கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் நாட்களில் அவசர சந்தர்ப்பங்களில் வைத்தியர் மற்றும் தாதியர்களின் ஒத்துழைப்பை பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் வைரஸ் தொற்று பரவியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் பரீட்சை நடைபெறும் போது அவசரநிலை ஏற்பட்டால், அந்த சந்தர்ப்பங்களில் சிகிச்சைக்காக சம்பந்தப்பட்ட பிரதேச வைத்தியசாலைகளுடன் தொடர்புகளை மேற்கொள்வதற்கான திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக அம்புலன்ஸ் வாகனம், தேவையான பணியாளர்கள் மற்றும் வாட் வசதிகளை ஏற்பாடு செய்து வைக்குமாறு பரீட்சை திணைக்களத்தினால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறினார்.

பரீட்சை மத்திய நிலையங்களில் சுகாதார வசதிகளை செய்யும் ஒழுங்குகள் மேற்கொள்வது தொடர்பிலும் சுகாதார வைத்திய அதிகாரிகளுடன் தொடர்புப்பட்டு பரீட்சை மத்திய நிலையங்களில் கிருமி தொற்று நீக்கி நடவடிக்கைகள் மற்றும் தேவையான சுகாதார நடைமுறைகளை முன்னெடுப்பதற்கு அந்தந்த பரீட்சை மத்திய நிலையங்களுக்கான அதிபர்கள் அல்லது பிரதி அதிபர்கள் சிரேஸ்ட ஆசிரியர்கள் மண்டபங்களுக்கு அதிகாரிகளாக நியமிக்கப்படவுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளுடன் இணைப்புக்காக சகல மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கும் தெளிவுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 10 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 4,500 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.