சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ள ஒரு தொகை கொவிட் தடுப்பூசிகளை சீன தூதுவர் ஷீ சென்ஹொங் (Qi Zhenhong) அவர்கள் இன்று (31) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

ஜனாதிபதி அவர்கள் சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின் அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளின் பிரகாரம் இந்த தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

சீனாவின் பீஜிங் தலைநகரில் உள்ள தேசிய பயோடெக் ஔடத நிறுவனம் “சினோபாம்” கொவிட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்துள்ளது. 6 இலட்சம் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டு ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யுஎல் 869 விமானம் இன்று முற்பகல் 11.28க்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

விமானத்தின் விசேட குளிரூட்டியில் களஞ்சியப்படுத்தப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ள தடுப்பூசிகள், விமான நிலைய வளாகத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்படும். அதன் பின்னர் குளிரூட்டப்பட்ட வாகனங்களில் சுகாதார அமைச்சின் மத்திய தடுப்பூசி களஞ்சிய தொகுதிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள சீன நாட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கள் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கை மக்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை விசேட நிபுணர் குழுவொன்றினால் ஆராயப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்படும் என்று ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

6 இலட்சம் தடுப்பூசிகளை கையளிப்பதற்கான ஆவணங்களில் சீன தூதுவர் ஷீ சென்ஹொங் (Qi Zhenhong) மற்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, பிரசன்ன ரனதுங்க, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, தாரக பாலசூரிய ஆகியோரும் சீன தூதுக் குழுவினர், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசியர் ஜயநாத் கொலம்பகே, சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்சீவ முனசிங்க, விமான நிலையங்கள், விமான சேவை நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.எச்.சந்திரசிறி ஆகியோரும் அமைச்சுக்களின் செயலாளர்கள், சுகாதார துறை முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.