ஹிக்மத்
----------
ஹிக்மத் எனும் அரபி மொழிச் சொல்
மிக ஆழமான பொருளைக் கொண்ட ஒரு சொல்லாகும்!
ஹிக்மத் எனும் சொல்லை அப்படியே மொழிபெயர்ப்பது கடினம்!
விவேகம் என்று மொழிபெயர்க்கலாம்!
ஆனாலும் அது முழுமையான மொழிபெயர்ப்பு ஆகாது!
ஹிக்மத் எனும் சொல்லை
ஞானம் என்று மொழி பெயர்க்கிறார்கள்.
(எனக்கு அது சரியெனப்படவில்லை!)
ஆங்கிலத்தில் அது - WISDOM - என்று மொழிபெயர்க்கப்படுகிறது.
**
ஹிக்மத் என்பது -
இறைவன் ஒருவருக்கு வழங்கும் அன்புப்பரிசாகும்! (2:269)
ஹிக்மத் என்பது -
அழகோடு சம்பந்தப்பட்டது!
நன்மையோடு சம்பந்தப்பட்டது!
அதாவது "இஹ்ஸான்" - உடன்!
ஆனால் ஹிக்மத் என்பதை நம்மில் பலர்
தவறாகப் புரிந்து வைத்திருக்கிறோம்.
எதுவெல்லாம் ஹிக்மத்?
எதுவெல்லாம் ஹிக்மத் இல்லை!
தவறு ஒன்றைச் செய்து விட்டு
"நான் ஹிக்மத்தாக அதனைச் செய்து முடித்தேன்!"
என்றெல்லாம் ஒருவர் சொல்லி விட முடியாது!
பொய் சொல்லி ஒருவரிடம்
கடன் வாங்கி விட்டேன் என்பதில்
ஹிக்மத் இல்லை!
முகத்தில் நடிப்பு ஒன்றை வரவழைத்து
ஒருவரின் இரக்க உணர்வைத்
தனக்குச் சாதகமாக்கிக் கொள்வதில்
ஹிக்மத் இல்லை!
பெற்றோருக்குக் கட்டுப் படுகிறேன் என்று சொல்லிக் கொண்டு
வரதட்சனை பெற்றுக் கொள்வது
ஹிக்மத்துக்கு நேர் எதிரானது!
குறுக்கு வழியில் பொருள் தேடி
பணத்தைக் குவித்து வைத்திருக்கும் செல்வந்தனை
"அந்த ஆள் ஹிக்மத்தான ஆள்!" - என்பது அபத்தம்!
ஒருவரை ஏமாற்றி விட்டு
ஒரு காரியத்தைச் சாதித்துக் கொண்ட பின்
"எப்படி என் சாதனை?"
என்று மார் தட்டுவதெல்லாம்
ஹிக்மத் எனும் வட்டத்துக்குள் வரவே வராது!
சூழ்ச்சி, சதித் திட்டம், தந்திரம் - இவையெல்லாம்
ஹிக்மத்துக்கு நேர் எதிரானவை!
சுருக்கமாகச் சொல்வதென்றால்
ஹிக்மத்தும் தீமையும் ஒன்று சேராது!
**
அப்படியானால் எது தான் ஹிக்மத்?
ஹிக்மத் நன்றியுணர்வோடு சம்பந்தப்பட்டது!
இறைவன் தந்த அருட்கொடைகளுக்கு வாழ்நாள் முழுவதும்
அவனுக்கு (with feelings of gratitude)
நன்றியுணர்வோடு நடந்து கொள்வது ஹிக்மத்!
ஐந்து வேளையும் இறைவனைத் தொழுது
அந்த நன்றியுணர்வை ( with an expression of gratitude)
வெளிப்படுத்திக் கொண்டிருப்பதும் ஹிக்மத்!
இறைவனுக்கு மாறு செய்வதைத் தவிர்த்து
பெற்றோருடன் "அழகாக" (இஹ்ஸான்) நடந்து கொள்வது ஹிக்மத்!
தன்னால் இயன்ற அளவுக்கு
நன்மையை ஏவித் தீமைகளைத் தடுப்பதும்
ஹிக்மத்தில் அடக்கம்!
அதில் பொறுமையைக் கடைபிடிப்பதும் ஹிக்மத்!
"எங்க பிள்ளை எந்த ஒரு வம்புக்கும் போவாது!
பள்ளிவாசலுக்குப் போனால் தொழுது விட்டு
நேரே வீட்டுக்கு வந்து விடும் என்றால்
பார்த்துக் கொள்ளுங்களேன்!" - எனும் பெற்றோர்களை -
ஹிக்மத்தாகத் தம் பிள்ளைகளை
வளர்க்கத் தவறி விட்டவர்கள்
என்று தான் சொல்ல வேண்டும்!
