மள்வானை அல்-ஹாஜ் எம்.எச்.ஏ.சஹீட் (மாஸ்டர்) காலமானார்!

மள்வானை காந்தியவலவ்வ எம்.எச்.ஏ.சஹீட் அவர்கள் நேற்று 28/05/2021 அவரது 84 வயதில் இறையடி எய்தினார்.

மள்வானை சஹீட் மாஸ்டர் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட இவர் பல காலம் நோய்வாய்ப்பட்டு ஓய்வு நிலையில் இருந்தார்.

சமூகப்பற்றுமிக்க இவர் ஆரம்ப கல்வியை மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலையில் ஆரம்பித்து காலப்போக்கில் 1959 ஆண்டு காலப்பகுதியில் பாடசாலையின் ஒரு ஆசிரியராகவும் தன்னை இணைத்துக்கொண்டார்.

சமுகத்துடிப்புள்ள ஒரு இளைஞரான மர்ஹும் சஹீட் மாஸ்டர் அவர்கள் எதிலும் துணிவாகப்பேசக்கூடிய ஒருவர் தன்னுடைய சமூக உணர்வின் உச்சமாக தன்னை அரசியலிலும் இணைத்துக்கொண்டு அன்றைய நாட்களில் அரசியல் மேடைகள் பலதிலும் தன்குரலை ஒலிக்கச்செய்தார்.

அகில இலங்கை இஸ்லாமிய சோஷலிச முன்னனியின் உதவிப் பொறுளாளராக தெரிவு செய்யப்பட்டு அன்றைய கல்வியமைச்சர் கலாநிதி காயிதே மில்லத் மர்ஹூம் அல்-ஹாஜ் பதியுதீன் மஹ்மூத் போன்றவர்களின் அன்பைப்பெற்று சமூகப்பிரச்சினைகள் தொடர்பில் நாடுமுழுதும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளத்தொடங்கினார்.

இதன் பிரதிபலனாக அப்போதைய மக்கள் ஐக்கிய முன்னனி அரசாங்கத்தின் கல்வியமைச்சராக பதவியேற்ற மரஹூம் சேர் பதியுதீன் மஹ்மூத் அவர்களின் உதவியுடன் மள்வானை அல்-முபாரக்கின் வளர்ச்சியிலும் ,மள்வானை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பெரிதும் தன்னை அர்ப்பணித்தார்.

ஆன்மிகத்துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்த மர்ஹூம் சஹீட் மாஸ்டர் அன்றைய மள்வானையின் பள்ளிவாசல் சம்மேளனத்தை உருவாக்கி அதனூடாக மள்வானை மக்களிடையே மார்க்கத்தை உரக்கச் சொல்லி சமூக ஒற்றுமைக்கு வழியமைத்தார்.

1984  காலப்பகுதியில் மள்வானை காரியதுன் நபவிய்யா தக்கியாவின் மத்திச்சமாக (நிருவாகி) தெரிவுசெய்யப்பட்ட அவர் அந்நாட்களில் என்னுடைய தகப்பனார் மர்ஹூம் அப்துல் ஹமீட் ஹாஜியார் அவர்களுடன் இணைந்து அப்போதைய ஊர்பிணக்குகள் ,மக்கள் பிரச்சினைகளுக்கு பள்ளிவாசல் ஊடாக தீர்வுகளைப்பெற்றுக்கொடுப்பதற்கு பெரும் பங்காற்றியதாக இன்றும் பலர் சொல்லக்கேட்டிருக்கின்றேன்.

சமூக உணர்வுள்ள மர்ஹூம் சஹீட் மாஸ்டர் அவர்களின் உருவாக்கமே காந்தியவலவ்வ என்ற முஸ்லிம் குடியிருப்புகள் பின்னாளில் அது அதன் நன்றிக்கடனாக சஹீட் ஹாஜியார் மாவத்தை என்று பெயர் பெற்றது ........

இத்தனை சேவை உள்ளம் கொண்ட மர்ஹூம் சஹீட் மாஸ்டர் ஓய்வு நிலையிலும் தன்னால் முடிந்த ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வில் மள்வானை முஸ்லிம் ஆய்வு வட்டத்தை உருவாக்கினார் ......

