ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கோவிட் – 19 தொற்றுக்குள்ளாகி, தென் மாகாணத்தில் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழ் நாட்டிலிருந்து அரசியல் பிரமுகர்கள் பலர் செய்திகளை அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கொரோனா தொற்றுக்குள்ளாகிய செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன். இவர் இலங்கையில் உள்ள முஸ்லிம் மற்றும் சிறுபான்மை மக்களுக்காக தொடர்ந்தும் சமூக தொண்டாற்றி வருகின்ற நிலையில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவர் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியை தொடருவதற்கான சுகத்தை பெறுவதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மாநில முதன்மை துணைத் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் தமது செய்தியில் கூறியுள்ளதாவது,

சிறுபான்மை முஸ்லிம் சமுதாய மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், இலங்கையின் மேம்பட்ட வளர்ச்சி தழைத்தோங்கவும், அயராது உழைக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அனைத்து சமய மக்களோடும் அன்பாகப் பழகக் கூடியவர். அனைத்து தரப்பு மக்களிடத்திலும் நல்லுறவு கொண்டிருப்பவர். அவரது வாழ்வில் சந்தித்த சவால்களும், சோதனைகளும் எண்ணில் அடங்காதவை. அவற்றையெல்லாம் தன் மன உறுதியாலும், தளராத உழைப்பினாலும் வென்றெடுத்த வரலாறு அவருக்கு உண்டு.

அவருடைய வாழ்வில் எத்தனையோ பல தடைகளை அவர் வெற்றிகரமாகக் கடந்து சென்றிருக்கிறார். அதைப்போலவே இந்த நோய்த் தொற்றையும் எளிதாகக் கடந்து செல்வார். மிக விரைவில் பூரண நலம் பெற்று, சுகமாகி தன்னுடைய பணிகளை தொடர்ந்து ஆற்றிட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடத்தில் பிரார்த்திக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

தமிழகத்தின் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர், நெல்லை முபாரக் அனுப்பி வைத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்காக காத்திரமான பல முயற்சிகளை தாங்களும் தங்களது தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் முன்னெடுத்து வருவதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இலங்கை முஸ்லிம் மக்களுடைய முன்னேற்றத்தில் தங்களது பணி அளப்பரியது. குறிப்பாக, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை எரிக்க வேண்டும் என்கின்ற இலங்கை அரசினுடைய உத்தரவுக்கு எதிராக, தாங்கள் நடத்தி வருகிற ஜனநாயக போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ கட்சி ஆதரிக்கிறது, பாராட்டுகிறது. உங்களது கோரிக்கைகள் வெற்றி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இத்தருணத்தில் தாங்கள் பெருந்தொற்றால் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். மிகவும் அவசியமான காலகட்டத்தில் தங்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. எனவே தாங்கள் விரைந்து குணம் பெறவும், சமூகத்திற்காக அருந்தொண்டாற்றிடவும் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் டாக்டர் சேமுமு முகமதலி அனுப்பி வைத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 சகோதரர் ரவூஃப் ஹக்கீம் நலம் பெறத் துஆ செய்கிறோம் எமது பேரன்பிற்கும் பெரும்பாசத்திற்குமுரிய இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அருமைச் சகோதரர் அல்ஹாஜ் ரவூஃப்  ஹக்கீம் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த வேதனையைத் தருகிறது. 

வல்ல அல்லாஹ் அருமைச் சகோதரர் அல்ஹாஜ் ரவூஃப் ஹக்கீம் அவர்களுக்கு விரைந்து பரிபூரணமான நலம் அருளிட இருகரமேந்தி இறைஞ்சுகிறோம். 

பேராசிரியர் டாக்டர் 
சேமுமு. முகமதலி, 
பொதுச் செயலாளர், 
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம். 
தலைவர், 
இஸ்லாமிய இலக்கியக் கழகம்.

தகவல் :இம்ரான் நெய்னார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.