பணிவுடன் "நடந்து கொள்வது" ஹிக்மத்தின் அடையாளங்களுள் ஒன்று!
ஆணவமும் (EGO) ஹிக்மத்தும் ஒன்று சேராது!
குரலை உயர்த்தி - நாம் பெற்றெடுத்த குழந்தைகள் - உட்பட
எவரையும் திட்டுவதைத் தவிர்ப்பதும் ஹிக்மத் தான்!
முன்னுரிமை அறிந்து நடப்பதுவும்
ஹிக்மத்தின் பாற்பட்டது தான்!
அழைப்புப் பணியிலும் ஹிக்மத் உண்டு! (16:125)
நேரம் அறிந்து, சூழ்நிலை அறிந்து
அழைக்கப்படுபவரின் பின்னணி அறிந்து
அவரின் அறிவாற்றல் அறிந்து
அவர் பேசுவதை முழுவதும் செவி மடுத்து
அழகிய முறையில் அழைப்பினை
சமர்ப்பிப்பதும் ஹிக்மத் தான்!
ஹிக்மத் இல்லாத அழைப்புப்பணி
எதிர்மறை விளைவுகளை (negative impact) ஏற்படுத்தி விடும்!
ஹிக்மத் அறிவோடு (ilm) சம்பந்தப்பட்டது!
ஹிக்மத் என்பது முட்டாள்தனத்துக்கு எதிரானது!
எனவே ஆழமாக சிந்தித்தலே ஹிக்மத்தின் துவக்கம்!
எதனைக் கொண்டு சிந்திப்பது?
முதலில் திருக்குர் ஆனைக் கொண்டு! (31:2)
அடுத்து அண்ணலாரிடம் நாம் ஹிக்மத்தைக் கற்கலாம்! (62:2)
அடுத்து அல்லாஹ்வின் படைப்பினங்களைக் குறித்து ஆழமாக சிந்திப்பதன் மூலமும்
ஹிக்மத்தைப் பெற்றுக் கொள்ள இயலும்!
ஹிக்மத்தை வேண்டி நாம் துஆ செய்யலாம்.
அண்ணலாரின் துஆ ஒன்று கூட உண்டு!
திருக்குர்ஆனையும் சுன்னா மற்றும் ஸீராவையும் கொண்டு யாரையும் கண்ணை மூடிப் பின்பற்றாமல் - சிந்தித்து
தாம் சார்ந்திருக்கும் துறை சம்பந்தப்பட்ட -
மனிதர்களுக்கு நன்மை பயக்கின்ற -
(மறுபடியும் இஹ்ஸான்)
எந்த ஒரு செய்தியையும் / கருத்தையும் /
தொழில் நுட்பத்தையும்
அது எங்கு கிடைத்தாலும்
அதனை உரிமையுடன் பெற்றுக் கொண்டு
நாகரிகம் மிக்க ஒரு சமுதாயத்தை
உருவாக்கிக் காட்டுவது தான் ஹிக்மத்தின் உச்சக் கட்டம்!
(இதுவே நமது முதல் ஆயிரம் ஆண்டு கால வரலாறு! அதற்கடுத்த நானூறு ஆண்டுகள்
நாம் ஹிக்மத்தைத் தொலைத்து விட்டோம்
என்பதுவும் நமது கசப்பான வரலாறு!)
**
பெற்றோர்களுக்கு ஹிக்மத் அவசியம்!
ஆசிரியர்களுக்கு ஹிக்மத் அவசியம்!
வியாபாரம் செய்பவர்களுக்கு ஹிக்மத் அவசியம்!
அழைப்பாளர்களுக்கு ஹிக்மத் மிக மிக அவசியம்!
குறிப்பாக -
சமூக செயல்பாட்டாளர்களுக்கு ஹிக்மத் மிக மிக மிக மிக அவசியம்!
ஹிக்மத் மட்டும் இல்லாவிட்டால்
தலைமுறை தலைமுறையாக
நாம் தோற்றுக் கொண்டே இருப்போம்!
வெற்றி என்பது நம் கண்களுக்குப் புலப்படாது!
சமூக சீர்திருத்தத்துக்கு ஹிக்மத் அவசியம்!
அப்படிப்பட்ட ஹிக்மத்தை ஊட்டி வளர்த்திட வேண்டிய பொறுப்பு -
நம் அனைவருக்கும் உண்டு!
இது காலத்தின் கட்டாயம்!
***
சூரத்துல் லுக்மான் சிந்தனைகள்
எஸ் ஏ மன்சூர் அலி