பாடசாலை காலத்தை நிறைவு செய்து ஊடகத்துறையில் ஆர்வமாக இருந்த என்னையும் (எனது தகப்பனாரின் நண்பரான) அவர் இதில் இணைத்துக்கொண்டார் ......

ஆரம்பத்தில் அவரது பிடியில் இருந்து நழுவிச்சென்ற நான் காலப்போக்கில் அவரது உள்ளுணர்வை உணர்ந்து என்னையும் இணைத்துக்கொண்டேன் .....

மள்வானை மக்களின் வரலாற்றை நூலுறுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அது தன்னுடைய நீண்ட நாள் ஆசை என்பதையும் என்னிடம் சதாவும் நினைவுபடுத்திக்கொண்டேயிருப்பார் .....

ஏதாவது உதவிகள் தேவைப்படும் போதெல்லாம் “அஸ்ஸலாமு அலைக்கும் நான் இங்க ஸஹீட் மாஸ்டர்“ என்று எனக்கு தொலைபேசி அழைப்பெடுத்த நாட்கள் ஏராளம் .........

அவ்வப்போது என்னை வீட்டுக்கு அழைத்து மள்வானையின் வரலாறுகள் ஆவணப்படுத்தப்படவேண்டும் எனவும் அவற்றின் முக்கியத்துவங்கள் பற்றியும் சொல்லிக்கொண்டேயிருப்பார் ......

தன் விடா முயற்ச்சியின் பலனாக 2013 ஆம் ஆண்டு மள்வானை முஸ்லிம்களின் ஆரம்பகால வரலாறு என்ற நூலை வெளியிட்டார் .......


அக்காலப் பகுதியில்  நான் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளராக தெரிவு செய்யப்பட்ட போது என்னை வாழ்த்தி நம்பிக்கையூட்டிய மர்ஹூம் சஹீட் மாஸ்டர் அவ்வப்போது என்னுடைய குரலை கேட்கும் போதெல்லாம் எனக்கு அழைப்பை ஏற்படுத்தி ஆலோசனைகளையும் அறிவுறைகளையும் கூறியதை நன்றியுடன் ஞாபகப்படுத்தவேண்டும்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடும் போது மள்வானையில் அன்று ஏற்பட்ட பிரச்சினைகளின் போது மர்ஹூம் சஹீட் மாஸ்டர் தன்னுடைய ஆழுமை மற்றும் அனுபவத்துடன் மிகத்திறமையாக அவற்றை அந்த நாட்களில் கையாண்டு வெற்றிகண்டவர்களில் ஒருவர் எனவும் அன்றைய மள்வானையில் ஏற்பட்ட பெறும் பிரச்சினைகளில் ஒன்றான வெசாக் கூடு தொடர்பிலான பிரச்சினையின் போது தான் சட்டத்தரணியாக இருந்து மரஹூம் ஸஹீட் மாஸ்டர் மற்றும் இன்னும் பலருடன் செயற்பட்டதாக இரண்டுநாட்களுக்கு முன் நீதியரசர் அல்-ஹாஜ் கபூர் அவர்கள் கூறியிருந்தமையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

ஒரு வர்த்தகராகவும் சிறந்து விளங்கிய மர்ஹூம் சஹீட் மாஸ்டர் வர்த்தகத்துறையிலும் தனக்கென தனிப்பெயரை வளர்த்துக்கொண்டுருந்தார்.

நான்கு ஆண்பிள்ளைகள் மற்றும் ஒரு பெண் பிள்ளையின் தந்தையான மர்ஹூம் சஹீட் மாஸ்டர் சில நாட்களாக சுகயீமாக இருந்த நிலையில் நேற்று 28/05/2021 ஜும்மா பொழுதில் இவ்வுலகை விட்டும் பிரிந்து இறையடி சேர்ந்தார்

ஜனாஸா நேற்று மாலை 5 மணியளவில் மள்வானை ரக்ஸபான ஜும்மா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

வல்ல அல்லாஹ் அவர்களுடைய நல்லமல்களை பொருந்தி மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்கப் பிரார்த்திப்போம்

ஆமீன்

ஏ.எச்.எம்.பௌஸான்

அறிவிப்பாளர்

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.