இலக்கியம் மனித வாழ்க்கையையும் வரலாற்றையும் முழுமையாகப் பிரதிபலிக்கக்கூடியது.

எழுத்தாளர் ஜிஃப்ரி ஹாஸன் உடனான நேர்காணல்

நேர்காணல்: நஸார் இஜாஸ் 


எழுத்தாளர் ஜிஃப்ரி ஹாஸன் கிழக்கிலங்கையின் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர். இலக்கியத்தின் மீதுள்ள அதீத ஈடுபாடு காரணமாக சிறுகதை, இலக்கிய விமர்சனங்கள், ஆய்வுகள், மொழிபெயர்ப்புகள், கவிதைகள் என பன்முகப்பட்ட தளங்களில் தன்னை நிலைநிறுத்தி வருகிறார். தற்போது அரச பாடசாலையொன்றில்  ஆசிரியராக கடமையாற்றி வருகின்ற இவர், இதுவரை 05 நூல்களை வெளியீடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்களுடைய இளமைக்காலப் பயணத்தில் எழுத்தின் ஊடுருவல் எப்படி இருந்தது?

என்னுடைய கிராமம் போரினால் முற்றிலும் சிதைந்த ஒரு கிராமம். அங்கு என்னுடைய சாச்சா ஒருவர் தனது பணி நிமித்தம் அடிக்கடி கொழும்புக்குச் சென்று வருவார். அவர் மட்டும்தான் எனது கிராமத்தில் அப்போது ஓ.எல். வரைக்கும் படித்தவர். அவர் பயணங்களின் போது வாசிப்பதற்காக கண்ணதாசன், வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமான் போன்ற கவிஞர்களின் கவிதை, கதை புத்தகங்களையும், மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ் புத்தகங்களையும் வாங்கி வருவார். அவற்றை நான் எடுத்து வாசிப்பேன். நான் அப்போது ஏழு, எட்டாம் தரம் படித்துக் கொண்டிருந்திருப்பேன். அங்கிருந்து தொடங்கிய வாசிப்புத்தான். பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஓட்டமாவடி அறபாத்தின் கதைகளுக்கு தீவிர வாசகனானேன். பின்னர் வாழைச்சேனை பொது நூலகத்தில் இணைந்து அங்கு கிடைத்த கல்கி, மு.வ, அகிலன், ஜெயகாந்தன், செ.யோ, எஸ்.பொ, மு.த. போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளை தீவிரமாக வாசித்தேன்.

போர்ச் சூழலின் தாக்கமும், வாசிப்பும் என்னை சூழலைப் பிரதிபலித்து எழுதத் தூண்டின. என் பதினைந்து வயதிலேயே சரிநிகர், மூன்றாவது மனிதன், எக்ஸில் போன்ற முன்னணி இதழ்களில் எழுதத் தொடங்கி விட்டேன். மிக இளமையிலேயே வாசிப்புக்குள் வந்ததனால் அது சாத்தியமாகியது. ஏ.பீ.எம். இத்ரீஸ், ஏ.ஜீ.எம். ஸதக்கா, அறபாத், எஸ்.எல்.எம். ஹனீபா, எம்.பௌசர் போன்ற எழுத்தாளர்களின் தொடர்பு மேலும் என்னைத் தீவிரமாக இலக்கியத்தில் இயங்கச் செய்தது.

ஆரம்பத்திலிருந்தே கவிதைகள், கதைகள், விமர்சனங்கள் என என்னை விரிவாக்கிக் கொண்டே வந்தேன். எனது படைப்புகள் பெரும்பாலும் போரைத்தான் பேசின. காரணம் எனது வாழ்க்கைச் சூழல் அப்படியானதுதான். முதல் கவிதைத் தொகுப்பே 'விலங்கிடப்படடிருந்த நாட்கள்' தான். அப்போது என்னையும், எனது சூழலையும் வெளிப்படுத்துவதற்கு எழுத்து ஒன்றே ஒரே வழியாகத் தெரிந்தது. அதுதான் எனது பயணமாக இருந்தது. இன்று வரைக்கும் இலக்கியமே எனது வாழ்வின் அர்த்தமாகத் தோன்றுகிறது.

சமகாலத் தமிழ் இலக்கியத்தின் போக்கைப் பற்றிய உங்களுடைய பார்வை என்ன?

