எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கும், வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கும்  இடையிலான முறுகல் நிலை காரணமாக, ஆளும் கட்சிக்குள் இரு குழுக்கள் உருவாகியுள்ளதாக அறிய முடிகின்றது.

உதய கம்மன்பிலவிற்கு அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் ஆதரவு வழங்கி வருகின்ற நிலையில், சாகர காரியவசத்திற்கு ஆளும் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெலும் மாவத்தையிலுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் அண்மையில் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

உதய கம்மன்பிலவிற்கு எதிராக செயற்படும் விதம் குறித்தே, இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், எதிர்கட்சியினால் உதய கம்மன்பிலவிற்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஆளும் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறான தீர்மானங்களை எடுப்பது என்பது குறித்து தற்போது பாரிய சர்ச்சை தோன்றியுள்ளதாக தெரிய வருகின்றது.

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று நாளை (21) மாலை நடைபெறவுள்ளதாக தெரிய வருகின்றது.

இதன்போது, அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Short News

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.