மியன்மார் ஊடகவியலாளர்களின் உரிமை மீறல் - அப்ரா அன்ஸார்



மியன்மாரில் தற்போது ஜனநாயகமற்ற முறையில் இராணுவ ஆட்சியினால் ஆளப்பட்டு வருகின்றது.ஜனநாயக தலைவர் ஆங்சான் சூகி கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இவ்வாறு எதிர்ப்பலைகளுக்கு மத்தியில் இராணுவத்தினரால் மக்கள் நாளாந்தம் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.அது மட்டுமல்லாமல் ஏராளமான ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மியன்மார் இராணுவம் பொதுமக்களை மாத்திரமின்றி ஊடகவியலாளர்களை இலக்குவைத்து அடக்குமுறை கொள்கையை பின்பற்றி வருகின்றனர்.

மியன்மாரில் பத்திரிகை சுதந்திரம் என்பது பேச்சு சுதந்திரம் , கருத்து வெளிப்பாடு , தகவல் அறியும் உரிமை மற்றும் குறிப்பாக வெகுஜன ஊடகங்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது.மியன்மாரின் ஊடகங்கள் மியன்மாரின் இராணுவ சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

மியன்மாரின் ஊடக சுதந்திரம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது.ரோஹிங்கிய மக்கள் மீதான வன்முறைகள் தொடர்பாக செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களுக்கு எதிரான நடவடிக்கையானது மியன்மாரின் சட்ட ஆட்சி மற்றும் ஊடக சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாக கனேடிய வெளியுறவுத் துறை அமைச்சர் கிறிஸ்டியோ ப்ரீலண்ட் 2018ம் ஆண்டு தெரிவித்திருந்தார்.இதேவேளை ஊடகவியலாளர்களின் விடுதலையை வலியுறுத்தும் அனைத்துலக நாடுகளுடன் தாமும் குரல் கொடுப்பதாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் இருவருக்கும் மியான்மார் நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத்தண்டனையை விதித்துள்ளது.காவல்துறை அதிகாரி கொடுத்த உத்தியோகபூர்வ ஆவணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் வா லோன் மற்றும் கியாவ் சோலு இருவரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.தேச நலனுக்கு‌ குந்தகம் விளைவிக்கும் நோக்கம் அவர்களுக்கு இருந்ததாகவும் ,தேசிய இரகசிய சட்டத்தை மீறியமை நிரூபிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியே அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இது காவல்துறையினரால் அநியாயமாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்றும் தாங்கள் நிரபராதிகள் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் இருவரும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

மியன்மார் மக்கள் படுகொலை செய்தியை அவர்கள் வெளியே கொண்டுவந்தார்கள்.அதற்காக தண்டிக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இப்படி செய்திருக்கிறார்கள் என்று அவர்களுடைய வழக்கறிஞர் கூறியுள்ளார்.இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரோய்ட்டர்ஸ் நிறுவனத்தின் ஆசிரியர் 'மியன்மாருக்கும் அதன் ஊடக சுதந்திரத்திற்கும் இது ஒரு மோசமான நாளாகும் என்று குறிப்பிட்டுள்ளது.ராக்கைன் மாநிலத்திற்கு செல்லும் ஊடகவியலாளர்களை இராணுவம் கடுமையாக கண்காணிப்பதால் அந்த பகுதியிலிருந்து நம்பகமான செய்திகளை பெறுவது கடினமாக உள்ளதாக அறியக் கிடைக்கிறது.

   தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பத்திரிகையாளர்களையும் மியான்மரின் இராணுவ ஆட்சிக்குழு உடனடியாகவும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும், மேலும் ஊடகங்களை துன்புறுத்துவதற்கும் அச்சுறுத்துவதற்கும் சட்டரீதியான நடைமுறைகளை உபயோகிப்பதை அரசு நிறுத்த வேண்டும் என்று பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான (CPJ)சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 "மியான்மரின் இராணுவ ஆட்சி கிட்டத்தட்ட ஒரே இரவில் பத்திரிகையாளர்களை மோசமான நிலையில் அடைத்து வைத்துள்ளதை சர்வதேசமே எதிர்க்கின்ற நிலையை காணலாம்.குறைந்தது 40 பத்திரிகை உறுப்பினர்கள் சிறைக்குள்ளே உள்ளனர்" என்று சிபிஜேவின் தென்கிழக்கு ஆசியாவின் மூத்த பிரதிநிதி ஷான் கிறிஸ்பின் கூறினார்.

