சகல தேர்தல்களிலும் இளைஞர்களுக்கு ஜனநாயக அரசியல் கட்டமைப்பிற்குள் நுழைவதற்கு வசதியாக, இளைஞர்களின் வேட்புமனுக்களில் குறைந்தது 25 சதவீதத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் சட்ட விதிகளை உருவாக்க வேண்டும் என்ற பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று(07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

சபை ஒத்திவைப்புப் பிரேரணையாக பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் இதனை முன்வைத்தார்.

அதன் முழு வடிவம்;

கௌரவ சபாநாயகர் அவர்களே,

இந்த தீர்மானத்தை முன்வைக்க எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி. எதிர்க்கட்சி அமைப்பாளருக்கும் நன்றி. இந்த முன்மொழிவை டிசம்பரில் சமர்ப்பித்தேன். ஏழு மாதங்களுக்குப் பிறகு எனக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தது. எதிர்க்கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் எங்கள் கருத்துக்களை முன்வைக்க இவ்வளவு காலம் காத்திருக்க அனுமதிக்கக் கூடாது, மாறாக மிகவும் திறமையாக செயல்பட்டு எதிர்பார்த்திருக்கும் உறுப்பினர்களுக்கு நேரத்தையும் அதிகரித்து எதிர்க்கட்சிக்கு பாராளுமன்றத்தில்  கருத்துக்களை முன்வைக்கும் நேரம் காலம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதற்கு இந்த வாய்ப்பை நான் பயன்படுத்துகிறேன்.

இப்போது நான் எனது தீர்மானத்தை சபைக்கு முன் வைக்க விரும்புகிறேன் .  

இந்த தீர்மானத்தை நான் சபைக்கு முன் நகர்த்தும்போது இந்த ஆண்டு ஏப்ரல் 23-25 திகதிகளில் நடைபெற்ற சர்வதேச இளைஞர் மாநாடு குறித்து எனக்கு நினைவுக்கு வருகிறது.

இந்த இளைஞர் மாநாட்டில் “வலுவான இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தையும் எதிர்காலத்தை பாதிக்கும் முடிவுகளை எடுக்க தேவையான இடத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும்." என்பது பிரதான கருப்பொருளாக அமைந்திருந்தது.

WE WANT TO BE HEARD – WE WANT TO BE PART OF THE  PROCESS 

நாங்கள் எங்கள் குரல்களைக் கேட்க வேண்டும் - நாங்கள் முடிவெடுக்கும் செயல்பாட்டின் பங்குதாரியாக இருக்க விரும்புகிறோம்.

05. இது உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றியும் அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிவதையும் பற்றிய ஒரு மாநாடாக இருந்தது. இந்த மாநாட்டில் உலகெங்கிலும் உள்ள இளைஞர்களின் கோரிக்கைகளையே குரல்களாக அவர்கள் எழுப்பினர்.

06. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

07. 1980 களில் தெற்கிலும் வடக்கிலும்  நடந்த இளைஞர் எழுச்சிக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இளைஞர் ஆணைக்குழுக்கள் இந்த குரலைப் புரிந்துகொண்டு எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கும் என்று நம்பியது.

08. இளைஞர் ஆணைக்குழுவால் முக்கிய செயல்பாடுகளாக மூன்று முக்கிய விடயங்கள் கூறப்பட்டன.

      1. இளைஞர்களின் அதிருப்தி மற்றும் மனச்சோர்வுக்கான காரணங்களை ஆராய்தல்

      2. அவர்களின் நியாயமான சட்டரீதியான தேவைகளையும் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்வதில் உள்ள குறைபாடுகளை ஆராய்தல்.

      3. தற்போதுள்ள சமூக நிறுவனங்களை நிராகரித்து வன்முறைகளுக்கு வழிவகுத்த காரணிகளையும் வன்முறைக்கான போக்கையும் ஆராய்தல்.

