முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது ஈஸ்டர் தாக்குதல் குறித்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. ஆனால் ஆணைக்குழு அறிக்கை மைத்திரி மீது குற்றம் சுமத்தியிருக்கிறது - முஜிபுர் ரஹ்மான்

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவே அவர் மீது குற்றஞ்சுமத்தியுள்ளது. பாதுகாப்பு அமைச்சராக காணப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்று அன்று நாம் வலியுறுத்திய விடயங்களையே ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்கள் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்திலிருந்த முஸ்லிம் அமைச்சர்கள் மீதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் தற்போதைய அரசாங்கத்திலுள்ளவர்களால் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றச்சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவே அவர் மீது குற்றஞ்சுமத்தியுள்ளது. ஆனால் ஆணைக்குழுவினால் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள அவர் அரசாங்கத்தின் பங்காளியாகவுள்ளார். பாதுகாப்பு அமைச்சராக காணப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்று அன்று நாம் வலியுறுத்திய விடயங்களையே இன்று ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

தாக்குதல்களை தடுத்து நிறுத்த தவறியவர்கள் குறித்து இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே தவிர, அதன் பின்னணி குறித்து எதுவும் கூறப்படவில்லை. தாக்குதலின் சூத்திரதாரிகள் உள்நாட்டவர்களா அல்லது வெளிநாட்டு சக்திகளா என்பதும் குறிப்பிடப்படவில்லை. சூத்திரதாரிகள் இந்த ஆணைக்குழுவால் அடையாளப்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்த்தோம்.

இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ள பிரதான சந்தேகநபரான சாரா நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் மாத்திரமே இதன் உண்மையான பின்னணியை கண்டறிய முடியும். எனவே இந்திய அரசாங்கத்திடம் சாராவை திருப்பியனுப்புமாறு கோரிக்கை விடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். இதற்கான முயற்சிகளை முன்னெடுக்காவிட்டால் அதிலிருந்து அரசாங்கத்தால் தப்பிக்க முடியாது என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.