 "பத்திரிகையாளர்களை சிறையில் அடைப்பது அப்பட்டமான மற்றும் மனிதாபிமானமற்ற நடவடிக்கை ஆகும், இது மியான்மரின் குடிமக்களையும், உலகளாவிய மக்களையும், இராணுவ ஆட்சிக்குழுவின் அடிக்கடி மிருகத்தனமான செயல்களைப் பற்றி இருட்டில் வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.’ ’

 சிபிஜேவால் அடையாளம் காணப்பட்ட கைதிகளில் இருவரைத் தவிர மற்ற அனைவருமே உள்ளூர் விற்பனை நிலையங்களில் பணிபுரியும் உள்ளூர் ஊடகவியலாளர்கள் ஆகும். யாங்கோன், மாண்டலே, மைன்ட்கைனா, டாங்க்கி, பதீன், மெய்க், ப்யே, டாவே மற்றும் மியாங்மியா நகரங்களில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  இரண்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்களை தடுத்து வைத்திருப்பதை சிபிஜே உறுதிப்படுத்தியுள்ளது: ஜப்பானிய பத்திரிகையாளர் யூகி கிடாசுமி மற்றும் உள்ளூர் செய்தி நிறுவனமான காமாயுத் மீடியாவின் ஆசிரியர் அமெரிக்கன் நாதன் ம ung ங், மார்ச் 9 அன்று ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு போராட்டத்தை பதிவுசெய்த போது கைது செய்யப்பட்டார்.

  கைது செய்யப்பட்டதிலிருந்து வழக்கறிஞர் அல்லது குடும்ப உறுப்பினர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பர்மா ஜனநாயகக் குரல் தெரிவித்துள்ளது. 

 தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இரண்டு டி.வி.பி நிருபர்களும் உள்ளனர் என்று செய்தி அமைப்பின் தலைமை ஆசிரியர் ஆயி சான் நைங் கூறுகிறார், அவர் சிபிஜேவுடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டார் என தெரிவித்துள்ளார்.

 தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை குறித்து சிபிஜே மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டது எனினும் தகவல் அமைச்சகம் அதற்கு உடனடியாக பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 "இன்று மியான்மரில் என்ன நடக்கிறது என்பது குறித்த உண்மையை அம்பலப்படுத்துவதற்கான போராட்டத்தின் முன்னணியில் பத்திரிகையாளர்கள் உள்ளனர்" என்று அம்னஸ்டி இன்டர்நேஷனலின் துணை பிராந்திய ஆராய்ச்சி இயக்குநர் எமர்லின் கில் கூறினார்.

 இதேவேளை டேனி ஃபென்ஸ்டரின் கைது இராணுவத்தால் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்துவதோடு மியான்மரில் ஊடகங்கள் எவ்வாறு குறிவைக்கப்பட்டுள்ளன என்பதை தெளிவுபடுத்துகின்றன என்று எமர்லின் கில், அம்னஸ்டி இன்டர்நேஷனலின் துணை பிராந்திய டைரக்டர் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

 கடந்த மே மாதம் 24 அமெரிக்க குடிமகன் டேனி ஃபென்ஸ்டர் ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட மூன்றாவது வெளிநாட்டு பத்திரிகையாளர் ஆவார். மலேசியாவுக்கு செல்வதற்கு விமானத்திற்காக காத்திருந்தபோது, ​​யாங்கோனின் மிங்கலார்டன் விமான நிலையத்தில் அவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் இன்சைன் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், மே 25 வரை அவர் மீது எந்த குற்றச்சாட்டும் உறுதியாக விலை என்றும் கூறப்படுகிறது.

