நேர்காணல் : சில்மியா யூசுப்.

கேள்வி: முஸ்லிம்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க என்ன செய்யலாம்? அரசாங்கத்திற்கு ஆதரவாக நீங்கள் செயற்படுவதன் காரணமென்ன?

பதில்: சண்டையிட்டு போராடிக் கொண்டிருந்தால் சமாதானம் காண முடியாது. இந்த நாட்டில் 80% பெரும்பான்மையான மக்கள் வாழ்கின்றனர் . அவர்களின் உள்ளங்களை நாம் வென்றெடுக்க வேண்டும். அதிகாரத்தில் இருக்கின்ற அரசாங்கத்தோடு நாம் தொடர்ந்தும் மோதிக் கொண்டிந்தால் எம்மால் உரிமைகளைப் பெற முடியாது, சலுகைகளை பெறவும் முடியாது, அபிவிருத்திகளைப் பெறவும் முடியாது. யார் எம் நாட்டில் அதிகாரத்தில் இருக்கின்றார்களோ அவர்களின் உள்ளங்களை வென்று எமது சமூகத்திற்குள் காணப்படும் பிரச்சினைகளை அவர்களினூடாக தீர்க்க வேண்டும். ஏட்டிக்குப் போட்டியாக சண்டையிட்டால் அது எமக்குத்தான் இறுதியில் ஆபத்தாக முடியும். நாட்டில் யார் ஆட்சி செய்தாலும் பரவாயில்லை, அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியோடு இணைந்து எமது உரிமைகளை வெல்வது தான் சிறந்தது.

கேள்வி: அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக முதலில் தெரிவான போது அதிக விமர்சனங்கள் எழவில்லை. ஆனால் தற்போது விமர்சனங்கள் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றனவே...

பதில்: எமது முஸ்லிம் சமூகம் 20 ஆவது சீர்திருத்தத்தையும் , போர்ட் சிட்டியையும் தூக்கி வைத்து பிடித்திருக்கின்றார்கள் என்பதுதான் கவலையான விடயமாகும். போர்ட் சிட்டியாலும், 20 ஆவது சீர்திருத்தத்தினாலும் எமது முஸ்லிம் சமூகத்திற்கு எந்த விதமான பாதிப்பும் வராது. 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தைத் தொடர்ந்து பதவிக்கு வந்த பிரதமராக இருக்கலாம், முதலாவதாக 78 ஆம் ஆண்டு யாப்பை அமைத்த ஜே.ஆர். ஜயவர்தனவாக இருக்கலாம்... அவர்களுக்கு ஏற்றவாறும், காலத்துக்கும் நாட்டிற்கும் ஏற்றவாறும் யாப்புக்களை அமைத்தார்கள். இவை பெரும்பான்மை சமூகத்திற்கு தெரிந்த விடயங்கள். அவர்கள் இவற்றை அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் சில நாடுகளில் உள்ள முகவர்கள்தான் முஸ்லிம்களை குழப்பிக் கொண்டிருக்கின்றார்கள். என் மீது விமர்சனம் செய்பவர்கள் அநேகமானவர்கள் எனது மாவட்டத்தைச் சேர்ந்தவர்களல்ல. கட்சியை ஒரு மதமாகவும், சின்னத்தை ஒரு மதமாகவும், நிறத்தை ஒரு மதமாகவும் பார்க்கின்றவர்களைத் தவிர வேறு யாரும் என் மீது விமர்சனம் செய்ய மாட்டார்கள். என்னுடைய அரசியல் பயணத்தில் நான் எவரையும் ஏமாற்றவில்லை. எனது மாவட்டமானது மூவின மக்கள் வாழும் மாவட்டமாகும். எனவே என் மக்களுக்கு ஒருபோதும் நான் எந்தக் குறையும் வைக்கவுமில்லை. வைக்கவும் மாட்டேன். நான் விமர்சனங்களுக்கு பயந்து ஓடுபவன் இல்லை.

கேள்வி: கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால், கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளீர்கள் என்ற செய்தி வெளியாகியது. இக்கட்சியின் தற்போதைய நிலைப்பாடு என்னவாக இருக்கின்றது?