சமகாலத் தமிழ் இலக்கியம் மிக விரிவான தளங்களில் பயணிக்கிறது. உலக இலக்கியம் அடையும் விரிவு போன்றதுதான் சமகாலத் தமிழ் இலக்கியமும். உலகளவில் தாக்கம் செலுத்திய எல்லா வகையான புனைவுகள் சார்ந்தும், கோட்பாடுகள் சார்ந்தும் தமிழில் முயற்சிகள் நடந்துள்ளன. அங்கீகாரம் கிடைத்ததா இல்லையா என்பது இரண்டாவது விடயம். ஆனால், தமிழின் இலக்கியவெளி மிகவும் விரிந்திருக்கிறது என்பது உண்மை.

தமிழில் நவீனத்துவ, பின்நவீனத்துவ இலக்கியங்கள் என எல்லாக் குரல்களும் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறன்றன. ஆனால், உலக இலக்கியப் போக்கில் நவீனத்துவ இலக்கியத்தின் செல்வாக்கு குறைந்து வருகிறது என்றுதான் நினைக்கிறேன். படைப்பு குறித்த நவீனத்துவ வரையறைகளை மீறிய படைப்புகளே மேற்கில் கவனம் பெருகின்றன. பெரிய விருதுகளைப் பெறுகின்றன. இதற்கு பின்னால் வேறு அரசியலும் உள்ளது. ஆனால், தமிழில் நவீனத்துவப் படைப்புகளே இன்றளவிலும் பெரிய செல்வாக்குடன் உள்ளன. இன்றும் பாரதியும், புதுமைப்பித்தனும், கு.அழகிரிசாமியும், க.நா.சு.வும், கி.ரா.வும், எஸ்.பொவும், மு.தளையசிங்கமும், பிரமிளும் அதே முக்கியத்துவத்துடன்தான் இருக்கிறார்கள். அவர்களை தாண்டி பெரிதாக தமிழ் இலக்கியம் பயணித்து விடவில்லை. சாரு, கோணங்கி, ரமேஷ் பிரேதன், ச.ராகவன், திசேரா போன்றவர்களின் படைப்புகளும் தமிழின் இன்னொரு பரிமாணம்தான்.

இலங்கையின் தமிழ் இலக்கியப் பரப்பில் இன்று அதிகம் பேர் கவிதையில் இயங்குகிறார்கள். அவற்றில் பல உருவம் சார்ந்து பின்-நவீன தன்மையைக் கொண்டிருக்கிறன்றன. ஆனால், உள்ளடக்கம் சார்ந்து, இலக்கிய அழகியல் சார்ந்து அவர்களிடம் மிகப் பெரிய போதாமை இருக்கிறது. 

இலங்கைத் தமிழ் இலக்கியப் பரப்பில் மிகப் பெரிய போதாமை இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். இந்தப் போதாமையை ஒரு படைப்பாளி எப்படி கடந்து செல்ல முடியும் என எதிர்பார்க்கிறீர்கள்?

தன்னை உயர்த்திக் கொள்வதன் மூலமே. இன்றைய இலக்கியப் படைப்புகளை அதன் போக்குகளை இன்றைய படைப்பாளிகள் கூர்ந்து வாசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதன் மூலம்தான் இலக்கியப் புரிதலும், படைப்பு நுட்பமும், கனதியான படைப்புகளும் நிகழும். இல்லாவிட்டால் ஒரு தீவிர இலக்கியப் படைப்பைத் தர முடியாது. வெறுமனே பொழுது போக்குக்காக சாமான்ய வாசகர்களுக்காக எதையாவது எழுதிவிட்டுப் போகலாம். அவ்வளவுதான்.   

உங்களுடைய சிறுகதைகளை வெறுமனே கற்பனை என்ற ஒற்றைச் சொல்லோடு கடந்து செல்ல முடியவில்லை. அவை உங்களுடைய சொந்த வாழ்க்கையின் மெய்யான அனுபவங்கள் என்று கொள்ளலாமா?