“நாங்கள் சுயாதீன பத்திரிகையாளர்கள், வேலை செய்வதை நிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. இப்போது இரண்டு மாதங்கள் ஆகின்றன. ” 

கடந்த பிப்ரவரி 1 முதல் நான் வேலையில்லாமல் இருக்கிறேன், என்று சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 யாங்கோனை தளமாகக் கொண்ட முன்னாள் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் "இந்த நிலையில் வேறொரு வேலையினை தேடுவது கடினம் நான் மட்டுமல்ல என்னைப் போன்ற பல நிருபர்கள் தற்போது தங்களால் முடிந்த எந்த வேலையாயினும் கிடைக்க வேண்டும் என முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 சிறையில் உள்ள ஊடகவியலாளர்களில் பெரும்பாலோனோர் மியான்மரின் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505 (அ) ஐ மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்,  

சுயாதீன பத்திரிகையாளர் ஒருவர்பின்வருமாறு கூறியிருந்தார், 

”நாங்கள் சுயாதீன பத்திரிகையாளர்கள் எனினும் வழமையாக கிடைக்கின்ற சம்பளம் இல்லை, எங்கள் அறிக்கைகளை வருமானத்திற்காக விற்க வேண்டியிருந்தது, ஆனால் இப்போது நாங்கள் பெரிய சிக்கலில் இருக்கிறோம்.

 ​​எங்களிடம் கல்லூரி தகைமைகள் இருந்தாலும் எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. நாங்கள் பத்திரிகைத் துறையில் தான் எங்கள் வாழ்க்கையைத் தொடங்கினோம், இப்போது பத்திரிகை வேலைகளும் இல்லை. "

”சில ஊடகவியலாளர்கள் உணவு மற்றும் வாடகைக்கு பணம் தேவை என்பதற்காக கேமராக்கள் மற்றும் பிற உபகரணங்களை விற்க முயன்றனர், மற்றவர்கள் தொழிலை கைவிட்டு ஒன்லைனில் உணவு விற்கத் தொடங்கியுள்ளனர். சில பெண் நிருபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆபரண தொழிற்சாலை தொழிலாளர்களாக வேலைக்கு இணைந்துள்ளனர்.மியன்மாரை சேர்ந்த பத்திரிகையாளர்கள் தங்களுக்கு எதிராக அடக்குமுறை வேலை இழப்புகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் தங்கள் கடமையை செய்வதில் உறுதியாக இருக்கின்றார்கள்.

"ஊடகவியலாளர்கள் என்ற வகையில், அவர்கள் எவ்வளவு அடக்குமுறை இருந்தாலும் ஊடகத் துறையின் வளர்ச்சிக்காக நாங்கள் செயல்படுவோம்," என்று பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

”நான் என் வாழ்நாள் முழுவதும் எழுதுவேன், “செய்தி தளங்கள் மீண்டும் திறக்கப்படும்போது, ​​நாங்கள் மீண்டும் செய்திகளை எழுதுவோம். என் நண்பர்கள், அவர்கள் வேறு வேலைகளைத் தேடுகிறார்கள் என்றாலும், வாய்ப்பு கிடைத்தவுடன் எழுதப் போகிறார்கள். ” என்று சுயாதீன பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

நீண்டகால இராணுவ ஆட்சியிலிருந்து மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் இன்று மறுக்கப்பட்டுள்ளது.இது சர்வதேச சமூகத்தினுடைய பலத்த கண்டனத்துக்கு உள்ளாகியிருப்பதோடு ஊடக சமூகத்தினுடைய கண்டனத்திற்கும் உள்ளாகியிருக்கின்றது.இதில் இராணுவ ஆட்சி தொடர்பான மாற்றம் ஏற்படாதவரை இந்த ஊடகங்களுக்கு சுதந்திரமான சூழல் உருவாகுமா என்பது கேள்விக்குறியாகும்.

