உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் மற்றும் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக வங்கிக் கடன்களை செலுத்தாத தொழில்முனைவோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு பதிலாக சலுகை காலம் வழங்குவது குறித்து கவனம் செலுத்துமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (2021.03.15) வங்கி பிரதானிகளுக்கு தெரிவித்தார்.

வங்கி கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத தொழில்முனைவோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பாக நிதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, தொழில்முனைவோரின் நிதிப் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் நிதி அமைச்சு, மத்திய வங்கி மற்றும் தொடர்புடைய வங்கிகளுடன் இணைந்து இறுதி முடிவை எட்டுமாறு கௌரவ பிரதமர் அறிவுறுத்தினார்.

இது போன்ற பிரச்சினைகள் நீண்ட காலமாக இருந்து வருவதாகவும், எந்தவொரு தரப்பும் பாதிக்கப்படாத வகையில் அவற்றைத் தீர்ப்பது முக்கியம் என்றும் கௌரவ பிரதமர் சுட்டிக்காட்டினார்.

வங்கி கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத எந்தவொரு தரப்பினருக்கும், வங்கி தரப்பிற்கும் இடையில் நியாயமான முறையில் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்தின் தலையீடு தேவை என்று தெரிவித்த கௌரவ பிரதமர், இது தொடர்பாக சட்டப்பூர்வ அதிகாரங்களைக் கொண்ட அரசு நிறுவனம் அல்லது அதிகாரியை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதன் மூலம் லீசிங் உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் பொருந்தும் கடன் வழங்குநர்களுக்கு நிவாரணம் வழங்க வாய்ப்பு உள்ளது என்றும் கௌரவ பிரதமர் கூறினார்.

குறித்த கலந்துரையாடலில் தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷ, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர் டி.எம்.ஜே.வி.பி. பெர்னாண்டோ, மக்கள் வங்கித் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ, தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் கேசிலா ஜயவர்தன, பிராந்திய அபிவிருத்தி வங்கி தலைவர் மஹிந்த சாலிய, தேசிய நிறுவன மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் அனுஷ்கா குணசிங்க மற்றும் மேம்பாட்டு நிதித் துறை பணிப்பாளர் கீதா விமலவீர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.