சேதனப் பசளையைப் பயன்பாட்டுக்கு கொண்டும்வரும் போது எதிர்நோக்கும் சவால்களைப் பொருட்படுத்தாது, மக்களின் நலனுக்காக மக்கள் பிரதிநிதிகள் முன்னோக்கிச் செல்லவேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஆரோக்கியம் மற்றும் வினைத்திறன்வாய்ந்த பிரஜைகளை உருவாக்குவதற்கு, நச்சுத்தன்மையற்ற உணவுக்கான மக்களின் உரிமைகள், 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக, விவசாயத்துறைக்குள் சேதனப் பசளைப் பாவனையைக் கொண்டுவருவது அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடாகும். இந்த நிகழ்ச்சித்திட்டம், சில தரப்பினரின் விமர்சனங்களுக்கு உள்ளான போதும், எதிர்காலத் தலைமுறையின் நலனுக்காக அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று, ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அடுத்த போகம் வரையில் தேவையான உரம் போதுமானளவு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து விவசாய நடவடிக்கைகளையும் தடையின்றி மேற்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களுடன் நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

சேதன விவசாயத்துக்கு மாறுவது அரசாங்கம் திடீரென எடுத்த முடிவன்று. 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்திலும் கடந்த வரவு செலவுத் திட்டத்திலும், இது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும், சேதனப் பசளை தொடர்பில் விவசாயிகளுக்கு அறிவூட்டப்படாமை தேவையற்ற அச்சத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.

சேதனப் பசளை விவசாயத்துக்கு, இலங்கையில் அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலைமாற்றக் காலப்பகுதியில் விவசாயிகள் முகங்கொடுக்க வேண்டி ஏற்படும் கஷ்டங்களை நிர்வகிக்க, அதிகபட்ச நிவாரணங்களை வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

சில தசாப்தங்களாக இரசாயனப் பசளைகளைப் பயன்படுத்திய காரணத்தினால், அதிகளவானவர்கள் பல்வேறு தொற்றா நோய்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலைமைகளில் இருந்து எதிர்காலத் தலைமுறையைப் பாதுகாப்பது நாட்டில் உள்ள அனைவரதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2021.06.08

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.