*கொவிட் மரணங்கள் அதிகரிப்பு: எமது கடப்பாடு என்ன?*
★★★★★★★★★★★★★

**ஜெம்ஸித் அஸீஸ்**

*மக்கள் மனம் வென்ற…*
*மக்கள் அபிமானம் பெற்ற…* 
*சமூகத் தளத்தில் தாக்கம் செலுத்துகின்ற…*
 
*ஆலிம்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கலைஞர்கள், ஓவியவர்கள், இலக்கிய ஆளுமைகள், சமூக ஊடக செயற்பாட்டாளர்களாகிய உங்களுடன் ஒரு நிமிடம்!*
 
கொவிட் 19 கோரத் தாண்டவமாடும் நெருக்கடிமிக்க இக்காலப் பகுதியில் உங்களிடம் ஓர் உருக்கமான வேண்டுகோள்!
 
உங்களது அபிமானிகள், உங்கள் வாசகர்கள், உங்கள் நேயர்கள், உங்களது எழுத்துக்கு மதிப்பளிப்பவர்கள், உங்கள் வார்த்தைகளுக்கு செவிசாய்ப்பவர்கள் மக்கள் மன்றத்தில் இருப்பது உங்களுக்கு கிடைத்த வரம்! இறையருள்!

அத்தகையோர்‌ மத்தியில்
கொவிட் 19 குறித்த விழிப்புணர்வை  ஏற்படுத்தும் வண்ணம் கருத்தாடுங்கள். அது  எமது தலையாய கடமையெனக் கருதுகிறேன்.
 
தினமும் கொவிட் மரணங்கள்! நிலைமை எங்கு போய் முடியும் என்று ஊகிக்க முடியாதளவுக்கு இக்கட்டான நிலை! குறிப்பாக முஸ்லிம்களின் மரண விகிதம் அதிகம் என்ற செய்தியும் உண்மையானது; ஊர்ஜிதமானது. மருத்துவத் துறையினர் அதற்கான காரணங்களை அடுக்குகின்றனர். முஸ்லிம்கள் கொவிட் சுகாதார நடைமுறைகளைப் பேணுவதில் கரிசனை காட்டுவதில்லை எனும் பிரதான குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்படுகிறது.
 
*குறிப்பாக இந்தக் காலப் பகுதியில் நான்கு விடயங்கள் பற்றி விழிப்புணர்வூட்டுவதும் அவற்றைக் கண்டிப்பாக கைக்கொள்ளுமாறு மக்களை வலியுறுத்துவதும் அவசியம் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.*
 
*01. முகக் கவசங்களை முறையாக அணியுமாறு வலியுறுத்துதல்*
 
வெறுமனே பொலிஸாருக்கு அஞ்சி சாட்டுக்கு முகக் கவசம் அணியும் போக்கு ஆபத்தானது என்பதை வலியுறுத்துதல். மூக்கு, வாய்ப் பகுதியை மறைத்து முறையாக அணியும் முகக் கவசம், உயிர் காக்கும் பாதுகாப்புக் கவசம் என்பதை உணர வைத்தல்.
 
*02. கொவிட் நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுதல்*
 
இன்று குறிப்பாக முஸ்லிம் பகுதிகளில் நிகழ்ந்த கொவிட் மரணங்களுக்குக் காரணம், உரிய நேரத்திற்கு வைத்தியசாலைக்கு செல்லாமையே. பலர் கொவிட் தொற்றுக்குள்ளாகி வீடுகளிலேயே மரணித்து வருகின்றமையும் இதனால்தான். மற்றும் பலர் நோய்த் தாக்கம் உக்கிரமடைந்து மூச்சுத் திணறல் ஏற்பட்ட பின்னர் வைத்தியசாலை செல்கின்றனர். இதுவும் கொவிட் மரணங்கள் அதிகரிப்பதற்கான காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, கொவிட் நோய் அறிகுறிகள் தென்பட்டால் உரிய தரப்பினருக்கு அறிவித்து மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது அவசியம். அது ஒவ்வொருவரதும் தார்மிகக் கடமை என்பது அழுத்தமாகச் சொல்லப்பட வேண்டும்.
 
