மீன் போன்ற கடலுணவை உட்கொள்வதில் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லையென்று சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி சட்டத்தரணி திருமதி தர்ஷனி லஹதபுர தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடல் பகுதியில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் இலங்கையின் சமுத்திர சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த சம்பவம் மிகவும் கவலைக்குரியதாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
கப்பலின் இடிபாடுகள் குவிந்து கிடக்கும் கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்வது மிகவும் கடினமான பணியாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.
இவை திக்கோவிற்றவில் இருந்து சிலாபம் கடற்கரைவரையில் கடல் ஊடாக அடிச்த்துச்சென்றிருப்பதாக முன்னர் அறிந்தோம் ஆனால் தற்போது இந்த கழிவுகள் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டிய, அங்குலான, மொரட்டுவை வரையில் சென்றிருப்பதாக தெரியவந்துள்ளது. இவற்றை சுத்தம் செயவதற்கு நீண்ட காலம் செல்லும் .இந்த கப்பல் சட்டரீதியில் எமது துறைமுகத்திற்கு வந்த கப்பல். இதேபோன்று இந்த கபப்பல் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதிலுள்ள சுமார் 15 கொள்கலன்கள் இலங்கை நிறுவனங்களின் தயாரிப்பு நடவடிக்கைகளுக்காக விநியோகிகப்படவிருந்தன. இதனால் ஏனைய துறைமுகங்களினால் நிராகரிக்கப்பட்ட கப்பலை நாம் ஏற்றுக்கொண்ட ஒன்றல்ல என்றும் திருமதி தர்ஷனி லஹதபுர தெளிவுபடுத்தினார்.
இதேவேளை, கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கப்பல் விபத்துக்குள்ளான கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகதிற்கு இரசாயனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை ஏற்றிவந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தின் காரணமாக உயிரினங்களுக்கு கேடு ஏற்படுத்தக்கூடிய இரசாயனப் பதார்த்தங்கள் கடலில் கலந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகின்றது.
இதன்காரணமாகக் கடலுணவுகளை உண்பது தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச நிலையை நீக்கும் வகையில் கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“இதுவரையில், குறித்த சம்பவத்தினால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை.
எவ்வாறெனினும், கப்பலில் விபத்து ஏற்பட்ட நேரத்தில் இருந்து சம்மந்தப்பட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படடுள்ளது.
அதேவேளை, கடலில் கலந்திருக்கக் கூடிய பாதார்த்தங்கள் தொடர்பாகவும், அவற்றினால் உருவாக்கக்கூடிய தாக்கங்கள் தொடர்பாகவும் கண்டறிவதற்கான ஆய்வுகளில் நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
குறித்த ஆராய்ச்சி அறிக்கை கிடைக்கும் வரையில், சம்மந்தப்பட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடிச் செயற்பாடுகளுக்கான தடையை இறுக்கமாக அமுல்ப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலப் பகுதியிலும் நாடளாவிய ரீதியில் கடலுணவுசார் போக்குவரத்துகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனவே, பேலியகொட உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள சந்தைகளில் கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற சந்தேகத்திற்கிடமான கடல் பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இருந்து கொண்டு வரப்படட கடலுணவுகளே விற்பனை செய்யப்படுகின்றன என்ற அடிப்படையில், அவற்றை உட்கொள்வது தொடர்பாக மக்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார் - அரசாங்க தகவல் திணைக்களம்
(Siyane News)