மறைந்த ஆன்மீகத் தலைவர், பேரறிஞர் கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம் தமிழ் நாட்டிற்கும், கேரளாவிற்கும், இலங்கைக்குமிடையே முப்பரிமாண இணைப்பாளராக இருந்து சன்மார்க்கப் பணியையும், சமுதாயப் பணியையும் ஒருங்கே ஆற்றியதாகவும், இலங்கையைப் பொறுத்தவரை இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அளப்பரிய பங்காற்றியதாகவும் அன்னாரின் மறைவையொட்டி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரூஸியத்துல் காதிரிய்யா தரீக்காவின் ஆன்மீக மேதையாகத் திகழ்ந்து இலங்கையிலும், தமிழகத்திலும், மலேசியா, சிங்கப்பூர், மத்திய கிழக்கு மற்றும் மேலைத்தேய நாடுகளிலும் ஆன்மீகப் பரம்பரையொன்றை வழிநடாத்திய சங்கைக்குரிய அப்ஸலுல் உலமா கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம் அன்னாரின் பாட்டனார் மாப்பிள்ளை ஆலிம் என்றழைக்கப்படும் ஷெய்க் ஸையித் முஹம்மத் இப்னு அஹ்மத் லெப்பை அவர்களின் ஆன்மீக வாரிசாக எம்மத்தியில் வாழ்ந்து மறைந்திருக்கின்றார்.

தமிழ் நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரையில் பிறந்த மர்ஹூம் கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம் இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமானி சிறப்பு பட்டத்தையும், அமெரிக்காவின் கொலம்பியா பசுபிக் பல்கலைக்கழகத்தில் முதுமானி மற்றும் கலாநிதி பட்டங்களையும் பெற்றிருந்தார்.

"சரண்தீப் (இலங்கை) மற்றும் தமிழ்நாட்டில் அரபு அர்வி, பாரசீகம் " என்ற அன்னாரது 880 பக்கங்களைக் கொண்ட ஆய்வு நூல் பல்வேறு  அரிய தகவல்களைத் தாங்கியதாக வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரலாறு மற்றும் கலாசாரம் என்பவற்றுக்கான தேசிய விருதை இந்திய அரசாங்கம் அன்னாருக்கு இரு தடவைகள் வழங்கி கௌரவித்தது. 2016ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அவருக்கு கௌரவமளித்ததும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும்.

தமிழ் நாட்டையும்,இலங்கையும் பொறுத்தவரை முஸ்லிம்கள் மத்தியில் படிப்படியாக வழக்கொழிந்துவரும் அரபுத் தமிழ் என்ற மொழி நடையை கையாள்வதிலும், அதனை உயிர்ப்பிப்பதிலும் மறைந்த கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம் ஆற்றிய பணி அளப்பரியது.

தமது வாழ்வாதாரத்திற்கு சன்மார்க்கப் பணியை நம்பியிராது, தென்னிந்திய பூர்வீகத்தை கொண்ட இரத்தினக்கல் வணிகம் உட்பட வர்த்தகத் துறையிலும் அன்னார் அதிக ஈடுபாடு உடையவராக இருந்து வந்தார்.

இவ்வாறு பெயரோடும், புகழோடும் வாழ்ந்து மறைந்த சன்மார்க்கப் பேரறிஞர் மகான் கலாநிதி தைக்கா சுஐப் ஆலிமுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் மேலான ஜென்னத்துல் பிர்தௌஸ் சுவன பாக்கியத்தை வழங்க வேண்டுமென்றும், அன்னாரைப் பின்தொடர்ந்து சன்மார்க்க நெறிமுறையை பேணி வருபவர்களுக்கு பொறுமையையும், மனஆறுதலையும் வழங்க வேண்டுமென்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் , தனிப்பட்ட முறையிலும் பிரார்த்திக்கின்றேன். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.