கொவிட்-19 தொற்று காரணமாக, மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், பிரதமரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

'இந்த அவையில் நீரினால் கொவிட்-19 பரவாது என, நேற்றையதினம் (09) இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டாரவுக்கு தெரிவித்திருந்ததார். பிரதமரிடம் கேள்வியெழுப்புகிறோம்,  இப்போதாவது கொவிட்-19 சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படுமா என தெரிவிக்க முடியுமா' என கேள்வியெழுப்பினார்.

https://youtu.be/kcFDhONAa_w

இதனைத் தொடர்ந்து, அதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ,

'மரிக்கார் எம்.பி. அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில், மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்' எனத் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி 22ஆம் திகதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை வரவுள்ளதோடு, பாராளுமன்றத்திலும் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சமகால அரசியலில் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து, அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் பெற்றியை நேற்று (09) சந்தித்த இக்குழுவினர், நாட்டில் சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள், முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது உட்பட முஸ்லிம்கள் அண்மைக்காலமாக எதிர்கொள்ளும் நெருக்குவாரங்கள் குறித்தும் தூதுவரிடம் எடுத்துக் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.