மனித நாகரிகத்தின் ஒரு பரிமாணமாகவே இலக்கியத்தைப் பார்க்கிறேன். அது மனித வாழ்க்கையை, வரலாற்றை முழுமையாகப் பிரதிபலிக்கக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கிறது. எனவே, ஒரு படைப்பாளி தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தில் கிடைத்த அனுபவங்களிலிருந்தும், அவனது சொந்த வாழ்க்கையிலிருந்தும் தனது கற்பனையிலிருந்துமே தனது படைப்புலகை உருவாக்கிக் கொள்கிறான். தனித்து மேலெழுந்து அவன் தன் சமூகத்தை உற்றுநோக்கி மனச்சாட்சியோடு பதிவு செய்கிறான். இந்தப் புரிதலிலிருந்துதான் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். எனது வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்கள், அனுபவங்கள், மனித வாழ்வு குறித்த என் அனுமானங்கள், தன்னுணர்வுகள் என்பன எனது கதைகளில் செல்வாக்குச் செலுத்துவது உண்மை. ஆனால், அவை அனைத்தும் இந்த சமூகம் எனக்கு கையளித்தவைதான். அதை நான் ஒரு கலை வடிவமாக்கி மீண்டும் சமூகத்துக்கே கையளிக்கிறேன். நமது சமூக உளவியலை, பண்பாட்டை, அதன் உள்முகத்தை வெளிப்படையாகப் பேசுவதே எனக்குப் பிடிக்கிறது. அதனால்தான் எனது கதைகள் வெறும் கற்பனை அல்ல என்று நீங்கள் சொல்கிறீர்கள். அந்த வகையில் உங்கள் அவதானம் சரியானதுதான். 

நீங்கள் மொழிபெயர்ப்புகளும் செய்து வருகிறீர்கள். இவை மொழிபெயர்க்கப்பட வேண்டிய படைப்புகள் என்பதை எப்படி நிர்ணயம் செய்கிறீர்கள்?

உண்மையில் மொழிபெயர்ப்பு ஈடுபாடு என்பது எனது தனிப்பட்ட விருப்புக்குரியதாக இருந்ததில்லை. எனது மொழிபெயர்ப்புகளில் பெரும்பாலானவை இதழாசிரியர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க செய்யப்பட்டவைதான். ஆனாலும், அவற்றின் மீது எனக்கும் ஒரு பிடிப்பு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் செய்ய முடியாது என்று மறுத்து விடுவேன். காலாவதியான கோட்பாடுகள், மனித குலத்துக்கு ஒவ்வாத கருத்தியல்கள், சரியான உள்ளீடற்ற படைப்புகள், குறைந்தபட்சம் வாசிப்பு இன்பத்தையேனும் தராத படைப்புகளை நான் மொழிபெயர்ப்பதில்லை. அதனால் நான் மொழிபெயர்த்தவை சொற்பமானவையாக ஆனால், நான்கு பேருக்குப் பயனுள்ளவையாக இருப்பதாகவே எண்ணுகிறேன். சிந்துசமவெளியில் கார்ள் மார்க்ஸ்க்கு முன்னரே நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடிய சூஃபி ஷாஹ் இனாயத் குறித்த மொழிபெயர்ப்பே நான் மிகுந்த ஈடுபாட்டுடன்  விரும்பிச் செய்த மொழிபெயர்ப்பாகும்.

உங்களுடைய மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பான 'மூன்றாம் பாலினத்தின் நடனம் தொகுதி வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது. இது பற்றிச் சொல்லுங்கள்.  

அதிலுள்ள கவிதைகள் எல்லாவிதத்திலும் மனித வாழ்வைப் பற்றிப் பேசுபவை. பல்வேறு நாடுகளிலும் விளிம்பு வாழ்க்கையின் நெருக்கடிகளைச் சந்தித்த மனிதர்களின் உணர்வுகளைப் பேசும் கவிதைகள் அவை. அவை எனது தனிப்பட்ட தெரிவுகள்தான். போரினால் பாதிக்கப்பட்டவன் என்ற வகையில் அது தந்த ஒடுக்குமுறையான வாழ்க்கையை அனுபவித்தவன் என்ற வகையில் அப்படியான மக்களின் குரல் மீது எப்போதும் எனக்கு ஈடுபாடு இருக்கிறது. அந்த ஈடுபாடுதான் அந்த தொகுப்பிலுள்ள கவிதைகளைத் தெரிவு செய்தது.

