GSP சலுகை நிறுத்தப்பட்டால் ஏற்றுமதி பொருளாதாரம் பாதிக்கும் அபாயம் - கரு ஜயசூரிய

Rihmy Hakeem
By -
0



எம்.ஆர்.எம்.வசீம் - வீரகேசரி

நாட்டின் பொருளாதாரத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்திவரும் ஜீ.எஸ்.பி. சலுகை நிறுத்தப்பட்டால், ஏற்றுமதி பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருக்கின்றது என சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கருஜயசூரிய தெரிவித்தார்.

சமூக நீதிக்கான தேசிய அமைப்பு நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐராேப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி.வரிச்சலுகை எமது நாடு பொருளாதாரத்துக்கு குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை செலுத்தி வருகின்றது. இலங்கை ஐராேப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்வதன் மூலம் சுமார் 2.8 யூராே பில்லியன் லாபம் பெறப்படுகின்றது.

அத்துடன் எமது ஏற்றுமதிகளில் 30வீதம் ஐராேப்பிய நாடுகளுக்கே மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக நாட்டின் ஆடை உற்பத்தியில் 60வீதம் விற்பனை செய்யப்படுவதும் அவர்களுக்காகும். இலங்கையின் இரண்டாவது பாரிய சந்தையாகவே அது கருதப்படுகின்றது. அந்தளவுக்கு எமது நாட்டு உற்பத்தியாளர்கள் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையின் நன்மையை பெற்றுவருகின்றனர்.

மேலும் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை சுனாமி பேரழிவின் பின்னர் 2005ஆம்ஆண்டு எமது நாட்டுக்கு கிடைக்கப்பெற்றது. இருந்தபோதும் மஹிந்த ராஜபக்ஷ் ஜனாதிபதியாக இருந்த ஆட்சிக்காலத்தில் நாட்டில் ஏற்பட்ட மோசமான சம்பவங்கள் , குறிப்பாக 18 ஆவது திருத்தம் மூலம் நாட்டின் ஜனநாயகத்தை பலவீனப்படுத்திய போன்ற காரணத்தால் 2010இல் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை எமக்கு இல்லாமல்போனது. என்றாலும் 2015இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட நடவடிக்கை எடுத்ததால் 2017இல் அந்த சலுகை நாட்டுக்கு கிடைத்தது.

இவ்வாறான நிலையில் ஐராேப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு பெற்றுத்தந்திருக்கும் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை தொடர்பில் மீண்டும் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்ற பிரேரணை ஐராேப்பிய சங்கத்தின் பாராளுமன்றத்தில் ஏன் மேற்கொள்ளப்பட்டது என்ற விடயத்தை எமது நாட்டு மக்கள் சிந்தித்து பார்க்கவேண்டும்.

குறித்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த எந்த நாடும் நாட்டு மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. என்றாலும் எமது நாட்டு ஆட்சியாளர்களின் தான்தோன்றித்தனமான, தூரநோக்கற்ற மற்றும் மக்கள் விராேத நடவடிக்கைகளுக்கு அவர்கள் ஆதரவளிப்பதில்லை.

அத்துடன் எமது நாட்டின் ஜனநாயகம் பலவீனப்படுத்தப்படுவதற்கு அவர்கள் எதிர்ப்பை வெளியிடுகின்றனர். மனித உரிமை மீறல்கள் உட்பட மக்களின் அடிப்படை உரிமைகள் இன்று வெளிப்படையாகவே மீறப்படுகின்றன. அதனையே அவர்கள் எதிர்க்கின்றனர்.

அதனால் இந்த நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படாவிட்டால் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை இல்லாமல்போகும் அபாயம் இருக்கின்றது. அதனால் எமது ஏற்றுமது பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்றார். (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)