வார இறுதி தினத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் மேல் மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,  நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்றும் நாளையும் இடம்பெறவிருக்கும் இந்த சோதனை நடவடிக்கைகளின் போது, மேல் மாகாணத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கு செல்லும் நபர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான அன்ரிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. மேல்மாகாணத்திலுள்ள பொது சந்தைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளில் எழுமாறான அன்ரிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்போது பாடசாலை மாணர்களை அழைத்துச் செல்லும் பாடசாலை வாகனங்கள் மற்றும் பொது வாகனங்களின் சாரதிகள், வாகன நடத்துனர்கள் மற்றும் சாரதி உதவியாளர்களுக்கும் அன்ரிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதேவேளை, சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதுடன், சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும்.

இதன்போது முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் என்பன கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய விடயமாகும்.

இந்நிலையில், நாடளாவிய ரீதியில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் நேற்றுக் காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 02 ஆயிரத்து 997 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.