சென்னையில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்தது. இதில் 'டாஸ்' வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன்கள் குவித்தது. இந்தியா 337 ரன்களில் ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது. 

எனினும் பாலோ ஆன் கொடுக்காமல் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. 241 ரன்கள் முன்னிலையுடன் ஆடிய இங்கிலாந்து அணி, வேகமாக ரன் குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிரடியாக அடித்து ஆடியது. ஆனால் அஸ்வின், ஷபாஸ் நதீம் உள்ளிட்ட இந்திய பந'து வீச்சாளர்கள் நேர்த்தியாக செயல்பட்டு இங்கிலாந்து அணியின் ரன் வேட்டைக்கு முட்டுக்கட்டை போட்டதுடன், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் விரைவில் வீழ்த்தினார்கள்.

இதனால் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 46.3 ஓவர்களில் 178 ரன்னில் சுருண்டது. இதனையடுத்து 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 13 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. 

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் 381 ரன்கள் என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, 192 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 72 ரன்கள், சுப்மன் கில 50 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று அசத்திய இந்திய அணி, சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது. 

இன்றைய வெற்றியின் மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் போட்டிகளுக்கான புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளதமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.