ஸபர் அஹ்மத் 

பங்களாதேஷ் பற்றி முதன்முதலில் கேள்விப்பட்ட சகலருக்கும் அது  ஒரு குப்பை என்றே சொல்லப்பட்டு இருக்கிறது. 90களிலிருந்து பங்களாதேஷ் பற்றிய செய்திகளைப் பத்திரிகைகளில் படித்த போது தேசமே வறுமைக் கோலம் பூண்ட ஒரு பரம தரித்திரம் என்பதைத் தவிர வேறு நல்ல அபிப்பிராயங்கள் எதுவும் ஏற்பட்டு இருக்கவில்லை.

இருபாண்டுகளுக்கு முன்பு குவைத்துக்கு தொழிலுக்குச் சென்ற பெண் ஒருத்தி யாரோ பங்களாதேஷ்காரனை திருமணம் செய்து கொண்டு ஊருக்கு வந்து இருந்த போது "வேற வேலையே இல்லையா "என்று  இன்னும் ஆச்சர்யம் ஏற்பட்டது..

விகடனில் யார் யாரோ " பங்களாதேஷ் தலை நகர் டாக்காவே ஒரு சேரி மாதிரி இருக்கும்" என்றெல்லாம் பயணக்கட்டுரை எழுதி இருந்தார்கள்.

இப்படியே தொடர்ந்து கடந்த இருபதாண்டுகாலமாய் பங்களாதேஷ் பற்றி அவநம்பிக்கையும் முட்டாள்கதைகளுமே உலாவின. பங்களாதேஷ் ஆசியாவின் விபச்சார மத்திய நிலையம் என்று அல்ஜெஸீரா ஒரு முறை டாக்குமெண்டரி வெளியிட்டு இருந்தது..

அகண்ட இந்தியா 1947 ஆம் ஆண்டு மத விகிதாசாரத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட போது இன்றைய பாகிஸ்தானுடன் கிழக்கு பாகிஸ்தானாய் ஸ்பேர் பார்ட்ஸ் போல ஒட்டிக் கொண்டது பங்களாதேஷ்.தினசரி ஆட்சிக் கவிழ்ப்பு, நாளொரு ஊர்வலம் ,பொழுதொரு தடியடி என்று பாகிஸ்தான் 60களின் இறுதியில் திணறிக் கொண்டிருக்க தரைத் தோற்றத்தில் சிறிதும் சம்பந்தமே இல்லாமல் எங்கோ இருந்த  பங்களாதேஷ் ஒட்டுமொத்தமாய்ப் புறக்கணிக்கப்பட ஏகப்பட்ட புரட்சிக் குழுக்கள் உருவாகி தமக்கு சுயாட்சி கேட்டு கலகம் செய்ய துண்டைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தது பாகிஸ்தான்.

இஸ்லாம், எந்த இனக்குழுக்களையும் இணைத்துவிடும் என்று ஆணித்தரமாய் நம்பி இருந்தார் பாகிஸ்தான் ஸ்தாபகர் முஹம்மட் அலி ஜின்னா.ஆனால் தமது மொழி ,பண்பாடு, இனம் , சுயமரியாதைதான் முக்கியம் என்று தற்போதைய பிரதமர் ஹஸீனாவின் தந்தை ஷேய்க் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் சகல அதிகாரமும் பொருந்திய பாகிஸ்தானின் மாநிலமாய் பங்களாதேஷை மாற்றக் கோரி வெடித்த போராட்டம் இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் கடைசியில் 71 இல் தனிநாடாய் மலர்ந்தது..

வறுமைக்கும் பஞ்சத்திற்கும் பிறந்த பாலகன் பங்களாதேஷ் .எழுந்து நிற்பது எப்படிப் போனாலும் தவழவே திணறிக் கொண்டு இருந்தது. உலக நாடுகள் துணி ஏந்திக் காணிக்கை செலுத்தின.மூச்செடுக்க வழியின்றி கியூபாவுக்கு சணல் துணிகள் ஏற்றுமதி செய்த போது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து கெளரவித்தது.குடும்பத்திற்கு சாப்பாடு தேடிப் போனவனை பொலிஸ் அடித்த மாதிரி..

யாரும் கண்டுகொள்ளாத பங்களாதேஷ்.ஏதோ பிழைப்புக்கு துணி தைத்து ஏற்றுமதி செய்கிறது என்பதைத் தவிர பொருளாதார மெக்சின்களில் எந்த வெளிச்சமும் பட்டு இருக்கவில்லை.ஆனால் 2019 ஆம் ஆண்டில் எல்லாம் தலை கீழாய் மாறின.உலக அரங்கில் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட ஏழாவது நாடு என்று ஆக மொத்த தேசிய உற்பத்தி எகிற தனிநபர் வருமானத்தில் தன் முன்னாள் அப்பன் பாகிஸ்தானை ஓவர் டேக் செய்துவிட்டு பொருளாதார வளர்ச்சி வீதத்தில் இந்தியாவையும் தாண்டி ஆசியாவில் இரண்டாவதாய் பரிணாமம் எடுத்தது.ஶ்ரீ லங்காவைக் கூப்பிட்டு 'ரொம்ப நொந்து போய் இருக்கிறாய்டா..இந்தா பிடி 'என்று கடன்கொடுத்தது.

பங்களாதேஷின் கல்வியறிவு வீதம், ஆயுள் காலம் ,சுகாதாரக் கட்டமைப்புகள் எல்லாம் இந்தியா பாகிஸ்தானை விட அதிகம்.உலக ஆடை ஏற்றுமதி வருமானத்தில் சீனாவுக்கு அடுத்ததாய் இரண்டாவது இடம்..பங்களாதேஷின் இந்த திடீர் அபரித வளர்ச்சியில் ஆட்சியாளர்களின் செம்மையான நிர்வாகம்,சுமை இல்லாத வரி,சொந்த மக்களிடம் ஒரு முகமும் சர்வதேசத்துடன் ஒரு முகமும் என்று குரோத அரசியல் செய்து ஏமாற்றாத போக்கு என்று காரணங்களைப் பட்டியிலிட்டுக் கொண்டு போகலாம்..

இன்று சீனக் கடனில் சிக்கி தோற்றுப் போன நாடாய் பாகிஸ்தான் இருக்கிறது.இம்ரான்கானுக்கு முன்னர் வந்த ஆட்சியாளர்கள் பாகிஸ்தானின் கஜானாவை வழித்துத் துடைத்துத் தெருவில் போட்டனர்.பங்களாதேஷும் பிரியாமல் இருந்து இருந்தால் அதுவும் பாகிஸ்தானின் அங்கமாய்க் கடனாளியாகி வீல் சேரில் போய் இருக்கும்..சுதந்திரம் கிடைத்துப் பொன்விழா ஆண்டில் இந்த முன்னேற்றத்தை எல்லாம் பார்த்தே இருக்காது..இப்போதைக்கு பங்களாதேஷ் மத்திய தர பொருளாதார பலம் படைத்த நாடு என்கிறது உலக வங்கி.இலங்கை எல்லாம் ஓடி ஒளிவதற்கு ராட்சத பெட்சீட்டோ முந்தானையோ தேட வேண்டும்.. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.