பதில்: கட்சியில் இருந்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருக்கின்றேன் என்ற விடயம் ஊடகங்களில் பேசப்பட்டு வந்தது. ஆனால் இது விடயமாக எவ்வித எழுத்து மூலமான விபரங்களும் எனக்குத் தரப்படவில்லை. அதே நேரம் தலைவரின்றி எடுக்கப்படும் எந்தவிதமான முடிவுகளையும் நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

கேள்வி: 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு அளித்த நிலையில், அரசின் செயற்பாடுகள் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் திருப்தியளிக்கின்றனவா?

பதில்: 20 ஆவது திருத்தத்தினால் முஸ்லிம்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. அன்று ஜே.ஆர். ஜயவர்தனவிலிருந்து இன்று கோட்டாபய ராஜபக்‌ஷ வரையில் 20 சீர்திருத்த யாப்புகள் வந்திருக்கின்றன. 19 ஆவது சீர்திருத்தத்தை எடுத்துக் கொண்டால், இதனூடாகப் பல பிரச்சினைகள் அன்று நடைபெற்றுள்ளன. இவைகளைத் தெரிந்திருந்தும் முஸ்லிம் சமூகத்தின் சிலர்தான் இதற்கான சர்ச்சைகளைக் கிளப்பிக் கொண்டு அப்பாவி முஸ்லிம்களையும் வழிகெடுக்கப் பார்க்கின்றார்கள். 20 ஆவது திருத்தத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகவோ, உரிமைகள் பற்றியோ எதுவும் கிடையாது. எல்லாக் காலத்திலும் எதிர்க் கட்சிகள் எதிர்க்கும் கட்சிகளாகவே செயற்பட்டுள்ளன. இதனை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவே நான் எதிரணியில் இருந்து இதற்கு ஆதரவாக வாக்களித்தேன்.

கேள்வி: 20 வது சீர்திருத்தத்திற்கும், போர்ட் சிட்டிக்கும் ஆதரவாக வாக்களித்தமைக்கு காரணம் என்ன? எதிர்காலத்தில் இதன் சாதக,பாதங்கள் குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில்: பாதகம் என்பது கிடையாது, காரணம் போர்ட் சிட்டிக்கு வாக்களிப்பதால் எந்த பாதகமும் எமது நாட்டில் நடப்பதற்கு இல்லை. நூற்றுக்கு 90 % வீதமான சாதக அம்சங்கள் இருக்கின்றன. இந்த நாட்டை சிங்கப்பூராக மாற்றுவதற்கான திட்டம்தான் இந்த போர்ட் சிட்டி. இதனை செய்வதனால் இலங்கையின் பெரிய கடன் சுமையும் நீங்கும். எமது இலங்கை வறுமைக் கோட்டில் இருக்கும் நிலையில் இவ்வாறான திட்டம் நன்மையாகவே அமையும். 2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்‌ஷவினால் ஆரம்பிக்கப்பட்டது இந்தத் திட்டம். நான் அன்றும் இன்றும் ஆதரவாகவே வாக்களித்தேன்.


இந்தத் திட்டம் முஸ்லிம்களுக்கு பாதிப்பானது என்று சிலர் கூறினாலும் அது அவ்வாறில்லை. புறக்கோட்டையில் முஸ்லிம்கள்தான் அதிகம் தொழில் புரிகிறார்கள். எனவே இதனூடாக வியாபாரம்தான் முன்னேறப் போகின்றது என்பதனை நாம் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

கேள்வி: அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நீங்கள் மக்களுக்கு சொல்ல விரும்புவது யாது?

பதில்: அரசியல் என்பது என் வியாபாரமில்லை. அடுத்த முறை தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது பற்றி இன்னும் நான் யோசிக்கவில்லை. ஆனால் அனுராதபுரம் மாவட்டத்தில் என்னால் முடிந்த அளவு வேலைகளை செய்து கொடுத்துள்ளேன். யார் எதிர்த்தாலும், விமர்சித்தாலும் பரவாயில்லை, எனது பணி தொடரும்

(தினகரன் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல்)



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.