24/06/2021

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள ஊடக வெளியீடு

ஒரு நாட்டில் நீதித்துறை செயல்முறை ஜனநாயக நிர்வாகத்தின் மிக முக்கியமான காரணியாக கருதப்படுகிறது.  சட்டத்தின் இறையாண்மை மட்டுமல்லாது, இலங்கையின் சுதந்திரமும் இன்று சவாலுக்குட்பட்டுள்ளது என்பது துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு ஜனாதிபதி மன்னிப்பிலிருந்து தெளிவாகிறது.

மன்னிப்பு வழங்குவதற்கான சரியான நடைமுறையை ஜனாதிபதி பின்பற்றியுள்ளாரா என்ற கேள்வியையும் இலங்கை சட்டதரணிகள் சங்கம் எழுப்புகிறது.

ஜனாதிபதி அவர் தான் அரசாங்கம் போலவே என்ற எண்ணப்பாட்டில் செயல்படுகிறார் என்று தெரிகிறது. அவரது நடவடிக்கைகள் பாராளுமன்றமும் நீதித்துறையும் அவர் விரும்பியபடி செயல்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது.இது நாட்டின் ஜனநாயக ஆட்சிக்கு கடுமையான அச்சுறுத்தலாகும்.  சர்வதேச அமைப்புகள் ஏற்கனவே இலங்கையில் மனித உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றன.ஐரோப்பிய ஒன்றியத்தின் சமீபத்திய தீர்மானம் நாட்டின் எதிர்கால பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளது.

அரசியல் பழிவாங்கலுக்கான ஜனாதிபதி ஆணைக்குழு எனும் அபகீர்த்தி ஆணைக்குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து நீதிமன்றம் வழங்கிய முடிவுகளை மாற்றியமைக்க சட்டமா அதிபருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.  நீதிமன்ற முடிவுகளை அமைச்சரவை மூலம் மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சட்டம் அல்லது நாகரிகம் இல்லாத இடத்திற்கு நாடு கொண்டு செல்லப்படுவது இத்தகைய நடவடிக்கைகளிலிருந்து தெளிவாகிறது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உட்பட ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவால் உறுதிப்படுத்தப்பட்ட மூன்று பேர் கொண்ட உயர்நீதிமன்றம் விதித்த தண்டனை நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி மாற்றப்பட்டால், அது தெளிவாக நாட்டில் நல்லாட்சி குறித்த கேள்வியை எழுப்புகிறது.

இந்த நிகழ்வு மிகச் சிறப்பாக திட்டமிட்டுச் செய்யப்பட்டது என்பது இரகசியமல்ல.அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவுடன் எந்த தொடர்பும் இல்லாத துமிந்த சில்வாவின் வழக்கை ஆணைக்குழுவின் இறுதி சந்தர்ப்பத்தில் ஏற்றுக் கொள்ளவும், இதுபோன்ற தீவிரமான தீர்ப்பை அரசியல் பழிவாங்கலில் பதிவு செய்தமையும், இந்த தீர்ப்பை வழங்கிய அப்போதைய தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளுக்கு இது ஒரு அவமானமான செயலாகும்.

துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பு கேட்கும் விதமாக எம்.பி.க்களின் கையொப்பங்களைப் பெறுவதும் இந்த வெட்கமற்ற முடிவுக்கான பின்னணி அமைப்பாகும் என்பது தெளிவாகிறது.

நாளுக்கு நாள் நாட்டின் சர்வதேச அபிமானத்தை மோசமாக்கி வரும் அரசாங்கம், இந்த நடவடிக்கையின் மூலம் நமது தாய்நாட்டை நாகரிக உலகத்திலிருந்து மேலும் தனிமைப்படுத்தும்.

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் சட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த இந்த நாட்டு மக்கள் அதிகாரம் அளிக்கவில்லை.

துமிந்த சில்வா மீது சாற்றப்பட்ட குற்றச் சாட்டு ஒரு கொலைக் குற்றச்சாட்டாகும்.  அந்த கொலையில் ஒரு பாதிக்கப்பட்ட தரப்பும் உள்ளது.

அரசாங்கம் தனது அரசியல் கூட்டாளியை மன்னித்தது, பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டத்தால் வழங்கப்பட்ட நீதியை இழக்கடுப்பதாகும்.

இத்தகைய நிகழ்வுகள் பழங்குடி நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தின் கீழுள்ள ஓர் ஆட்சியினால் மட்டுமே நடக்க முடியும்.

அரசியலமைப்பால் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை ஜனாதிபதி துஷ்பிரயோகம் செய்வதை ஐக்கிய மக்கள் சக்தி வெறுக்கத்தக்க வகையில் கண்டிக்கிறது.

ஜனாதிபதியின் இந்த தவறான முன்மாதிரி நாட்டின் எதிர்காலத்தையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.எனவே இந்த தீர்ப்பை உடனடியாக வாபஸ் பெற்று, சட்டத்தின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும், மாண்புமிகு நீதிபதிகளின் கௌரவத்தையும் பாதுகாக்குமாறு ஜனாதிபதியை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.


ரஞ்சித் மத்தும பண்டார

பொதுச் செயலாளர்

ஐக்கிய மக்கள் சக்தி


ஊடகப் பிரிவு

ஐக்கிய மக்கள் சக்தி


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.