கவிஞர் அலறியின் துளி அல்லது துகளின் மீது நடனமாடுகின்ற வார்த்தைகள்


-நஸார் இஜாஸ் -இந்த உலகத்தின் மிகச் சிறிய புள்ளி மனிதன். வாழ்க்கையின் ஒவ்வொரு விடயங்களிலும் அவன் தன்னை உட்செலுத்தி மாபெரும் அற்புதத்தை நிகழ்த்திக் காட்ட பெரும் பிரயத்தனங்களை மேற்கொள்கின்றான். வாழ்க்கை கற்றுக் கொடுக்கின்ற பாடங்களிலிருந்து எப்போதுமே தப்பிக்க முடியாத மனிதன் அவற்றை விரும்பியோ, விரும்பாமலோ கற்று வெற்றியுடன், அல்லது தவிர்க்க முடியாத தோல்வியுடன் புறப்பட்டுப் பயணிக்கிறான். ஏனெனில் மனிதன் இப்பெரும் பிரபஞ்சத்தில் மிகச் சிறிய புள்ளி. மிகச் சிறிய புள்ளி என்பதை இன்னுமொரு கோணத்தில் 'துளி அல்லது துகள்' என்றும் சொல்லலாம். கவிஞர் அலறியின் 'துளி அல்லது துகள்' கவிதை தொகுதியும் இதே போன்றதொரு விடயத்தையே சுட்டிக் காட்டி நிற்கின்றது.

'துளி அல்லது துகள்' தொகுதியிலுள்ள கவிதைகளை படிக்கின்ற போது அவை வித்தியாசமான கண்ணோட்டத்தில்எழுதப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. பெரும்பாலான கவிஞர்களின் கவிதை தொகுதியை புரட்டிப் படிக்க முற்பட்டதன் ஆரம்பத்திலேயே எல்லா கவிஞர்களையும் போன்றே இவருடைய கவிதைகளின் சாரமும் கட்டமைப்பும் உருவாக்கப்பட்டிருக்கின்றது என மூடி வைத்து விட்டுச் செல்ல முடியாத அளவுக்கு இவருடைய கவிதைகளின் அமைப்பையும்விடயப்பரப்பையும் நாம் கூர்ந்து நோக்க வேண்டியகட்டாயத்துக்கும் ஆட்படுத்தப்பட்டிருக்கின்றோம். அதற்கான காரணத்தை பின்னால் படிப்படியாக சுட்டிக் காட்டுகின்றேன்.

தனது கவிதைகளில் கற்பனைகளைவிருட்சமாக்கியோ அல்லது மிகத் தொலைவிலுள்ள விடயங்களையோ கவிஞர் அலறி சொல்லித் தீர முற்படவில்லை. தான் வாழ்கின்ற சூழலில் மிதந்து கொண்டிடிருக்கின்ற விடயங்களை கொண்டு தனது சொற்களை கவிஞர் அலறி தனது கவிதைகளில்கோர்த்திருக்கின்றார். கவிஞர் அலறி மருதமுனையைச் சேர்ந்தவர் என்பதால் இங்கு இன்னுமொரு விடயத்தையும் ஒப்பீட்டளவில் சமப்படுத்திக் காட்டவும் வேண்டியிருக்கிறது. இன்று மருதமுனையில் எழுத்தை சுவாசிக்கின்ற எழுத்தாளர்களில் கவிஞர் ஜமீலின் 'மீதமிருக்கும் சொற்கள்', கவிஞர் றியாலஸின் 'யசோதரையின் வீடு', கவிஞர் டீன் கபூரின் 'சொற்களில் சுழலும் பிரபஞ்சம்' கவிஞர் ஹரீஷாவின் 'சொட்டும் மிச்சம் வைக்காமல்' போன்றோரின் கவிதை தொகுதிகளை ஒரு சேர வைத்துப் பார்ப்போமேயானால், எல்லா கவிஞர்களும் கவிதைகளின் நாடித் துடிப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு பயணிப்பவர்கள் எனப்தை புரிந்து கொள்ளலாம்.குறிப்பாக, ஜமீல், றியாலஸ், டீன் கபூர், ஹரீஷாமற்றும் அலறி என அத்தனை பேரும் கவிதையின் உச்சத்தில் உட்கார்ந்து கொண்டு எழுத்தில் சிகரங்களை தொடுவதற்காக வெற்றியின் மெல்லிய கோட்டில் பயணித்துக் கொண்டிருப்பவர்கள். அதே போன்ற ஒற்றுமையைத்தான் கவிஞர் அலறியின் சொற்களிலும் நான் காண்கிறேன். வித்தியாசமானதும் தேவையில்லாத ஒப்பனைகளையும் அகற்றி, மிகைப்படுத்தல் இல்லாத சொற்களை கொண்டு கவிஞர் அலறி கவிதையின் களத்தைப் பூர்த்தி செய்திருக்கிறார்.

வாழ்வின் நிகழ்நிலைப் போக்கு, பயணங்களில் காண்கின்ற பெறுமானங்கள், பரஸ்பர ஒத்தாசை, தனிமை, அன்பு, பரிதவிப்பு, ஏக்கம் என எல்லாப் பாகங்களையும் அடிப்படையாக வைத்து கவிஞர் அலறி தனது கவிதைகள் ஒவ்வொன்றையும் எழுதியிருக்கிறார். அத்தோடு தான் சொல்ல வந்தவிடயத்தை நேரடியாகவும் தெளிவாகவும் குறுகிய வார்த்தைகளுக்குள்ளால் சொல்லி நகர்த்தியிருக்கிறார். 