"மியன்மாரில் இடம்பெறுகின்ற ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களிடம் வினவியபோது, அவர்கள் கூறிய விடயங்கள் கீழே தொகுத்து தரப்படுகின்றன,

என்.எம் அமீன்


மியன்மாரில் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்டுள்ளதென்றே அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.மியன்மாரில் இப்போது இராணுவ ஆட்சி இடம்பெறுகின்றது . இராணுவ ஆட்சியில் ஆரம்பத்தில் ஊடகங்களுக்கு எவ்வித கெடுபிடிகளும் இடம்பெறாத போதும் இப்போது அங்கு ஊடகங்கள் முழுமையாக சுதந்திரமான முறையில் இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இராணுவத்தினரால் இயக்கப்படுகின்ற வானொலியும் , தொலைக்காட்சியுமே இயங்குகின்றன . இதைத் தவிர CNN,BBC போன்ற செய்தி நிறுவனங்களை செய்மதியினூடாக பயன்படுத்துவதற்கு கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.wifi வசதிகள் கூட குறைவாகவே உள்ளது.சட்டவிரோதமான முறையில் (VPN) யை பயன்படுத்தியே மக்கள் முகநூல், செய்திகளை (BBC,CNN) அறிந்து கொள்கின்றனர்.சிற்றலையூடாகவே மக்கள் செய்திகளை செவிமடுக்கின்றனர்.யுத்த காலத்தில் இலங்கையில் இருந்த அதே நிலைமையை அங்கு காணக்கூடியதாகவுள்ளது.

கடந்த ஒரு தசாப்த காலத்தின் பின்னர் ஜனநாயகம் மலர்ந்து ஓரளவு உருவாக்கப்பட்ட சுதந்திரமான ஊடக நடைமுறைகள் முற்றாக தற்போது மறுக்கப்பட்டுள்ளது.பிரச்சினையின் முதல் 15 நாட்கள் ஊடகங்களை இராணுவத்தினர் இலக்காக கொள்ளவில்லை எனினும் இப்போது அநேக ஊடகங்கள் திறந்த அடிப்படையில் இயங்குவதில்லை மாறாக இரகசியமான முறையில் இயங்கவும் ,சில ஊடகங்கள் நாட்டுக்கு வெளியே இருந்து இயங்க முற்படுகிறார்கள் என அறியக் கிடைக்கிறது.

 இப்போது மியன்மாரின் ஊடக அமைச்சு இயங்குகின்ற ஊடகநிறுவனங்களுக்கு எச்சரிக்கை கடிதங்களை அனுப்பியிருக்கின்றனர்.இந்த பின்னணியிலே ஊடக நிறுவனங்கள் தாமாக முன்வந்து தங்களுடைய நிறுவனங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

Mynmar weekly,The voice Daily ,Eleven daily and weekly ,kundra weekly பத்திரிகை நிறுவனங்கள் எல்லாம் தற்போது மூடப்பட்டுள்ளது.

இராணுவத்தினரால் மாத்திரமல்லாது அங்கே இருக்கின்ற கலகக்காரர்களாலும் ஊடகங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.அவர்கள் இராணுவ ஆட்சியாளர்களுக்கு இடமளிக்க வேண்டாம் என ஊடகங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.இதனால் ஊடகவியலாளர்கள் ,ஊடக நிறுவனங்கள் பெறும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.அவர்கள் அநேகமாக தலைமறைவாக இயங்க முற்படுகின்ற ஒரு நிலையை காண்கிறோம்.இந்த நிலைமையிலே முன்னேற்றம் எதுவும் இருந்ததாக கூற முடியாது.இராணுவத்தினர் தங்களுடைய ஆட்சியை பலப்படுத்துவதற்காக முற்படுகிறார்கள்.சுதந்திரமில்லாத ஊடகமில்லாத ஒரு நாடாக இன்று மியான்மார் இருக்கின்றது.

தாஹா முஸம்மில்


ஸ்கேண்டிநேவிய நாடுகளைத் தவிர உலகில் ஏனைய நாடுகளில் ஊடக சுதந்திரத்தின் நிலைமை, கூடக் குறைய, மோசமாகவே உள்ளது. ஊடகவியலாளாளர்களின் நிலை வர வர மோசமாகிக்கொண்டே போவதை கண்டுகொண்டு இருக்கிறோம்.

