ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சட்டவிரோத கைதுகளை கண்டித்தும் கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராக நேற்று (12) ஆர்ப்பாட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது. 

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.

இதன் போது அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியிலும் ஈடுப்பட்டனர்.

நாட்டின் கல்விக்கட்டமைப்பை சீர்குலைக்கக்கூடிய ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டத்தை பயன்படுத்தி முடக்குகின்றது.

இதனை ஓரு போதும் அனுமதிக்க இயலாது. நாட்டில் இலவசக்கல்வியின் ஊடாகக் கல்வியைப் பெற்றுப் பயனடைந்த, அதேபோன்று இலவசக்கல்வியைப் பாதுகாக்க வேண்டும் என்று கருதும் அனைவரும் இன்று வீதியில் இறங்கி போராடுகின்றோம்.

இன்றுடன் எமது போராட்டம் முடிவடைந்து விடாது. சட்ட விரோத அடக்குமுறைகள் மற்றும் கைதுகள் உட்பட கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும்.

மேலும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் போர்வையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளையும் உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்துவதாக இதன் போது தெரிவித்தனர்.

இதேவேளை, ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்திற்கு எதிராகக் கடந்த வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நன்றி - வீரகேசரி 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.