இரண்டொரு மரணங்கள் ஊருக்குள் நிகழ்ந்ததன் பின்பு இப்பதிவினை எழுத நினைத்தது இனிவரும் ஒன்றையேனும் தவிர்க்க முடியாதா என்ற நப்பாசையுடன்தான்...

கொவிட்  கொலைத்தாண்டவம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் முழு உலகுமே அதன் கோரப்பிடிக்குள் சிக்குண்டு திக்குமுக்காடிக்கொண்டுதான் இருக்கின்றது.
அடுத்தென்ன நடக்கும் என்ற திகிலுடன் எமது ஒவ்வொரு நாளும் நகர்ந்துகொண்டிருக்கையில் நமது சமூகமோ 'கழா கத்ர் ' மீது அளவுகடந்த நம்பிக்கையோடு மாத்திரம் மட்டுப்படுத்திக்கொண்டு இஸ்லாமிய தூரநோக்குடனான தொற்று நோய் குறித்த தெளிவான அறிவுரைகளையும் நடைமுறைகளையும் துரதிஷ்டவசமாக மறந்து வாழ்ந்துகொண்டிருக்கிறது.

சில இலகுநடைமுறைகளை இளக்காரமாக உதாசீனப்படுத்தியதற்குப் பகரமாக ஒவ்வோர் உயிராய் நாம் பறிகொடுத்துக்கொண்டிருக்கின்றோம்.

எமது சொந்த வீட்டில் ஒரு மைய்யித் விழும் வரை ஜனாஸாக்களை வெறும் செய்திகளாக மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

கொவிட் தொற்று வருமுன் காக்கும் நடவடிக்கைகள் குறித்து திரும்பத் திரும்ப சொல்வதிலும், எழுதுவதிலும் இனி எவ்விதப் பிரயோசனமும் இருக்கப்போவதில்லை என்பதே இப்போதைய எனது நிலைப்பாடு. -நாம் அதுகுறித்து நன்கு அறிந்திருக்கின்றோம்-

 அத்தோடு கொவிட்  எமது வாசற்கதவு வரை வந்தாயிற்று. இனி எவ்வாறு எதிர்கொள்வது என்பதை யோசிப்போம்.
இந்தப் pandemic காலத்தில் காய்ச்சலும் சளியும் தொண்டை நோவும்  உடம்பு அசதியும் ஏன் வயிற்றோட்டமும் வாந்தியும் கூட கொவிட்தான் என்பதை தயவுசெய்து ஏற்றுக்கொள்ளும் மனநிலையை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
' மழையில் நனைந்தேன்' 'ஐஸ்கிறீம் சாப்பிட்டேன்' என்ற நொண்டிச் சாட்டுக்களை தூரப்போடுங்கள்.

 இனியென்ன செய்யப் போகின்றோம்? சுகாதார வழிமுறைப்படி வைத்தியசாலைகளுக்குச் செல்லுங்கள். அல்லது PHI யிடம் முறையிடுங்கள். முடியாது என்று அடம்பிடிப்பவர்கள் குறைந்தது பத்து நாட்கள் வீட்டிற்குள்ளாவது தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.

அடுத்தவர்களுக்குப் பரப்பாமல் இருப்பது உங்களது சமூகப் பொறுப்பாகும் என்பதை மனதிற்கொள்ளுங்கள்.

தொடர்ச்சியான அதிக காய்ச்சல், மூச்சுத்திதிணறல் என்பன காணப்பட்டால் அவை உடனடியாக வைத்தியசாலைக்குப் போகவேண்டும் என்பதற்கான நோயறிகுறிகள் என்பதை ஆழமாக மனதில் பதித்துவைத்துக்கொள்ளுங்கள்.

நமது அருகிலுள்ள வைத்தியசாலையிலும் ஏனைய அனைத்து வைத்தியசாலைகளிலும் கொவிட்  நோயாளிகளுக்கென விஷேடமாக வடிவமைக்கப்பட்ட சிகிச்சை நடைமுறைகள் உண்டென்பதை நீங்கள் அறிவீர்களா?

 வத்துப்பிட்டுவலயில் புதிதாக உருவாக்கப்பட்ட நான்கு வைத்திய விடுதிகள் மூலம் கொவிட்  நோயாளிகள் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகின்றார்கள்.

ஒட்சிசன் தேவைகொண்ட மூச்சுத்திணறல் உள்ளவர்கள் High dependecy unit இல் பராமரிக்கப்படுபவர்.results வந்ததன் பின்னர் தற்காலிகமாக RDCU இலும் சிறிய நோயறிகுறிகளுடன் உள்ளவர்கள் intermediate center இலும் இடைப்பட்ட நோயறிகுறிகள் கொண்டவர்கள் 10ஆம் விடுதியிலும் VP தலைமையுடனான வைத்திய தாதிய குழாத்தினரால் சிறந்தமுறையில் சிகிச்சையளிக்கப்படுகின்றனர்.

ஆபத்தான நோயறிகுறிகளுடன் ஆரம்பத்திலேயே அடையாளம் காணப்பட்டால் உரிய சிகிச்சை மூலம் உங்களையும் உங்களது அன்பானவர்களையும் மரணப்பிடியிலிருந்து காப்பாற்றிக்கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்!

தயவுசெய்து வைத்தியசாலைக்குப் போவதைத் தாமதப்படுத்தாதீர்கள். இதைவிடத் தெளிவான மொழியில் சொல்ல எனக்குத் தெரியவில்லை.

தடுப்பூசியை ஏனோ நமது சமூகம் மட்டும் உதாசீனப்படுத்துகின்றது. 

இந்தப் பெருந்தொற்றிலிருந்து நிரந்தரமாக விடுபட ஒரேவழி தடுப்பூசிதான் என்பதே அறிவியல்ரீதியான உண்மை. 

UK, அமெரிக்கா போன்ற நாடுகளில்  எவ்வாறு தொற்றெண்ணிக்கையும் மரணங்களும் குறைந்தன என்பதை யோசித்தாலே இதுபற்றிய தெளிவு கிடைக்கும்.  

அதனால் சிந்தித்து செயற்படுங்கள். 
தயவுசெய்து சமூக ஒன்றுகூடல்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் அன்பானவர்களின் கொலைகாரர்களாக நீங்களே மாறுவீர்கள் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

NO ONE IS SAFE,UNTIL EVERY ONE IS SAFE...

Dr.ரிகாஸா காமில்
வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலை

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.