கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை இரணைமடுவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள தீர்மானம் பல்வேறு சந்தேகங்களை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. 


 சர்வதேசமே அடக்கம் செய்ய அனுமதி வழங்கியிருந்த பின்னணியில் இலங்கை அரசாங்கம் மட்டும் கடுமையான போக்கைக் கடைபிடித்தமை சிறுபான்மை முஸ்லிம்களை மட்டுமல்ல, கிறிஸ்தவ சமூகத்தையும் நோகடித்தது. 


 அரசாங்கம் இறந்த சடலங்களுடன் ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றது என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. 


 மட்டுமல்லாது, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கூட அரசாங்கத்தின் இந்த கடும்போக்குக் கொள்கைக்கு எதிராக பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 


 இவ்வாறான எந்த நடவடிக்கைக்கும் செவிசாய்க்காத அரசாங்கம் திடீரென கொரோனாவுக்கு அனுமதியை வழங்கியது. ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கொள்கையை தூக்கிப்பிடிக்கும் இனவாத குழுக்களுக்கு அரசாங்கத்தின் இத்தீர்மானம் பேரிடியாக அமைந்தது. 


 .நா. மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத் தொடரின் ஆரம்பம், பாகிஸ்தான் பிரதமரின் வருகை என்பன தான் அரசாங்கத்தின் இத்தீர்மானத்துக்கு காரணம் என பல தரப்பிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்படால் இல்லை. 


 தமிழ் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிலர் முஸ்லிம்களின் கொரோனா சடலங்களை எரிக்கும் நடவடிக்கை அநீதமானது என்ற கருத்தை பாராளுமன்றம் உட்பட பல இடங்களிலும் தெரிவித்து வந்தனர். ஆர்ப்பாட்டங்களில் கூட பங்கேற்றனர். 


 இவர்களது இந்த ஆதரவு கிழக்கிலுள்ள முஸ்லிம் பெரும்பான்மை சமூகத்துக்கு ஓர் ஆறுதலாகவும் காணப்பட்டது என்ற கருத்து சமூக ஊடகங்களில் குரல்களாகவும், வட்ஸ்அப் பதிவுகளாகவும் சிதறிக் காணப்பட்டன.


 அடக்கம் செய்ய அனுமதியை வழங்கிய அரசாங்கம் அதனை முன்னெடுக்கும் வழிகாட்டலை வெளிப்படுத்துவதிலும் தாமதத்தை ஏற்படுத்தியது. நாளுக்கு நாள், மணித்தியாலத்துக்கு மணித்தியாலம், நிமிடத்துக்கு நிமிடம் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த முஸ்லிம் சமூகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ள வழிகாட்டலும் பெரும் சிக்கலானதாகவே அமைந்துள்ளது.


 முஸ்லிம் மக்கள் மன்னார் உட்பட கிழக்கு மாகாணத்திலும் பல்வேறு தனிப்பட்ட இடங்களை வழங்க அனுமதி வழங்குவதாக கூறியிருந்த போதிலும் அவை எதனையும் பொருட்படுத்தாது விஞ்ஞான தொழில்நுட்ப குழு இரணைத்தீவு பகுதியை அடையாளப்படுத்தியது


 நீரில் பரவும் என்ற இல்லாத பேய் ஒன்றை கண்டு பயந்து போயுள்ள அப்பிரதேச அப்பாவி மக்கள் இந்த நல்லடக்கத்தை முன்னெடுக்க எதிர்ப்பை வெளியிடுவது நியாயமானது என்று ஒரு பொது மகன் கூறினால் அது பிழையாகாது.


 கொரேனாவை அரசியலாக்கியது போன்று கொரோனாவில் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் இடத்தை தெரிவு செய்வதனையும் கூட, ஓர் அரசியல் இலாபம் தேடும் நடவடிக்கையாக மாற்றுவதற்கு இந்த விஞ்ஞான தொழில்நுட்பக் குழு தவறவில்லை என்பதுதான் மக்கள் மனங்களில் பதிந்துள்ள ஆழமான கவலையாகும். 


 கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடுதீவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் குடியேறிவருகின்றனர். சுமார் 165 குடும்பங்கள் அங்கு குடியேறியுள்ளதாக வடக்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.


 இவ்வாறு தமிழ் மக்கள் உள்ள பிரதேசத்தைத் தெரிவு செய்து அப்பகுதியில் முஸ்லிம்களின் கோவிட் மரண ஜனாஸாக்களை அடக்கம் செய்ய எடுத்துள்ள இந்த தீர்மானம், கொரோனா ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் தமிழ் மக்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது காட்டிய ஆதரவையும் இதனடியாக கட்டியெழுப்பப்பட்ட முஸ்லிம்களுடன் உள்ள உறவையும் சீர்குழைப்பதற்கான ஒரு சதியாக இருக்குமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 ஜெனீவா கூட்டத்தொடரின் அடுத்த கட்ட நகர்வுகள், பிரித்து அரசியல் மேயும் தந்துரோபாயம், பெரும்பான்மை இனவாதிகளை சமாதானப்படுத்தும் உத்தி ஆகியனவா இந்த இரணைத்தீவு நல்லடக்க விவகாரத்தின் பின்னால் அமைந்திருக்கின்றது? என்ற சந்தேகத்தை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என்பது தெளிவான உண்மையாகும்.


நீரில் பரவாது என்றிருக்கும் போது பரவும் என்ற பயம் எதற்கு?. சுகாதார முறைகளைப் பேணி எல்லா மையவாடிகளிலும் நல்லடக்கம் செய்ய அனுமதி கொடுக்க ஏன்?  அரசாங்கம்  தயக்கம் காட்டுகின்றது என்ற கேள்வி நியாயமாக சிந்திக்கும் அனைவரின் உள்ளங்களிலும் காணப்படுகின்றது என்பது வெளிப்படையான உண்மையாகும்.   (மு)

- முஹிடீன் எம்.எம்.

 

 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.