நீர்கொழும்பு வைத்தியசாலையில் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட ஒருவர் 2 மணித்தியாலங்களின் பின் கண் விழித்தார்.

வைத்தியர்களால் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் மீண்டும் உயிர் பெற்ற சம்பவம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.

குறித்த நபர் தற்போது அதே வைத்தியசாலையில் சாதாரண வோர்டில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நீர்கொழும்பு துங்கல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த எலேக்சாண்டர் சில்வா என்ற 45 வயதான ஆண் நேற்று (09) சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது கருதி சுற்றோட்டத்தில் சீனியின் அளவு குறைவடைந்தமையினாலேயே குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எலேக்சாண்டரின் மனைவியால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவருக்கு அங்கு வைத்தியர்கள் சிகிச்சையளித்துள்ளனர்.

அவ்வாறு சிகிசையளிக்கப்பட்டு வந்தவர் மரணமானதாக வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து வைத்தியசாலையின் பிரேத அறையில் அவரை வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அப்போது எலேக்சாண்டரின் மனைவி கதறி அழுதுள்ளார்.

இவ்வாறு அவர் அழும் போது எலேக்சாண்டரின் முகம் அசைந்துள்ளது.

இதனை அவதானித்த எலேக்சாண்டரின் மனைவி தனது கணவன் மரணிக்கவில்லை என்பதை கூறியுள்ளார்.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட வைத்தியசாலை ஊழியர்கள் எலேக்சாண்டரை 4 ஆம் இலக்க வாட்டில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும் மரணமானதாக தெரிவிக்கப்பட்ட நபர் சுமார் 2 மணித்தியாலங்களாக பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தார்.

இது குறித்து எலேக்சாண்டரின் மனைவி கூறுகையில், நான் அவரை சென்று பிரேத அறையில் பார்க்கும் போது அவர் மேல் துணியொன்று போர்த்தப்பட்டு இருந்தது. அப்போது நான் அழ ஆரம்பித்தேன். அப்போது அவரின் வாய் அசைந்தது. அப்போது அவர் கிடத்தப்பட்டிருந்த டிரோயிலில் இருந்து கிழே இறங்கி கட்டிலை நோக்கி சென்றார். இப்போது அவர் நலமாக இருக்கின்றார். மன்னர் அவர் இறந்தாகவே கூறப்பட்டது´ என்றார்.

எவ்வாறாயினும் குருதியில் சீனியின் அளவு குறைந்தமையால் அவர் மயக்கத்தில் இருந்தாக தற்போது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் எலேக்சாண்டரை பரிசோதித்த வைத்தியர்கள் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அத தெரண

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.