09. அந்த சந்தர்ப்பத்தில் இந்த ஆணைக்குழுவை நியமித்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இந்தக் குழு நியமிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் அவர்களின் பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

10. அப்போது பேராசிரியர் லக்ஷ்மன் ஜயதிலக குழுவின் தலைவராக இருந்தார். பேராசிரியர் ஜி.எல். பீரிஸ். கலாநிதி ராதிகா குமாரசாமி,ஏ.எஸ். முகமது அலி, ஆர்.ஐ.டி அலெஸ்,மோனிகா ருவன்பதிரன மற்றும் சவிந்திர பெர்னாண்டோ ஆகியோர் அதன் உறுப்பினர்களாக இருந்தனர்.

11. ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளராக இருந்த நான் உட்பட ஒரு குழு இந்த இளைஞர் ஆணைக்குழுவின் முன் பரிந்துரைகளை முன்வைத்ததை நினைவில் கொள்கிறேன். அதன் உறுப்பினர்களான ரத்னசிறி ராஜபக்ஷ. உபாலி பியசோம, மகேன் குணசேகர ஆகியோரும் அன்றைய தினம் என்னுடன் இருந்தனர்.

12. 1971 இல் இடம்பெற்ற வன்முறைகள்  தொடர்பான வழக்கு விசாரணையில் கலந்து கொள்ளவும் வழக்கு விசாரணை செய்யப்பட்ட அனைத்து நாட்களிலும் அதன் பின்னணியைப் புரிந்து கொள்ளவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு.ரணசிங்க பிரேமதாசவின் ஆர்வமும் அர்ப்பணிப்பும் எனக்கு நினைவுக்கு வருகிறது.

13. அந்த நேரத்தில் அவர் நியமித்த இளைஞர் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தங்கள் கொடுப்பனவுகளைப் பெற மறுத்துவிட்டதோடு  குறிப்பட்ட நேரத்திற்குள் பணியை முடிக்க இரவும் பகலும் உழைத்தனர்.

14. இந்த இளைஞர் ஆணைக்குழு 51 பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்திருந்தது. அப்போதைய ஜனாதிபதி பிரேமதாச அவர்கள் அனைத்து கட்சி மாநாட்டில் கருத்துக்களை தெரிவித்த பின்னர் அப்போதைய அரசு அந்த பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டது.

 குறுகிய கட்சி எல்லைகளுக்கு அப்பால் அனைத்து கட்சி மாநாட்டையும் கூட்டி அந்த நேரத்தில் கட்சி பேதமின்றி ஒரு இளைஞர் ஆணைக்குழவை நியமித்து அதன் மூலம் கடுமையான நெருக்கடியை எவ்வாறு கையாண்டார் என்பது இன்றும் எமக்கு படிப்பினைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கும் என்று நான் நம்புகிறேன்.

15. அந்த நேரத்தில் இளைஞர்களின் அதிருப்திக்கு காரணமாக இருந்த நான்கு முக்கிய காரணங்களை ஆணைக்குழு முன்வைத்திருந்தது.

        I.  முதலாவதாக செயற்பாட்டில் இருந்த நிறுவனங்கள் பொறிமுறைகளில் இருந்து இளைஞர்களை ஒதுக்கி செயற்பட்டமை.

      II. இரண்டாவதாக தற்போதைய நாடாளுமன்ற அமைப்பு மற்றும் அரசியல் நடைமுறைகள் மீதான நம்பிக்கையை இளைஞர்கள் இழந்துவிட்டனர்.

    III. மூன்றாவதாக அரசியல் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது. உதாரணமாக பொது சேவைக்கு ஆட்சேர்ப்பு ஒப்பந்தம் மற்றும் உரிமைப் பத்திரங்களை வழங்குவதில்.

  IV.    நான்காவதாக இருக்கும் ஜனநாயக நிறுவனங்களின் பலவீனம். உதாரணமாக பொது நிர்வாகத்தில் அடிக்கடி அரசியல் தலையீடு காணப்படல்.

16. 1990 இல் அடையாளம் காணப்பட்ட இந்த சவால்களிலிருந்து நாம் இன்னும் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளவில்லை. இந்த சிக்கல்களிலிருந்து நாங்கள் இன்னும் விடுபடவில்லை.

17. அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இளைஞர்களுக்காக 40% இளைஞர் பிரதிநிதித்துவத்தை கட்டாயமாக்குவது இளைஞர் ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் ஒன்றாகும். இது குறித்து பல்வேறு விவாதங்கள் இருந்தபோதிலும், ஜனாதிபதி பிரேமதாச இந்த பரிந்துரையை உடனடியாக செயல்படுத்த சரியான தலைமையை வழங்கினார்.

18. ஆனால் இன்று அந்த பிரதிநிதித்துவம் செயலற்றதாக்கப்பட்டுள்ளது.

19. பாராளுமன்றத் தேர்தல்கள் உட்பட அனைத்து தேர்தல்களிலும் நம் நாட்டின் இளைஞர்களுக்கு 25% பிரதிநிதித்துவம் வழங்கப்படுவது கட்டாயமாக்க வேண்டும் என்று இன்று நான் பாராளுமன்றத்தில் முன்மொழிகிறேன். 

20. இன்று நமது நாடாளுமன்றத்தில் 30 வயதுக்குக் குறைவான இளைஞர்களின் பிரதிநிதித்துவம் 2% கூட இல்லை. 1.7% பிரதிநிதித்துவம் உள்ளது.

35 வயதிற்குட்பட்ட பிரதிநிதித்துவம் 4.4% காணப்படுகின்றது.

21. இந்த ஒத்திவைப்பு பிரேரணையின் மூலம், இந்த சபையிலும் நாட்டிலும் இந்த விவகாரம் குறித்து ஒரு பயனுள்ள கருத்துப்பரிமாறலை தொடங்க நான் எதிர்பார்க்கிறேன். அதன்பிறகு, அதன் மூலம் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களை புரிந்துகொண்டு அதற்கேற்ப இந்த முன்மொழிவைத் தயாரித்து எதிர்காலத்தில் சட்டப்பூர்வமாக்குவதற்கான ஒரு தனிப்பட்ட உறுப்பினரின் முன்மொழிவாக முன்வைக்க விரும்புகிறேன். 

22. இந்த முன்மொழிவை இந்த சபையில் முன்வைப்பதற்கு முன் இந்த விவகாரம் குறித்த கருத்துக்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் பிரிவால் கட்சித் தலைமைக்கு முன்வைக்கப்பட்டது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அதன்படி ஒரு கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி  இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் பிரிவுகளின் இந்த முற்போக்கான முன்மொழிவை எந்தவித தயக்கமும் இன்றி ஏற்றுக்கொள்வதும் ஐக்கிய மக்கள் சக்தியின் அனுமதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்கள் வழங்கிய சரியான தலைமைத்துவத்தை இங்கு குறிப்பிடுவது எனது கடமை என்று நான் கருதுகிறேன்.

23. இந்தத் தீர்மானம் நம் நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

24. இளைஞர் பிரதிநிதித்துவத்திற்கு அதிக இடத்தை வழங்கும் இந்த தீர்மானத்தை இந்த நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஏகமனதாக ஆதரவு வழங்கும் என்று நான் நம்புகிறேன்.

25. நாட்டின் படித்த இளைஞர் சமூகம் மற்றும் அவர்களின் எதிர்காலம் நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கின்ற இந்த பங்களிப்பிற்கு அவர்களை இணைத்துக்கொள்வதில் உள்ள முக்கியத்துவம் குறித்து நீங்கள் நன்கு அறிவீர்கள்.

26. இந்த பாராளுமன்ற அமைப்பு குறித்து ஏற்பட்டுள்ள விரக்தியான நிலை குறிப்பாக இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள விரக்தியான நிலையை  இந்தப் பிரேரனை மாற்றி நல்ல சூழலை உருவாக்க உதவும் என்று நம்புகிறேன்.

27. இளைஞர் பிரிவுகளுக்கு 25% இளைஞர் பிரதிநிதித்துவத்தை வழங்குவதன் ஊடாக  இளைஞர் விகிதத்தை சுமார் 50% பராமரிக்க முடியும் என்று நான் பரிந்துரைக்கிறேன். வேட்பு மனுக்களைத் தீர்மானிக்கும் போது அனைத்து அரசியல் தலைவர்களும் இதில் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புகிறேன் 

28. உலக நாடாளுமன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்துவம் குறித்து கவனம் செலுத்துகின்ற போது,இலங்கை பெண்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளது. எனவே அந்த விகிதத்தை நியாயமான நிலைக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது உறுப்பினர்களான நமது பொறுப்பாகும்.

