கர்ப்பிணியான தனது மனைவியை பல கிலோ மீற்றர் தூரம் தூக்கிச் சென்று வைத்தியசாலையில் அனுமதித்த கணவன் தொடர்பில் கடந்த தினம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வௌியிடப்பட்டிருந்தன.

காலி மாவட்டத்தின் ஹினிதும பகுதியிலுள்ள கொடிகந்த என்ற கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் 28 வயதுடைய சுரேஷ் குமார்.

சம்பவ தினமான கடந்த 04 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக ஆற்று பெருக்கத்தினால் வீதிகள் வௌ்ளத்தில் மூழ்கி காணப்பட்டன.

இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான தனது மனைவியின் வயிற்றிலுள்ள சிசு இரண்டு நாட்களாக துடிக்காத காரணத்தால் குடும்ப நல அதிகாரிக்கு தொடர்பு கொண்ட போது உடனடியாக கர்ப்பிணித் தாயை ஹினிதும வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

வௌ்ளப்பெருக்கு காரணமாக வாகனங்கள் செல்ல முடியாததால் மனைவியை அழைத்துக் கொண்டு நடை பயணமாக 4 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஹினிதும வைத்தியசாலைக்கு செல்ல ஆரம்பித்தார் குமார்.

வௌ்ளப் பெருக்கு காரணமாக மனைவியை தூக்கிக் கொண்டு அவர் வைத்தியசாலை நோக்கி நடக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், ஹினிதும வைத்தியசாலையில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் 18 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள உடுகம வைத்தியசாலையை நோக்கி குமார் தனது பயணத்தை தொடர்ந்தார்.

பின்னர் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் உடுகம வைத்தியசாலையை தம்பதியினர் அடைந்தனர்.

அங்கிருந்து நோயாளர் காவு வண்டி மூலம் அவர்கள் காலி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் குழந்தைக்கு மற்றும் மனைவிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Ada derana 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.