கொழும்பு துறை முகத்திற்கு அருகாமையில் தீ பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்கு, இந்தியா மற்றும் கட்டார் நாடுகளின் இரண்டு துறைமுகங்களிலும் பிரவேசிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்ட பின்னரே ,இங்குவந்ததாக வெளியிடப்பட்ட தகல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த கப்பலில் ஏற்பட்ட தீ குறித்த விடயங்களை தெளிவுபடுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) விசேட செய்தியாளர் மகாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா இதுதொடர்பாக தெரிவிக்கையில் ,இந்த கப்பல் இந்தியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் துறைமுகங்களில் சில கொள்கலன்களை இறக்கிய பின்னரே இங்கு வந்ததாக தெரிவித்தார்.

தற்போது இந்த கப்பல் இரண்டாக பிளவுபட்டு சிதறும் அனர்த்தம் இல்லை என்று இந்த செய்தியாளர் மகாநாட்டில் கலந்துகொண்ட கடற்படை தளபதி கூறினார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்திற்கு உள்ளானதையடுத்து இலங்கை சமுத்திர சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை முழமையாக மதிப்பீடு செய்யும் வரையில் துரித செயற்பாடாக உடனடி இழப்பீட்டு தொகையை அறவிடுவதற்கு தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக செய்தியாளர் மகாநாட்டில் கலந்துகொண்ட சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தின் காரணமாக சமுத்திர சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்த போதிலும் மீன் உள்ளிட்ட கடலுணவை உட்கொள்வதில் எந்தவித அச்சத்தையும் பொது மக்கள் ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்று கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

நீர்கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் ஒரு நாள் மீன்பிடி வள்ளங்களின் நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரையில் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ,இந்த பிரதேசங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு நிவாரண கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.