மனித சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், துணிச்சலான கொள்கைகளைப் பின்பற்றத் தயங்கக்கூடாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்கள் தெரிவித்தார்.

இத்தகைய கொள்கைகள், சூழலியல் பாதுகாப்பை ஆதரிப்பதுடன், உயிர்ப் பல்வகைமை அழிவை எதிர்த்துப் போராட உதவ வேண்டும். மேலும், மக்கள் தங்கள் பொருளாதார அபிலாஷைகளை பல்வேறு பேண்தகு வழிகளில் அடையக் கூடியதாகவும் அவை இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

நேற்று (04) பிற்பகல் இத்தாலியின் ரோம் நகரில் இடம்பெற்ற உலக உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் 48ஆவது கூட்டத்தொடரின் விவசாய சூழலியல் நிகழ்வில் வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

இரசாயன உரப் பாவனையிலிருந்து முற்றாக நீங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் குறித்து, உலக சுகாதாரத் தாபனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து, அதனை கௌரவிக்கும் முகமாக வருடாந்தம் இடம்பெறும் அதன் மாநாட்டில் முதலாவது விசேட உரையை நிகழ்த்துவதற்கு அழைப்பு விடுத்திருந்தது.

காலநிலை மாற்றம் என்பது மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப் பாரதூரமான ஒரு பிரச்சினையாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அதன் பாதிப்பைக் குறைக்க, அனைத்து நாடுகளினதும் உடனடியான கூட்டு நடவடிக்கை தேவைப்படுகிறது எனக் குறிப்பிட்டார்.

செயற்கை உரங்கள் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்வதற்கான எனது அரசாங்கத்தின் தீர்மானமானது, ஆரோக்கியமான மற்றும் சூழலியல் ரீதியாகச் சிறந்த சேதன விவசாய முறைக்கு நீண்டகாலத் தேவைப்பாடாக இருந்துவரும் தேசிய மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இந்த மாற்றத்தின்போது, குறுகியகாலப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். உள்நாட்டு உற்பத்தி மற்றும் சேதன மாற்றீடுகளை வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகள், அதேபோன்று அத்தடையின் மூலம் எழும் பாதகமான பொதுமக்கள் உணர்வுகள் ஆகியவை இதில் அடங்கும்.

எவ்வாறாயினும், தலைவர்கள் என்ற வகையில், நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியிலும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுப்பது எமது பொறுப்பாகும். முடிவுகளை எடுக்க நாம் தயங்கினால், இது போன்ற அத்தியாவசிய முன்னெடுப்புகள் எப்போதும் கலந்துரையாடல் மட்டத்தில் மட்டுமே சுருங்கியிருக்கும் என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

சேதன விவசாயத்தில், எமது உள்நாட்டுத் திறனை வலுப்படுத்த, பல்தரப்பு நிறுவனங்கள், தனிப்பட்ட அரசாங்கங்கள், காலநிலை நிதியங்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அமைப்புகள், வர்த்தகத் துறையினர் மற்றும் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்புகளை எதிர்ப்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

செயற்கை உரங்கள் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்வதற்கான இலங்கையின் தீர்மானம், நீண்டகாலத்தில் உணவுப் பாதுகாப்பு விடயத்தில் எமது அபிலாஷைகளுக்கு உதவும் அதே நேரத்தில், ஒரு பசுமையான பொருளாதாரத்திற்கும் ஆரோக்கியமான சமூகத்திற்கும் வழி வகுக்கும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இலங்கையின் இந்த முயற்சியானது, ஏனைய அரசாங்கங்கள் தங்கள் நாடுகளினதும், அவர்களின் குடிமக்களினதும் பொது நலனுக்காக இதுபோன்ற தைரியமான நடவடிக்கைகளை எடுக்க உந்து சக்தியாக அமையும் என்றும் ஜனாதிபதி அவர்கள் நம்பிக்கை வெளியிட்டார்.

உலக உணவுப் பாதுகாப்பு மாநாட்டு ஏற்பாட்டுக் குழு சார்பாக கருத்து வெளியிட்டுள்ள முன்னணி விஞ்ஞானி கலாநிதி பெர்கஸ் எல். சின்க்ளயார் ஜனாதிபதி அவர்களின் உரையை பாராட்டியுள்ளார்.

"உங்களது தைரியமான கூற்று மற்றும் அதற்காக நீங்கள் முன்வைத்த தெளிவான தர்க்க ரீதியான விடயங்களினால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். இந்த ஆரம்ப சொற்பொழிவு இன்றைய விவசாய சூழலியல் அமர்வில் மட்டுமல்லாமல், முழு மாநாட்டினதும் விவசாய சூழலியல் அறிக்கைக்கும் பங்களிக்கக் கூடியதாகும். உங்களது உரை அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு வழிகாட்டுவதுடன், தேசிய செயற்பாட்டிற்கான ஒரு போக்கையும் உருவாக்கும்.

உங்களது உரை உலக உணவுப் பாதுகாப்பு மாநாட்டிற்கு அப்பால், காலநிலை மாற்றம் குறித்து ஆழமாக ஆராய்ந்து, விவசாய கொள்கைகளின் அடிப்படையிலான நிலையான உணவு முறைகளை நோக்கி நகர்வதற்கான முக்கிய நடவடிக்கையாக அங்கீகரிக்கப்படும். இலங்கை எடுக்கும் இந்த தீர்க்கமான மற்றும் நடைமுறை சாத்தியமான நடவடிக்கைகள் ஏனையவர்களுக்கு உதவும்” என்று கலாநிதி பெர்கஸ் எல். திரு. சின்க்ளயார் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2021.06.05

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.