இரண்டு வாரங்களாக காணாமல் போயிருந்த 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் அதற்கு உதவிய குற்றச்சாட்டில், தந்தையையும் மகனையும் மொரட்டுவை கோரலவெல்லவில் வைத்து இன்று கைதுசெய்துள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியைக் காணவில்லை என்று சிறுமியின் பாட்டி அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

காணாமல் போன சிறுமியின் வீட்டுக்கு அருகாமையிலருந்த வீதியிலுள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமெராக்களில்  25 வயது சந்தேக நபருடன் சிறுமி புறப்படுவதாக பதிவாகியிருந்த காட்சிகளைக் கொண்டு விசாரணைகளை முன்னெடுத்தாக பொலிஸார்  தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையின் போது பேஸ்புக்கில் இளைஞரும் சிறுமியும் அறிமுகமாகியதாகவும் இதன் மூலம் உருவான நட்பு பின்னர் காதலாக மாறியதாக பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட தந்தைக்கு 42 வயது என்று  பொலிஸார் தெரிவித்தனர்.

பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் தாய் வெளிநாட்டில் உள்ளார் என்றும் தந்தை ஹெராயினுக்கு அடிமையானவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும்  சிறுமி, மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார், சந்தேக நபர்களை மொரட்டுவ நீதவான் முன்னிலையில்  ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

(Tamil Mirror)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.