுச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டு புதிய சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்றும், அது இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்றும் இதன்போது அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.