இன்றைய மியன்மார் நிலை நினைத்தும் பார்க்க முடியாத அளவு பயங்கரமாக மாறி உள்ளது. கடந்த பெப்ரவரி 1ம் திகதி அங்கு சதி புரட்சி ஒன்றின் மூலம் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி, ராணுவ ஆட்சிக்கு எதிராக ஜனநாயக ரீதியான தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மக்கள் போராட்டங்களை அறிக்கையிட வேண்டியது ஊடகவியலாளர்களின் உத்தியோகத்துக்குரிய பொறுப்பாகும். இவ்வாறு அறிக்கையிட ஸ்தலத்துக்கு சென்ற ஊடகவியலாளர்களில் 47 பேர் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 23 பேர் தேசத்துரோகம் அல்லது சட்டம் ஒழுங்கை குலைக்கும் செயல்களில் ஈடுபட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுபோக ஆர்ப்பாட்டங்களை அறிக்கையிட்ட ஜப்பானிய ஊடகவியலாளர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டு, பல மணித்தியால விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு நாட்டில் ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட அரசு சதி புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டு அங்கு ராணுவ ஆட்சி நிலைப்பெறுமானால் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரம் போன்ற அநேக அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்டுவிடும் என்பது நிதர்சனமாக தெரிகிறது. 

 ஜனநாயகத்தை விரும்பும் எல்லோரும் இந்த ஒடுக்குமுறையைக் கண்டிக்க வேண்டும்.

ஆனால், இலங்கையைப்போன்ற மூன்றாம் உலக நாடுகளில், சதி புரட்சியின் ஆரம்ப நாட்களில் ஒரு சில கண்டனக் குரல்கள் எழுந்தாலும், தாக்கம் ஏற்படுத்தும் விதத்தில் ஏதாவது இடம்பெற்றதா என்பது கேள்விக்குறியே.


ரன்கலன்சூரிய


மியன்மாரில் சாதாரணமாக ஒருவர் கைது செய்யப்பட்டால் அல்லது பாதையில் அகப்பட்டால் முதலில் அவரது ஸ்மார்ட் போன் கைப்பற்றப்பட்டு முகநூல் கணக்கு பரிசீலிக்கப்படுகிறது. முகநூலில் சிறிய அளவிலாவது ஊடகவியலாளராக அல்லது பொதுமக்களாக இராணுவ அரசிற்கு எதிராக பதிவுகள் இடப்பட்டிருந்தால் அல்லது வாட்ஸ்அப் மூலம் கருத்துக்கள் பறிமாறப்பட்டிருந்தாலோ உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள். அந்தளவு மோசமாக ஊடகங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அதனால் முழுவதுமாக ஊடகவியலாளர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் அதிகமான ஊடகவியலாளர்கள் மியன்மாரின் அயல் நாடான தாய்லாந்திற்கு சென்று தாய்லாந்து மியன்மார் எல்லையில் இருந்து ஊடக செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். அதிகமான ஊடக நிறுவனங்கள் தாய்லாந்தின் சேன் மாயின் நகரத்தில் இருந்து தான் செயற்படுகின்றன.

.இதுவரையிலும் ஊடகவியலாளர்கள் 40 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதில் 12 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஊடக நிறுவனங்கள் சிலவற்றின் தலைவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆனால் இதுவரையும் ஊடகவியலாளர் எவறும் கொல்லப்பட்டதாக எந்த தகலும் கிடைக்கவில்லை. ஆனாலும் எல்லா வகைகளிலும் ஊடகவியலாளர்களுக்கு தொந்தரவு செய்கிறார்கள். அந்த வகையில் மியன்மாரில் முழுவதுமாக ஊடக சுதந்திரம் இழக்கப்பட்டுள்ளது. இபுபோது இராணுவ அரசிற்கு முறைகேடாக உரிமம் பெறப்பட்ட வானொலிகள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. அதுதவிர இராணுவத்தினரால் நடாத்தப்படும் ஊடக சந்திப்புக்களை ஊடகவியலாளர்கள் பகிஷ்கரிப்பு செய்யும் அளவிற்கு வந்துள்ளது. 

(Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.