"கடந்த தேர்தலிலே நாம் பல தேர்தல் தொகுதிகளில் தோல்வியடைந்தமைக்கான முக்கிய காரணம் கட்சியின் பிளவாகும். எமது தொலைபேசி சின்னமும் குறுகிய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்திலும், தொலைபேசி சின்னத்திலும் தேர்தலில் போட்டியிடும் போது வாக்குகள் சிதறக்கூடிய நிலை இருந்தது. ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து நாட்டில் இனவாத அரசியல் நடைபெற்றுக்கொண்டிருந்தது" 

என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். நேற்றைய தினம் (07) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எமது சியன நியூஸ் சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அண்மையில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க கெடம்பே விகாராதிபதியிடம் 'ஜனாதிபதிக்கு ஒரு முஸ்லிம் கூட வாக்களிக்கவில்லை' என்று தெரிவித்திருந்தமை தொடர்பில் நாம் வினவிய போது,

அது அவர்களின் மனதில் இருந்து வரும் வார்த்தைகளாகும். உண்மையில் என்னை எடுத்துக்கொண்டால் நான் பதுளை மாவட்டத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் பிரதிநிதி. எனக்கு தமிழர்களின் வாக்குகள் கூடுதலாக இருக்கலாம். முஸ்லிம்களும் எனக்கு வாக்களித்தனர். 

ஆனால் நான் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்றே சொல்கின்றேன். ஒருவர் ஜனாதிபதி எனின் அவர் இந்த நாட்டினது ஜனாதிபதி ஆவார். நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களினதும் ஜனாதிபதி. எங்கள் அனைவரினதும் ஜனாதிபதி. 

அதனை விட்டு நாட்டின் தலைவர்களே பிரிவினைகளை ஏற்படுத்தி செயற்பட்டார்களேயானால் இந்த நாட்டில் இனவாதம், மதவாதம் இருப்பதனை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை என்று தெரிவித்தார்.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.