29. மற்றொரு முக்கியமான விடயத்தை இங்கே குறிப்பிட வேண்டும். இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் இளைஞர் யுவதிகள் அரசியல் பிரதான நீரோட்டத்திற்குள் நுழைவது மிகவும் கடினம் என்ற கருத்து உள்ளது. 

30. 40% இளைஞர் பிரதிநிதித்துவம் குறித்து இளைஞர் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இப்போது செயலற்ற நிலையில் இருப்பதால் பெரும்பாலும் இளைஞர்களுக்கு கிடைக்கக்கூடிய இடங்கள் கட்டுப்படுத்தப்படுவதோடு அவர்களுக்காக வாயில்களும் மூடப்பட்டுள்ளன.

31. இளைஞர்களுக்கு, குறிப்பாக அரசியல் பின்னணி இல்லாதவர்களுக்கு முக்கிய முன்னணி அரசியல் கட்சிகளில் இடம் பெறுவது அல்லது தேர்தல்களுக்கு வேட்புமனு பெறுவது கடினம் என்று பல்வேறு பகுதிகளில் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 

32. இது நம் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் உள் ஜனநாயகத்தின் பிரச்சினையாகவே நான் பார்க்கிறேன்.

33. அரசியல் பதவிகள் தந்தைமார் தாய்மார்கள் பிள்ளைகள் அல்லது பிற உறவினர்களுக்கு என்று தனிப்பட்ட குடும்பச் சொத்தாகக் பரம்பரை பரம்பரையாக காணப்படுகின்றன என்கின்ற உண்மை இலங்கையின் அரசியல் வரலாறு முழுவதும் நடைபெற்று வந்திருக்கின்றது.

34. 1990 இளைஞர் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த நிலைமை மாற்றப்பட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம்

35. ஒரு தந்தை அல்லது தாய் அல்லது குடும்பம் அரசியலில் ஈடுபடுவது ஒரு குடும்பப் பிள்ளை அரசியலுக்குள் நுழைவது தகுதியற்றதாக நான் கருதவில்லை.

36. ஆனால் அவரது அரசியல் பிரவேசமும் அணுகுமுறையும் ஜனநாயக முறையில் நடக்க வேண்டும்.

37. அரசியல் கட்சிகளுக்குள் உள்ளக ஜனநாயக முறையில் தேர்தல் சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். எதிர்காலத்திலும் எமது பாராளுமன்றம் இந்த விடயத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என்று நான் பரிந்துரைக்கிறேன்.

38. இளைஞர் பிரதிநிதித்துவம் பெண்கள் பிரதிநிதித்துவம் அரசியல் கட்சிகளில் உள்ளக ஜனநாயகம் என இன்று நாம் என்ன பேசினாலும்  நமது  வாக்காளர்களும் மக்களும் கொண்டுள்ள விரக்தியை அகற்ற வேண்டிய ஒரு பெரிய சமூக பொறுப்பு வாக்காளர்களுக்கு உள்ளது.

39. நீங்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்குச் சீட்டை எடுக்கும்போது அந்த தேர்வு குறித்து சரியான முடிவுகளை எடுப்பது உங்கள் சமூகப் பொறுப்பு.

பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களை நாங்கள் குறை கூறும்போது அவர்களை இந்த நாடாளுமன்றத்திற்கு நுழைய வைத்தது நமது சமூகம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

40. போட்டி நிலவுகின்ற உலகில் நமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களை சரியாக தெரிவு செய்து கொள்வது நமது ஒவ்வொரு பிரஜையினதும் பாரிய சமூக பொறுப்பாக உள்ளது..

41. இறுதியாக இன்றைய தினம்  உங்கள் முன்வைக்கப்பட்ட அனைத்து பிரேரணைகள் குறித்து கவனம் செலுத்தி அதை செயற்ப்படுத்த நீங்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்பதோடு எமது நாட்டின் நன்மைக்காகவும் எதிர்காலத்திற்காகவும் இவற்றை சபையில் சமர்ப்பித்து எனது உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

நன்றி!

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.