நீதிமன்றத்தை அவமதித்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவை, குற்றவாளியாக இனங்கண்ட உயர்நீதிமன்றம், அவருக்கு நான்கு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நேற்று (12) தீர்ப்பளித்தது. 

உயர்நீதிமன்றத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மேற்படி வழக்கின் தீர்ப்பு, ஜனவரி 12ஆம் திகதியன்று வழங்கப்படுமென திகதி குறிக்கப்பட்டது. அதனடிப்படையில் உயர்நீதிமன்ற நீதியரசர்களான சிசிர டி அப்றூ, விஜித் மலல்கொட, பிரீதி பத்மன் சுரசேன ஆகியோர் அடங்கிய மூன்று நீதியரசர்கள் குழாமினால் நேற்று (12) தீர்ப்பளிக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12ஆம் திகதி, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்த, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்றத்தை அவமதித்தார் எனக் குற்றஞ்சாட்டி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 'நீதிபதிகள் ஊழல் மிக்கவர்கள்' எனக் கூறியதாகவே, அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 

மாகல்கந்தே சுசந்த தேரர், ஆர். சுனில் பெரேரா, ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி ஆகியோரால் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் நிறைவில், பிரதிவாதியான ரஞ்சன் ராமநாயக்கவை குற்றவாளியாக இனங்கண்ட உயர்நீதிமன்றம், மேற்கண்டாவறு கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

 இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கோ, வேறெந்த செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கோ அவருக்கு இயலுமை இல்லை. நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம், உயர்நீதிமன்றத்திடமே உள்ளது.

 எனினும், தனக்கெதிரான இந்தத் தீர்ப்பு தொடர்பில், ஜனாதிபதிக்குக் கடிதமெழுதி மன்னிப்புக் கேட்கமுடியும். அவ்வாறான எவ்விதமான பகிரங்க கோரிக்கை எதையும் ரஞ்சன் ராமநாயக்க எம்.பி, இச்செய்தி அச்சுக்குப் போகும் வரையிலும் விடுக்கவில்லை. 

ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்படாது விடின், அவர் குடியுரிமையை இழப்பார். 

எனினும், மரண தண்டனை விதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, பாராளுமன்றத்துக்கு எவ்வாறு வரமுடியுமென்ற சந்தேகம் எழலாம். ஆனால், தனக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக அவர்இ மேன்முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க,  எந்தவொரு சிறைச்சாலைக்கும் உடனடியாக அழைத்துச் செல்லப்படவில்லை. கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் தனிமைப்படுத்தல் சட்டதிட்டத்தின் பிரகாரமும், அவர், பல்லன்சேன தனிமைப்படுத்தல் மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.