ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவுக்கே இவ்வாறானதொரு நிலைமை என்றால் , எதிர்க்கட்சியினரதும் ஏனையோரதும் நிலைமை எவ்வாறிருக்கும் என்று சிந்திக்க வேண்டும்.

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறியதைப் போன்று இலங்கையில் தற்போது ஹிட்லர் ஆட்சியா முன்னெடுக்கப்படுகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பினார்.

மேலும் இலங்கையில் எதிர்காலத்தில் சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை போன்றதொரு ஆட்சி உருவாகும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமற்ற ஜனநாயகமற்ற ஆட்சி இலங்கையில் உருவாகக் கூடும் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிறுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடுபவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இதன் மூலம் அவர்களது குரலை முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னின்று செயற்பட்ட மகா சங்கத்தினர் விஜேதாச ராஜபக்ஷ போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஆளுந்தரப்பின் பங்காளி கட்சிகள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தனித்து செயற்பட ஆரம்பித்துள்ளனர். இதன் மூலம் அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தெளிவாகிறது.

இவ்வாறான நிலையில் இலங்கையில் எதிர்காலத்தில் சீனா கம்யூனிஸ்ட் கட்சியைப் போன்ற ஆட்சி தோற்றம் பெறும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

சீனாவில் மாற்று கருத்துக்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது. அதனை ஜனநாயக ஆட்சியாகக் கருத முடியாது. இவ்வாறு ஜனநாயகமற்ற ஆட்சி இலங்கையிலும் உருவாகும் என்று கூறுவது பாரதூரமானதொரு விடயமாகும்.

அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினரான விஜேதாச ராஜபக்ஷவுக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது என்றால் , எதிர்க்கட்சியினர் மற்றும் ஏனையோர் நிலைமை எவ்வாறிருக்கும் என்று சிந்திக்க வேண்டும்.

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறியதைப் போன்று ஹிட்லர் ஆட்சி தான் தற்போது முன்னெடுக்கப்படுகிறதா ? சீனி மோசடி , புற்று நோய் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்தவர்கள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவிப்பவர்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறான சூழலில் நாம் நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.

(மனோசித்ரா - வீரகேசரி)


විපක්ෂ නායක කාර්යාලයේ පැවැත්වෙන මාධ්‍ය හමුව සජීවීව

විපක්ෂ නායක කාර්යාලයේ පැවැත්වෙන මාධ්‍ය හමුව සජීවීව

Posted by Samagi Jana Balawegaya on Saturday, April 17, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.