ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக வலுவான தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் - பிரித்தானிய எம்பி (வீடியோ)

Rihmy Hakeem
By -
0

 


யாழ். பல்கலைக்கழகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக பலவந்தமாக அகற்றப்பட்டது.

பின்னர் மீண்டும் அதனை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும் உலகளாவிய ரீதியில் அந்த உடைப்பு சம்பவம் ஏற்படுத்திய தாக்கமும் பின்னடைவும் இலங்கைக்கு எதிரான வலுவான நடவடிக்கைக்கான தீர்மானமொன்றின் அவசியத்தை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.

எனவே எதிர்வரும் மார்ச் மாதத்தில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக வலுவானதொரு தீர்மானத்தை பிரித்தானிய அரசு கொண்டு வர வேண்டும் என்று பிரித்தானிய தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டோனாக் வலியுறுத்தியுள்ளார்.

அந்நாட்டு பாராளுமன்ற அமர்வில் இதனை வலியுறுத்திய அவர் மேலும் குறிப்பிடுகையில், மனித உரிமை மீறல்கள் மற்றும் இறுதிக்கட்ட போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் உட்பட மனித உரிமைகளுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் தொடர்பில் ராஜபக்ஷ சகோதரர்கள் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கையின் மனித உரிமைகள், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை பாதுகாக்கும் வகையில் பிரித்தானிய அரசு ஜெனிவாவில் செயற்பட வேண்டும்.

ஆகவே இலங்கை விடயத்தில் புதிய தீர்மானமொன்றிக்கான உறுதிப்பாட்டை பிரித்தானிய அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். அந்த தீர்மானத்தில் இலங்கையை கண்காணிக்கும் அலுவலகத்தை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் ஸ்தாபித்தல் என்ற விடயம் அமையப்பெற்று ஒரு சிறப்பு பொறிமுறை கொண்டுவரப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)