- இந்திய பிரதமர், ஜனாதிபதி கவலை

இந்தியாவின், உத்தரகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் இன்று (07) முற்பகல் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவு வெள்ளப்பெருக்காக மாறி பேரழிவை ஏற்பட்டுத்தியுள்ளது.

குறித்த பனிச்சரிவு, நீராக மாறி அலக்நந்தா தவுளிகங்கா நதிகளை  திடீரென பெருக்கெடுக்கச் செய்துள்ளது. இதன் காரணமாக வெள்ளத்தில் சிக்கி 100 முதல் 150 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அம்மாநிலத் தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குறித்த பகுதியில் தாழ் நில பிரதேசங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த ஐந்து குழுக்கள் உத்தரகண்ட் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்தோ-திபெத்திய எல்லை பொலிஸார் உத்தரகண்ட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, வெள்ளப் பெருக்கு காரணமாக அதனை அண்டிய மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும். விஷ்ணுபிரயாக், ஜோஷிமத், கர்ன்பிரயாக், போன்ற பகுதிகளில் ஆற்றின் அருகே பொதுமக்கள் வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரிசிகேஷ் பகுதியில் படகு போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளத்தால் பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் தங்களது ட்விற்றர் கணக்குகளில் கவலை வெளியிட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி,'உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையைத் தொடர்ந்தும் கண்காணித்து வருகிறேன். முழு இந்தியாவும் உத்தரகண்ட் உடன் துணையான நிற்கும் என்பதோடு, அங்குள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பிற்காக ஒட்டுமொத்த தேசமும் பிரார்த்தனை செய்கிறது. இது குறித்து சிரேஷ்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறேன். தேசிய பேரிடர் மீட்புப் படை, மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பில் உடனுக்குடன் தகவல்களைக் அறிந்து வருகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ட்விற்றர் கணக்கில்,'பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ள, உத்தரகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் அருகே பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு தொடர்பில் கவலையடைகிறேன். அப்பகுதியில் மக்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரார்த்திக்கிறேன். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என நம்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.