சஹ்ரானுடனுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். அவரை விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபருக்கு ஆலாேசனை வழங்கிய மறைமுக சக்தி யார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விளையாட்டில் ஊக்க பதார்த்தம் பயன்பாட்டிற் கெதிரான சமவாய சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி பாணந்துறையில் ஒருவர் கைது செய்யப்படுகின்றார். இராணுவ புலனாய்வு பிரிவினால்தான் அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரை விசாரணை மேற்கொண்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு ஒப்படைத்தார்கள். பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் அந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்தன.

குறித்த நபர் 2017 இல் குருணாகலையில் கெகுணுகாெள்ள பிரதேசத்துக்கு சென்று, தற்போது அரசாங்கம் அறிவித்திருக்கும் பிரதான சூத்திரதாரியான நெளபர் மெளலவியின் வீட்டுக்கு சென்று அவரின் மகனுக்கு உபதேசம் ஒன்றை செய்திருக்கின்றார். அந்த நேரத்தில் அவர் சஹ்ரானுடன் சம்பந்தப்பட்ட 20 பேரை சந்திக்கின்றார். அப்போது தங்களின் பிரசாரங்களுக்கு உதவுமாறு சஹ்ரான் அவருக்கு ஆலோசனை வழங்கி இருக்கின்றார்.

அத்துடன் குறித்த நபர் சஹ்ரான் மற்றும் நெளபர் மெளலவியுடன் நீண்ட காலம் தொடர்பு வைத்திருப்பது தொடர்பான தகவல்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவு நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கின்றது.

அதன் பிரகாரம் அவரை 2019 ஒக்டோபர் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தி, குற்றப்பத்திரிகை ஒன்றை சமர்ப்பித்திருக்கின்றது. அதில் குறித்த நபர் சஹ்ரானின் போதனைகளை பரப்பும் அடிப்படைவாத நிலைப்பாட்டில் இருப்பவர். அதனால் அவரை தனி சிறைக்கூடத்தில் வைக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்று வெற்றி பெற்ற பின்னர் இந்த விசாரணையை மேற்கொண்டு சென்ற புலனாய்வு பிரிவு மற்றும் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் அனைவரையும் இடம்மாற்றி புதியவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

ஆனால் 2019 டிசம்பர் 9 இல் இருந்து 2020 செப்டம்பர் 30 ஆம் திகதி வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த நபர் தொடர்பில் எந்த விசாரணையும் இடம்பெறவில்லை. பீ அறிக்கை ஒன்று கூட நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கவில்லை.

ஆனால் 2020 செப்டம்பர் 18 ஆம் திகதி சட்டமா அதிபர் குற்ற விசாரணை பிரிவுக்கு கடிதம் ஒன்றை எழுதி அதில், குறித்த நபர் தொடர்பில் தொடர்ந்தும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள எந்த தகவலும் இல்லை அதனால் அவரை விடுதலை செய்யுமாறு தெரிவித்துள்ளார்.

எமது அரசாங்க காலத்தில் குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்து, சஹ்ரான் மற்றும் வேறு நபர்களுடன் நேரடி தொடர்புகளை மேற்கொண்டவர் என குற்றம் சுமத்தியிருந்த நிலையில், அவரை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டிருக்கின்றார்.

அதுமாத்திரல்லாது, குறித்த நபர் 2020 ஜுன் மாதம் 10 ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை உயர் நீதிமன்றுக்கு சமர்ப்பித்திருக்கின்றார். அதில் அவர் இராணுவத்தின் புலனாய்வு பிரிவின் தகவல் வழங்குபவராக செயற்படுபவராக இருந்ததை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்த நபர் இராணுவத்தின் புலனாய்வு பிரிவுடன் செயற்பட்டதாக ஏற்றுக் கொண்டுள்ளார். அதேநேரம் இவர் சஹ்ரானின் குழுவுடன் செயற்பட்டிருப்பதை புலனாய்வு பிரிவும் கண்டுபிடித்துள்ளனர். அவ்வாறு செயற்பட்டவரையே சட்டமா அதிபரின் கோரிக்கைக்கமைய விடுதலை செய்திருக்கின்றார்கள். இது எவ்வாறு இடம்பெற முடியும்? இவரை விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபருக்குக்கு ஆலாேசனை வழங்கியது யார்? பாரிய குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருக்கும் இந்த நபரை எவ்வாறு விடுதலை செய்ய முடியும்?

ஆனால் தாக்குதல் தொடர்பில் எந்த குற்றச்சாட்டும் இல்லாத பலர் இன்று வருடக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஐ.எஸ்க்கு எதிராக கவிதை எழுதிய இளம் கவிஞர் இன்சாப் எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அரசாங்கம் இந்த விசாரணையை மறைப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

நெளபர் மெளலவி மீது குற்றத்தை சுமத்தி இந்த விசாரணையை மூடிவிடவே முயற்சித்தார்கள். ஏனெனில் இந்த விசாரணைகள் தொடரும்போது இன்னும் பல உண்மைகள் வெளிவருகின்றதை தடுப்பதற்கே இதனை மூடிவிட இவர்கள் முயற்சிக்கின்றனர் என்றார்.

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம் - வீரகேசரி)

නවුෆර් මුව්ලවි මහ මොලකරු ලෙස තෝරාගත්තේ ෆයිල් එක වහන්න ද?

නවුෆර් මුව්ලවි මහ මොලකරු ලෙස තෝරාගත්තේ ෆයිල් එක වහන්න ද?

Posted by Mujibur Rahman on Wednesday, April 21, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.