*03. இளைஞர்களுக்கு தொடர்ந்தேர்ச்சியாக அறிவூட்டுதல்*
 
வயோதிபர்களும் வேறு நோய்களால் பீடிக்கப்பட்டவர்களும் வீடுகளில் இருப்பார்கள். அவர்களை கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பது மற்றவர்களின் கடமை. குறிப்பாக இளைஞர்கள் இது விடயத்தில் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். கொவிட் வைரஸை காவிச் சென்று வீட்டிலிருக்கும் முதியோருக்கும் நோயாளிகளுக்கும் கொடுக்கும் இளைஞர்களது இந்த செயல் மிகவும் பாரதூரமானது; உறவினரின் மரணத்துக்கு காரணமாக அமையும் பாதகச் செயல் இது என்பதை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். உறைக்கவும் சொல்ல வேண்டும்.
 
*04. தடுப்பூசி ஏற்றுமாறு வலியுறுத்துதல்*
 
தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்வதனூடாக இன்று பல நாடுகள் கொரோனா பெருந்தொற்றை வெற்றி கொண்டுள்ளன எனும் யதார்த்தத்தைப் புரிய வைப்பதும் காலத்தின் கட்டாயம். எந்த வகை தடுப்பூசியை ஏற்றுவது என்று குழம்பிக் கொள்ளத் தேவையில்லை. முதலில் கிடைக்கும் தடுப்பூசி சிறந்த தடுப்பூசி என்றே வைத்திய நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.கொவிட் 19 இன் கொடுமையிலிருந்து தற்காத்துக் கொள்ள முழு உலகமும் முன்னெடுக்கும் முன்னேற்பாடு அது என்பதும் அழுத்தமாகச் சொல்லப்படல் வேண்டும்.  
 
இவை தவிர தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் ஒன்றரை மீற்றர் சமூக இடைவெளி பேணுமாறும் குறைந்தபட்சம் 20 செக்கன்களாவது சவர்க்காரமிட்டு கைகளைக் கழுவுமாறும் தொடர்ந்தும் மக்களை வலியுறுத்துவது அவசியம்.
 
கொரோனா என்று எதுவுமில்லை… இதுவெல்லாம் வெறும் பித்தலாட்டம்… அரசியல் சதி… என்று கதையளக்கும் மேதாவிகளின் நச்சுக் கருத்துக்களை வேரோடு பிடுங்கியெறியும் வகையிலும் கருத்தாட வேண்டும். அத்தகைய விஷமக் கருத்துக்கள் மக்களை பிழையாக வழிநடத்தும் வன்செயல் என்று உரத்துச் சொல்ல வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.
 
உங்கள் பேச்சு…
உங்கள் போதனை…
உங்கள் எழுத்து…
உங்கள் ஓவியம்…
உங்கள் கருத்துச் சித்திரம்…
உங்கள் கவிதை…
ஏன் உங்கள் நகைச்சுவை கூட
 
உங்கள் அபிமானிகளின் சிந்தனையைக் கிளறட்டும்!
 
சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றும் உறுதியை அவர்கள் உள்ளங்களில் விதைக்கட்டும்!
 
*உங்களது இந்த முயற்சி கொவிட் வைரஸுக்கு கொள்ளி வைக்கலாம்!*
 
*ஊரை விட்டு… எமது நாட்டையே விட்டு கொவிட் வைரஸை விரட்டலாம்!*
 
*உங்களது இந்த முயற்சி பலரின் உயிரைப் பாதுகாக்கலாம்!*
 
*ஓர் உயிரைப் பாதுகாக்க உதவுவது முழு மனித சமூகத்தையும் பாதுகாக்க உதவிய நன்மையைப் பெற்றுத் தரும் அல்லவா?*
 
*20.06.2021*

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.