பின்நவீனம் என்ற போர்வையில் நான்கு சுவற்றுக்குள் நடக்கின்ற விடயங்களை நாகரீகமற்ற வார்த்தைகளால் கோர்த்து எழுதுகிறார்களே, இப்படியான எழுத்துக்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

நீங்கள் கேட்பது இலக்கியத்தின் வடிவம் சார்ந்த பிரச்சினையல்ல. உள்ளடக்கம் சார்ந்தது. இலக்கியத்தின் உருவம், உள்ளடக்கம் சார்ந்த நவீனத்துவத்தின் எல்லைகளை பின் நவீன இலக்கியம் மீறுவது உண்மைதான். ஆனால், எந்த வகைப் படைப்பானாலும் அது கவனப்படுத்த விரும்பும் விடயம் சார்ந்து அல்லது அதனை வெளிப்படுத்தும் அழகியல் சார்ந்து முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. ஒரு படைப்பில் பாலியலை பூதாகரப்படுத்தி எழுதுவது ஃபோர்னோகிரபி எழுத்துத்தான். நவீனத்துவப் படைப்புகளிலும் அந்த வகை எழுத்துகள் உண்டு. முதலில் அவை நவீனத்துவப் படைப்புகளில்தான் தோன்றின. அதனைப் பின் நவீன எழுத்து என்று நாம் புரிந்து கொள்ளத் தேவையில்லை. அத்தகைய எழுத்துக்கள் நவீனத்துமோ, பின்-நவீனத்துவமோ, அது ஃபோர்னோகிரபிதான்.  

ஆனால், இங்கே அந்தளவுக்கு நமது எழுத்துகள் செல்லவில்லை என்றுதான் நினைக்கிறேன். நம்மத்தியில் பேசப்பட வேண்டிய விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றன. படைப்புகளில் அவை தீவிரமாக முன்வைக்கபட்டு உரையாடல்கள் நிகழ வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், இதற்கு மிகுந்த பொறுமையும் அதிக உழைப்பும் தேவை. இன்று இலங்கையின் இளம் தலைமுறையினரிடம் இந்த உழைப்பு இல்லை. வெறுமனே உட்கார்ந்து ஒரு கவிதையை கிறுக்கி முகநூலிலோ, இணையத்தளத்திலோ பதிவிட்டால் சரி என்றளவிலேதான் அவர்களின் இயக்கம் மட்டுப்பட்டிருக்கிறது. அவர்கள் கருத்தியல் உழைப்புச் சோம்பேறிகளாக உள்ளனர். நான் பின் நவீன இலக்கியத்துக்கு எதிரானவன் இல்லை. நான் மிகவும் ஈடுபாடு கொண்ட துறை அது. உலகளவிலோ அல்லது தமிழிலோ புழங்கும் அத்தகைய இலக்கியங்களை இங்குள்ள இந்தத் தலைமுறை முறையாக வாசித்து கிரகித்து உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பதை அவர்களின் எழுத்துகளே உறுதிப்படுத்துகின்றன. எழுதுவதற்கு அது மிக இலகுவாக இருக்கிறது என்பதே அதிகம் பேர் அங்கே கொட்டிக் கொண்டிருக்க காரணமாக இருக்கிறது. பின்நவீன படைப்புகளுக்கும் உள்ளீடுகள் இருக்கின்றன. மையம்தான் இல்லை. செழுமையான மொழிப்பிரயோகம், இலக்கிய அழகியல் போன்றன பின்நவீன இலக்கியத்தின் தனித்துவங்கள். உண்மையில் அது நமது இலக்கிய போக்கின் அடுத்த கட்ட வளர்ச்சி. இன்னொரு பரிமாணம்.

ஆனால், நீங்கள் கேட்பதைப் போன்று இங்கே இன்று ஒரு புதிய தலைமுறை அதனை சரியாக உள்வாங்கிக்கொள்ளாமல் ஒரே விடயத்தை ஒரே அமைப்பில் ஒரே மாதிரியான சொற்கூட்டத்தைக் கொண்டு திரும்பத் திரும்ப கிறுக்கிக் கொண்டிருக்கின்றனர். அவை எல்லாம் ஒரே கவிதைதான். அவர்கள் தங்கள் இரண்டாவது கவிதையை இன்னும் எழுதவில்லை. ஒரே கவிதையையே மாறி மாறி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். வாசிப்பின்மையும், நுண்ணிய அவதானிப்புகள் இன்மையும்தான் இதற்குக் காரணம். மிகச்சிலர் சற்று தேறியுள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

(Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.