பிறக்கும்போதே கரண்டியுடன் பிறந்துவிட்ட அம்மாவிற்கு
பால்யத்தில் 
எப்போதோ சிறகு முளைத்ததாய் 
பாட்டி சொல்லக்கேட்டிருக்கிறேன்
முன்னொரு நாள்

சிறகுகள் விரிய 
ஒருநாளேனும்
வானேறிப்பறந்திடத் துடித்த
அம்மாவை 
ஒருபோதும் அனுமதித்ததில்லையாம்
தாத்தா
தன் சிறு கூட்டை விட்டு வெளியேறிட

கூண்டின் 
உரிமை கைமாறிய
பின்னாட்களில்

எரிப்பதற்கு விறகில்லையென
ஒருநாள்
துருத்திக்கொண்டிருந்த 
அம்மாவின் சிறகுகளைப்பிடுங்கி
அடுப்பிலிட்டிருக்கிறார்
அப்பா

அன்றிலிருந்துதான்
கற்றுக்கொண்டிருக்க வேண்டும்
அம்மா
கனவுகளைக் கொன்று
தினமும்
கறி சமைப்பதற்கு

அந்தோ
பிறக்கும் போதே அம்மா 
கரண்டியுடன் பிறந்துவிட்டதாய்த்தான் 
எப்போதும் ஒரு நினைப்பு 
அப்பாவிற்கு!!!

-ரிஸ்கா முக்தார்-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.