இவருடைய 'துளி அல்லது துகள்' என்ற இக்கவிதை தொகுதியில் உள்ள கவிதைகளை ஒரு சேரப் படித்துப் பார்க்கின்ற போது இவை அத்தனையும் மிக அண்மித்த காலங்களில் இவரால் எழுதப்பட்ட கவிதைகள் என்பதை தெளிவாக உணர முடிகின்றது. இத்தொகுதியில்மொத்தமாக 32 கவிதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதில் உள்ளடக்கப்பட்டுள்ள கவிதைகளில் 'வேட்பாளன்' என்ற கவிதை நிகழ்காலவிடயங்களை பேசிக் கடப்பதாய் அமைந்துள்ளது. அதாவது, பரந்துபட்ட சமூகத்தின் வாழ்வியலில் மனிதன் தனக்கான தலைமையை தேடிய படியே பயணிக்கின்றான். தன்னை வழி நடாத்துவதற்கு பொருத்தமானவன் யார்? அவனை எங்கிருந்து பெறுவது என்ற பல தேடல்கள் மனிதனுக்குஇருக்கின்றது. அவற்றில் தேர்தல் முறைமை மிக முக்கியமானதும் மக்களிடையே வரவேற்பை பெற்றதுமாகும். அப்படி தேர்தல் முறையையும் வேட்பாளரையும் பற்றிப் பேசுகின்ற ஒரு களமாக இவருடைய குறித்த 'வேட்பாளன்' என்ற கவிதை அமைந்துள்ளது. வேட்பாளனாக தான், பயணிக்கின்ற போது தொண்டர்களான நாளைய தலைவனாக வரப் போகின்ற ஒருவனை கொண்டாடுகின்ற விதமும் அவனுடைய எதிர்கால செயற்திட்டங்களை எவ்வாறு ஒரு வேட்பாளன் எதிர்கொள்ளப் போகிறான் என்ற விடயத்தையும் அடிப்படையாகக் கொண்டதாக இக்கவிதை அமைந்துள்ளதை காண முடியும். போட்டி முனையில் வார்த்தைகள் கூரியதாக வந்து விழுவதையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதைப் பேசுவதாய் இவருடைய இக்கவிதை அமைந்துள்ளது.

அதே போல இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள 'துளி அல்லது துகள்' என்ற கவிதையும் மிக முக்கியமானதாகும். இத்தொகுதியின் பிரதான கவிதையும் அதுதான். மனித சமூகம் என்னதான் நவீனத்தின் பின்னால் பயணித்தாலும் கடந்த காலங்களில் மேற்கொண்ட பயணத்தையும் வாழ்வியல் போக்கையும் மறந்தே மனிதர்கள் பலர் பயணிக்கிறார்கள். அவற்றை மறந்து நவீனம் என்ற கட்டடக் காடுகளுக்குள் வாழ்வைத் தொலைத்து அலைகிறார்கள். ஒட்டகைகள், நெடுவழிப்போக்கர், தீக்காற்றாக வியர்த்து வழிகின்ற வியர்வையோடு பயணிக்கின்ற மனிதனையும் வறுமையில் தவண்டாலும் எரிந்து சாம்பலாகிய வனத்தில் விதைத்தெழுகின்ற முளையைப் போன்று வாழ்வில் அரும்பாடுபட்டு வாழ்க்கையில் ஜீவனோபாயம் காண்கின்ற மக்களைப் பற்றியும் பல இடங்களில் கவிஞர் பேசியிருக்கிறார். இக்கவிதையின் இறுதியில் மொத்தமாக சொல்ல வருவது யாதெனில், என்னதான் நாம் கடந்த காலங்களை மறந்து பயணித்தாலும், வாழ்வில் முன்னேற்றம் இல்லாது போனாலும், முன்னேற்றம் கண்டு பயணித்தாலும்கூட எல்லாமே இப்பெரும் அண்டத்தில் துளி அல்லது துகளே என ஆணித்தரமாக தனது கவிதையில் கவிஞர் அலறி தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.


மாகடலும், விரிபாலையும்

பெருங்காடும், நெடுவானும்

ஐம்பூதங்களும்

அண்டத்தில் துளி அல்லது துகள்


கவிஞர் அலறியைப் பற்றி சொல்ல வேண்டுமானால், இவர் கிழக்கிலங்கையின் மருதமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். அப்துல் லத்தீப் றிபாஸ் என்ற இயற்பெயருடைய இவர், 'அலறி' என்ற புனைப்பெயரில் தனது இலக்கியப் பணியை மேற்கொண்டு வருகின்றார். சட்டத்துறையில் தனது இளமாணிப் பட்டத்தைப் பூர்த்தி செய்துள்ளதோடு மனித உரிமைகள், பொதுச் சுகாதாரம், உளவளத்துணை என்பவற்றில் டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுவரை பூமிக்கடியில் வானம், பறவை போல சிறகடிக்கும் கடல், எல்லாப் பூக்களும் உதிர்ந்து விடும், மழையை மொழிதல், ஆகிய தொகுதிகளை வெளியீடு செய்துள்ளார். இது இவரின், ஐந்தாவது தொகுதியாகும்.  

இலக்கியப் பரப்பில் தன்னை ஆள உட்செலுத்தி அற்புதமான கவிதைகளை எழுதியிருக்கின்றகவிஞர் அலறியின் எழுத்துக்கள் காலத்துக்கும் கொண்டாடப்பட வேண்டியது. இம்மாபெரும் பிரபஞ்சத்தில் இவருடைய 'துளி அல்லது துகள்' தொகுதி மூட்டை நிறைய சமூகத்துக்குத் தேவையான விழிப்புணர்வை காலம் காலமாக சுமந்து செல்லும் என்பதே உண்மையாகும். அதனை கண்ணூடே காண நாம் சில காலம் பொறுத்திருக்கத்தான் வேண்டும். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.