" மிஹிந்து நிவஹன" வீடமைப்புத் திட்டத்தின் ஆரம்ப விழா மாத்தறை மாவட்டத்தில் ஆரம்பம்

எரிபொருள் விலை சம்பந்தமாக அரசாங்கத்திற்கு எந்தவிதப் பாதிப்பு ஏற்பட்டாலும் கூட அந்தப் பாதிப்பை மக்கள் மீது அரசாங்கம் திணிக்காது என்றும் அதை அரசியல்வாதிகள்  தங்களுடைய பிரச்சினையாக ஏற்றுக் கொண்டு மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷ  எங்களைக் கேட்டுக் கொண்டதாகவும்  வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்களுடைய வீட்டில் இடம்பெற்ற யுவதியின் கொலை சம்பந்தமாக தற்போது பொலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  இது தொடர்பாக விசாரணை செய்து குற்றவாளிகளைத் தராதரம் பார்க்காது தண்டிக்குமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளதோடு இந்த சம்பவத்தினால் முழு நாட்டிற்கும் மிகப் பெரிய அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

புத்த சாசனத்திற்கு தங்கள் குழந்தைகளை அர்ப்பணித்த பெற்றோருக்காக நிர்மாணிக்கப்படும்  "மிஹிந்து நிவஹன" திட்டத்தின் ஆரம்ப விழா இன்று (24) மாத்தறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட போது அமைச்சர் கலந்து கொண்டு மேற்கண்டவாறு உரையாற்றினார். இந்த நிகழ்வு மின் சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் இடம்பெற்றது.

"மிஹிந்து நிவஹன" திட்டத்தின் ஆரம்ப விழா  சங்கைக்குரிய கங்கொடகம சுமுதின தேரரின் பெற்றோருக்காக மாத்தறை, ஹக்மன, நாரந்த பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் வீட்டுத்  திட்டத்திற்கான அடிக்கல்லும் இன்று நாட்டப்பட்டது.

இந்தத் திட்டத்திற்காக மாத்தறை மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 63 பெளத்த துறவிகளின் பெற்றோர்களுக்கு வீடமைப்புக் கொடுப்பனவாக காசோலைகளும் இங்கு வழங்கப்பட்டன.

இதன் முதல் கட்டத்தின் கீழ் நாடு பூராகவும் 2000 வீடுகள் நிர்மாணிக்கப்படுவதோடு இதற்காக ரூ 120 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. வீடமைப்புக்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசனைக்கமைய, பெளத்த விவகாரம் தொடர்பான அமைச்சுடன் இணைந்து வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால்   "மிஹிந்து நிவஹன" திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.

இந்த நிகழ்வில் அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால்களை வளர்த்தல், கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி, பல நாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர்  கஞ்சன விஜேசேகர மற்றும் பிரதேச அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


முனீரா அபூபக்கர்

24.07.2021








கருத்துரையிடுக

Blogger இயக்குவது.