ஆன்மாவை தூய்மைப்படுத்தி போஷித்து வளர்த்தெடுக்க துணைபுரியும் நான்கு வழிகளில்
பசித்திருத்தல், விழித்திருத்தல், தனித்திருத்தல், மௌனம் காத்தல் ஆகியன குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் தனித்திருத்தலினால் விளையும் நன்மைகளைப் பற்றி கிழே நோக்குவோம்.

மனிதன் ஒரு சமூகப்பிராணி; அவனது உலகியற் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள அவன் அடுத்தவர்களோடு கூடியும் சேர்ந்தும் வாழ வேண்டியுள்ளது. உறவுகள் இல்லாமல் அவனால் வாழ முடியாது.

ஆனால் அவனது ஆன்மாவுக்கு, அதன் மேம்பாட்டுக்கு அவனுக்கு தனிமை தேவைப்படுகிறது.

படைப்புகளுடனான உறவிலிருந்து விலகி தனிமையில் இருந்து படைப்பாளனுடன் உறவாடுவதிலும் உரையாடுவதிலுமே ஆன்மாவுக்கு விடிவும் விமோசனமும்  இருக்கின்றது.

இந்த பின்னணியில்தான் தஸ்கியத்துன் நப்ஸுக்கான சிறந்ததொரு வழியாக தனித்திருத்தல் கருதப்படுகிறது.

"அல்லாஹ் பற்றிய ஒரு சிந்தனையோடு கூடிய ஒரு தனிமைப்படுதலைப் போல உள்ளத்துக்கு பயனளிக்கும் மற்றொன்று இல்லை" என சொல்வார்கள் இப்னு அதாஇல்லாஹ் அஸ்ஸகன்தரி (ரஹ்) அவர்கள்.

தனித்திருத்தல் மூலம் ஆன்மீக வாழ்க்கைக்கு கிடைக்கும் பயன்கள் தொடர்பில் ஆரம்பகால அறிஞர்கள்  நிறையவே பேசியிருக்கிறார்கள்.

"யார், அல்லாஹ் தனது உள்ளத்தை திறந்து விடவேண்டும்; தனக்கு அறிவு ஞானம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றாரோ அவர் உணவைக் குறைத்து அறிவீனர்களுடனான உறவைத் துண்டித்து, தனிமையைக் கைக் கொள்ளட்டும்" என்று சொல்கின்றார்கள் இமாம் ஷாபிஈ (றஹ்) அவர்கள்.

"புலன்களை அடக்கினால் தான் உள்ளம் சீர்பெறும்.
கண், காது, நா முதலான புலன்களைக் கட்டுப்படுத்தும் போதே உள்ளம் சீர்பெற முடியும்; புலன்களைக் கட்டுப்படுத்த சிறந்த வழி உலக சோலிகளில் இருந்து விடுபட்டு தனிமையை நாடுவதே என்று விளக்குகின்றார்கள்" இமாம் கஸ்ஸாலி (றஹ்).

"கல்வா" எனும் தனித்திருத்தலினால் விளையும் பல நன்மைகளை இமாம் அபுல் ஹஸன் அஷ்ஷாதுலி (றஹ்) குறிப்பிட்டுள்ளார்கள்.

திரை நீங்குதல், அருள் இறங்குதல், நாவினாலும் பார்வையாலும் விளைகின்ற விபரீதங்களிலிருந்து பாதுகாப்புப் பெறுதல், முகஸ்துதி முதலான பாவங்களிலிருந்து உள்ளத்தைப் பாதுகாத்துக் கொள்ளல், பற்றற்ற வாழ்வு, உள்ளதைக் கொண்டு திருப்தி அடையும் பக்குவம், கெட்டவர்களின் சகவாசத்தைத் தவிர்ப்பதற்கான சந்தர்ப்பம், வணக்க,வழிபாடுகளிலும் திக்ரிலும் தன்னை முழுமையாக  ஈடுபடுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு, இபாதத்களின் இன்பத்தை அனுபவித்தல், உடலும் உள்ளமும் ஓய்வையும் சுகத்தையும் பெற்றுக் கொள்ளல், வீணாண சர்ச்சைகளிலிருந்தும் தீங்குகளிலிருந்தும் உள்ளம் பாதுகாப்புப் பெறல், சிந்தித்தல், படிப்பினை பெறல் என்ற இபாதத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு. இவை  அவர்கள்  குறிப்பிடுள்ள கல்வத்தினால் விளையும் நன்மைகளாகும்.

உண்மையான இன்பம், உற்சாகம், சுறுசுறுப்பு, பலம் ஆகியன கல்வத்தினால் கிடைக்கும் நன்மைகள் என்று சொல்கின்றார்கள் அபூ தாலிப் அல்-மக்கி (றஹ்) அவர்கள்.

தான் அடைந்துள்ள ஆரோக்கியமான ஆன்மீக நிலைக்கு தனது முப்பதாண்டு கால கல்வத்தே காரணமென ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னார்கள் ஜுனைதுல் பக்தாதி (றஹ்) அவர்கள்.

நபியவர்கள் கடைபிடித்து வந்த இஃதிகாபுடைய அடிப்படை நோக்கம் தனித்திருந்து அமல்களில் ஈடுபடுவதாகும்.
واذكر اسم ربك وتبتل إليه تبتيلا
"மனிதத் தொடர்பை துண்டித்து அல்லாஹ்வின் பக்கம் திரும்பி அவனை திக்ர் செய்யுமாறு" நபி(ஸல்) அவர்களைப் பார்த்து பணிக்கின்றது இந்த அல்குர்ஆன் வசனம்.

மறுமையில் -மஹ்ஷரில்- நிழலே இல்லாத அந்த நாளில் அர்ஷின் கீழ் நிழல் பெறும் ஏழு கூட்டத்தாரில் தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் வடித்தவரும் இருப்பார் என்ற நபிகளாரின் சுப செய்தியும் கல்வாவின் முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துச் சொல்கின்றது.

நிலையான கல்வா வரவேற்கத்தக்கதல்ல;
தேவைக்கேற்ப அவ்வப்போது கல்வத்தை நாடுவதே பொருத்தமானதாகும்.

وبالله التوفيق والهداية 

Afra ansar 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.